வெள்ளி, 9 டிசம்பர், 2016

இந்துத் தயாரிப்புக்களையே வாங்கு. இந்துக்கடையிலேயே வாங்கு அப்படின்னு சொன்ன கோஷமெல்லாம் மலையேறிப்போச்சு.



கையில சிட்டிசன் வாட்ச். பாக்கெட்டில சைனா செல். ஓட்டுவது ஹோண்டா பைக்.

பைக்கில அரபுநாட்டிலிருந்து வந்த பெட்ரோல். வேலை செய்வது ஜெர்மன் இயந்திரம். ஆனா இங்கே பேசுவது சுதேசியம். இந்துத் தயாரிப்புக்களையே வாங்கு. இந்துக்கடையிலேயே வாங்கு அப்படின்னு சொன்ன கோஷமெல்லாம் மலையேறிப்போச்சு.

இப்ப வெளிநாட்டுக்காரன் தயவில்லாம இந்தியாவே இல்லைங்கறது மாதிரி மோடி 365 நாளில் 300 நாள் வெளிநாட்டிலதான். 500, 1000 ரூபா நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சப்பத்தான் பிரதமர் நம்ம நாட்டிலதான் இருக்கிறாரு என்பது பலபேருக்குத் தெரிஞ்சது. ஆனா இப்ப பிரதமர் நம்ம நாட்டில இல்லேங்கறது பலபேருக்குத் தெரியாது.

அப்படி சுதேசியம் பேசிய அம்பி ஒருத்தர் நம்ம கம்பெனியில இருந்தார். அவரு நான் சுதேசித் தயாரிப்புக்களத்தான் பயன்படுத்துவேன்னு ஒத்தைக் காலில நின்னாரு.

கம்பெனி சீருடையக் கூடப் போட மாட்டேன். ஏன்னா கம்பெனி சீருடை குழாய்ப் பேண்ட் மாட்டுறது. நான் அந்தக் குழாயையெல்லாம் போட மாட்டேன்னுட்டு நாலு முழ வேட்டிலதான் வருவாரு. மேல சட்டைங்கிற பேர்ல ஒரு துணிய மாட்டிக்குவாரு. வீட்டிலயிருந்து வர்றப்பவும் அதுதான். வேலை செய்யறப்பவும் அதுதான். அந்தச் சட்டைக்கு வெளிய தெரியற மாதிரி நூலு. சட்டையில உள்ள நூலு இல்ல. முதுகில உள்ள முப்புரிநூலு.

அவருக்கிட்டப் பேசவே அதிகாரிங்க பயப்படுவாங்களாம். ஏன்னா அந்த அதிகாரிக்கு இருக்கிற பவரவிட இவரு முதுகில தொங்குற முப்புரிநூலுக்கு பவர் ஜாஸ்தி.

இப்படி ஓடிக்கிட்டிருக்கிறச்சே ஒருநாளு நம்ம எம்ப்ளாயி ஒருத்தரு ஊருக்குப் போயிட்டு வீட்டுக்குப் போக நேரமில்லாம அப்படியே கம்பெனிக்கு வந்திட்டாரு. அவரு ஒரு இஸ்லாமியரு. அவங்க முறைப்படி கைலிதான் கட்டுவாரு. ஆனா கம்பெனி;க்கு வர்றப்ப பேண்ட் போட்டுக்கிட்டு வருவாரு. அன்னைக்கு ஊருக்குப் போயிட்டு அப்படியே வந்திட்டதால கைலியோட வந்திட்டாரு.

ஆனா கடமை தவறாத நம்ம பாதுகாவலர் அவரை கேட்டுக்குள்ள நுழைய விடல. யூனிஃபார்ம் இல்லாம விட மாட்டேன்னு சொல்றாரு. நம்ம எம்ப்ளாயி “அய்யா நான் இந்த மாதிரி ஊருக்குப் போயிட்டு நேரா வர்றேன். அதனால கைலியோட வந்திட்டேன். உள்ள போயி பாதுகாப்புச் சீருடை போட்டுக்கிட்டுத்தான் வேலை பாப்பேன். அதனால என்ன உள்ள அனுமதியுங்க”ன்னு கெஞ்சுறாரு. ஆனா பொறுப்புமிக்க நம்ம பாதுகாவல்துறை அதை அனுமதிக்கல. அதனால அவரு வீட்டுக்குப் போயிட்டாரு.

இதை யாரும் கண்டுக்கல. நமக்குச் செய்தி தெரிஞ்ச உடனே மேல சொன்ன நம்ம அம்பி இப்படி இப்படி வர்றாரே. ஒருநா ரெண்டுநா இல்ல. வருஷம்பூரா வர்றாரே. அப்படி வர்றதுமில்லாம அப்படி அப்படியே வேலையும் பாக்கிறாரே. அவருக்கு ஒரு சட்டம். இவருக்கு ஒரு சட்டமான்னு கேள்வி கேட்டு ஒரே ஒரு துண்டு நோட்டீஸ்தான் வெளியிட்டோம்.

செக்யூரிட்டிக்கு இருக்கிற பவரவிட அவரு சட்டைக்குள்ள இருக்கிற நூலுக்கு பவர் ஜாஸ்தியா? அந்த நூலுக்கு செக்யூரிட்டி துறை பயப்படுதான்னு கேள்வி கேட்டோம்.

அப்பத்தான் அவங்களுக்கே ஓஹோ இப்படி ஒரு சங்கதி இருக்குதாங்கிற விசயம் ஒறைச்சது. அடுத்தநாளு நம்ம அம்பி வந்தாரு. அதே நாலுமுழம். நம்ம பாதுகாவல்துறை ரொம்ப கண்டிசனாச் சொல்லிருச்சு. இப்படி தும்பைப்பூவு வேட்டி கட்டி தொடைதெரிய ஏத்திக் கட்டிட்டு வந்தீங்கன்னா உள்ள விடமாட்டோம்னு.

அதுக்குப் பொறவு என்ன? சுதேசியாவது வெங்காயமாவது. நாலுமுழ வேட்டியத் தூக்கிப் போட்டாச்சு. சுதேசிவிரதத்தக் கலைச்சாச்சு. பேண்ட் என்கிற பெயரில ஒரு குழாய மாட்டிக்கிட்டு விசுக் விசுக்கினு நடந்துக்கிட்டு கடைசிகாலத்தயும் கழிச்சுட்டுப் போயிட்டாரு அம்பி. அந்தக் கைலி கட்டிட்டு வந்த பாய் இந்த மாசம் (nov 2016) ரிடயராகிறாரு. இதெல்லாம் பழைய கதைங்க தம்பிகளா.

இப்பவும் யாராச்சும் சுதேசி கிதேசின்னு பேசிக்கிட்டு யாராச்சும் உங்ககிட்ட வருவாய்ங்க. இதப்பத்திக் கேளுங்க. அப்புறம் பாருங்க!... சரியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக