புதன், 7 டிசம்பர், 2016

கூட்டுறவு வங்கி காசோலையில் இந்தி



பாரத மிகுமின் ஊழியர் கூட்டுறவு வங்கி என்பது தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகளின்படி பதிவுசெய்யப்பட்ட வங்கியாகும். அதற்கு தமிழ்நாடு அரசின் சட்டதிட்டங்கள்தான் பொருந்தும். தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கக் கூடிய மாநிலமாகும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலேயே அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். இந்திக்கு எந்த இடத்திலும் இடமில்லை என்பது 1967லிலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு மரபாகும்.
அப்படிப்பட்ட வங்கியில் அண்மைக்காலத்தில் ஒரு அபாயம் புகுந்துள்ளது. வங்கியின் காசோலைகள் முன்பெல்லாம் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தது. சேமிப்புக்கணக்கிலிருந்து பணம் எடுக்கும் Teller chequeதமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்.

ஆனால் வங்கி தற்போது வழங்கியுள்ள காசோலையில் இந்தி வந்து புகுந்துள்ளது. இது தமிழினத் தொழிலாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது யாருடைய முடிவு? வங்கியின் எந்த ஒரு கொள்கை முடிவும் வங்கி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பொதுக்குழுவில் முடிவுசெய்யப்;பட்டு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறையின் ஒப்புதல் பெற்றுத்தான் நடைமுறைக்கு வரவேண்டும். அப்படியிருக்க இந்த இந்தித் திணிப்பு யாருடைய ஒப்புதலோடு நடைமுறைப்படுத்தப்படுகிறது? அந்த அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியது யார்? தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு இது தெரியுமா? தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு இது தெரியுமா? தமிழக முதலமைச்சருக்கு இது தெரியுமா?

ஏற்கனவே, பெல் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்களில் வடமாநிலத்தார் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டிருப்பதால் தமிழர்களிடத்தில் மிகுந்த கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த இந்திக்காரன்கள் வங்கியில் உறுப்பினராகின்றார்கள் என்பதற்காக இந்தியும் புகுத்தப்படுகிறதா?

இந்திக்காரனுக்காக நாம் மாறிக்கொள்ள வேண்டுமா? இந்திக்காரன் தமிழ் கற்றுக்கொள்ள மாட்டான். அவனிடம் பேச தமிழன் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா? வட இந்திய நிறுவனங்களில் நம் தமிழர்கள் வேலைக்குச் சென்றால் இந்தி தெரியாவிட்டால் அவனுக்கு அங்கே வேலையில்லை. தப்பித்தவறி அங்கே வேலைக்குச் சேர்ந்தாலும் நம் தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசினால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் பதில் சொல்லமாட்டான். இந்தியில்தான் பேசுவான். ஆனால் நம் மாநிலத்துக்கு வருபவனுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் வேலை கிடைக்கிறது. இங்கே வந்தபிறகும் அவன் தமிழ் கற்றுக்கொள்ள மாட்டானாம். அவனிடம் பேசுவதற்காக நம் ஆட்கள் இந்தி கற்றுக் கொள்கிறார்கள். அவன் வங்கியைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக காசோலையும் இந்தியில் வழங்கப்படுகிறதா?

அவன் ஆங்கிலம் தெரியும் என்று சொல்லித்தானே வேலைக்கு வருகிறான்? அவனால் ஆங்கிலத்தில் வங்கிக் கணக்குகளைக் கையாள முடியாதா? அவன் மாறமாட்டான். அவனுக்காக நாம் மாறிக்கொள்வதா? நம் தமிழன் வடநாட்டுக்குச் சென்றால் அங்குள்ள வங்கிக் காசோலையில் தமிழ் இடம் பெறுமா?
எனவே இத்தகைய போக்கு உடனே மாற்றப்பட வேண்டும். பெல் ஊழியர் கூட்டுறவு வங்கியில் இந்தியில் வழங்கப்பட்டுள்ள காசோலை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு பழையபடி ஆங்கிலத்திலும் தமிழிலும் கொண்டுவரப்படவேண்டும். இல்லையேல் திராவிடர் தொழிலாளர் கழகம் தமிழர்தலைவர் வீரமணி அவர்களின் அனுமதிபெற்று ஒத்த கருத்துள்ள தமிழ் உணர்வாளர்களை இணைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்பதை வங்கி நிர்வாகத்துக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழினத் தொழிலாளர்களே! வங்கி நிர்வாகத்தின் தான்தோன்றித்தனமான இந்தித் திணிப்பை முறியடிக்க அணிதிரளுங்கள். போராடத் தயாராக உள்ள தொழிலாளர்கள் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு உங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ளுங்கள். தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண் : 9442148697










நமது பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் வழங்கப்பட்ட காசோலையில் (Teller cheque) ல் இந்தி இடம் பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டி அது நீக்கப்பட வேண்டும் என்றும் இல்லையேல் ஒத்த கருத்துள்ள தமிழின உணர்வாளர்களை இணைத்துக்கொண்டு திராவிடர் தொழிலாளர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று துண்டறிக்கை வெளியிட்N;டாம்.

அதனை ஆதரித்தும் ஆர்ப்பாட்டத்தில் தாங்களும் கலந்துகொள்வதாகவும் ஏராளமான தொழிலாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டும் குறுஞ்செய்தி அனுப்பியும் நேரிலும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்தார்கள். இதனை வலியுறுத்தி திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக வரும் சனிக்கிழமை வாயிற்கூட்டம் நடத்தத் திட்டமி;டப்பட்டது
.
இந்நிலையி;ல் வங்கி நிர்வாகம் நம்மிடம் இந்தியில் வெளியிட்ட காசோலை திரும்பப் பெறப்பட உள்ளதாகவும் ஏற்கனவே உள்ள பழைய மாதிரியிலேயே காசோலை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தமிழ் உணர்வாளர் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. எனவேää நாம் நடத்துவதாக அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்குத் தேவையில்லாதவகையில் நம்முடைய கோரிக்கை நிறைவேறியுள்ளதால் அந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்படுகிறது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பழைய காசோலையை வழங்குவதாக அறிவித்த கூட்டுறவு வங்கி நிர்வாகத்துக்கும் தமிழ் உணர்வுடன் ஆதரவளித்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மிக்க நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது திராவிடர் தொழிலாளர் கழகம் இவ்வாண்டில் பதித்த இரண்டாவது முத்திரையாகும். ஏற்கனவே நமது ஊரகத்தில் குடியிருக்கும் தொழிலாளர் பற்றிய விவரக்குறிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் அவர்களது பெயருக்குப்பின்னால் அவர்களுடைய ஜாதி குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஊரகத்தில் குடியிருப்போரிடையே தேவையில்லாத ஜாதிய உணர்வுகளையும் தாழ்வு மனப்பான்மையையும் வளர்க்கும் என்பதால் அதனை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதனை மனிதவளமேலாண்மை நிர்வாகம் ஏற்றுக்கொண்டு உடனடியாக நீக்கியது.

இதுபோன்ற உணர்வுபூர்வமான, கொள்கைரீதியான காரியங்களை திராவிடர் தொழிலாளர் தொழிலாளர் கழகத்தால் மட்டுமே செய்ய முடியும். மற்றவர்கள் செய்யமுடியாத, செய்யத் தயங்குகின்றää செய்யக் கூசுகின்ற, செய்வதற்கு அஞ்சுகின்ற காரியங்களை செய்வதற்காகத் துவக்கப்பட்டதுதான் திராவிடர் தொழிலாளர் கழகம். திராவிடர் தொழிலாளர் கழகம் கடந்த காலங்களில் இதுபோல் ஏராளமான முத்திரைகளைப் பதித்துள்ளது. இதுபோன்ற காரியங்களைச் செய்வதற்கு அனைத்துத் தொழிலாளர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சனிக்கிழமை நடத்துவதாக இருந்த கண்டனக்கூட்டம் நன்றி அறிவிப்புக் கூட்டமாகவும் தொழிலாளர்களுக்கு உள்ள தற்போதைய பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட உள்ளது. அனைத்துத் தொழிலாளர்களும் இதில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக