திங்கள், 19 டிசம்பர், 2016

தை முதல் நாளைத் தமிழனின் புத்தாண்டாக்கி நம் தன்மானத்தை மீட்டெடுப்போம்!




சித்திரை 1அய் அடிப்படையாகக் கொண்ட ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழில் இல்லை. அதற்குச் சொல்லப்படும் கதையும் மிகமிக இழிவானது. தமிழகத்தை அய்ந்து முறை ஆட்சிசெய்த டாக்டர் கலைஞர் தமிழர்களின் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் ஒத்துவராத அந்த சித்திரை 1அய் மாற்றி, மறைமலையடிகள், திரு.வி.க, நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் 1920ல் கூடி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி தை முதல்நாள்தான்  தமிழர்க்குப் புத்தாண்டு என்று அறிவித்தார்கள்.

உடனே இந்து முன்னணி ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். உடனே ஜெயலலிதா தலைமையிலான அக்கிரஹார திமுக அரசாங்கம் இதனை மாற்றிவிட்டது.  பார்ப்பனர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் இருக்கிறது. இது என்னவென்றே தெரியாத தமிழர்களும் இதனை எதிர்த்தார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கத்தை மாற்றலாமா? என்பதுதான்.

காலம் காலமாக இருக்கிறது என்பதற்காக சம்பிரதாயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாகத்தான் இருப்போம். இந்த சம்பிரதாயங்களை மாற்றக் கூடாது என்று இன்று மட்டும் இவர்கள் சொல்லவில்லை. ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பிஎம்எஸ் கும்பல்களின் குருநாதர் பாலகங்காதர திலகரும் சொன்னவர்தான்.
பிரிட்டிஷ்;காரன் காலத்தில் 1891ல் சம்மத வயதுச்சட்டம் என்ற ஒன்றை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டு வந்தார்கள்;.

 இந்த சட்டம் என்ன சொன்னது என்றால் மனைவிக்கு 12 வயது ஆனபிறகுதான் கணவன் அவளோடு உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றது. இதற்கு முன்பு இந்த வயது  பத்தாக இருந்தது. அப்படியென்றால் பத்து வயதுக்கு முன்பே திருமணம் நடந்தது என்பது மட்டுமல்லாது அப்போதே உடலுறவு கொண்ட காட்டுமிராண்டித்தனமும் நடந்தது நிச்சயமாகிறது.

என்ன கொடும சார் இது! விலங்குகள் பறவைகள்கூட குறிப்பிட்ட வயது வந்தபிறகுதான் அதனதன் இணையுடன் ஒன்று சேரும். ஆனால் அர்த்தமுள்ள இந்துமதத்தில் வயதுக்கு வருவதற்கு முன்பே, அதாவது ஒரு குழந்தையை வயது வந்த தடியன் உடலுறவு கொள்ளலாம் என்ற சட்டம் இருந்ததென்றால் இது என்ன நாடு?

இதனைக் காப்பாற்றுகின்ற மதம் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானது?

இந்தச் சட்டத்தை எதிர்த்து வீராவேசமாக வெளிவந்தவர்தான்  லோகமான்ய பாலகங்காதர திலகர்.  பத்து வயதுக் குழந்தையை அவளது கணவன் என்ற முரடன் உடலுறவு கொண்டு கொன்று விட்டான். இத்தகைய கொடுஞ்செயலைப் பார்த்தே பிரிட்டிஷ் அரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்தது. திலகர் அந்தக் கொடியவனின் செயலை ஆதரித்ததோடு பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்.

இது எங்களுடைய மத உரிமை. எங்கள் மதத்தில் காலம்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்பழக்கத்தை மாற்ற அரசு சட்டம் இயற்றக்கூடாது என்று வாதிட்டார் திலகர்.

  அந்த வாதத்தை ஏற்று அச்சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்திருந்தால் நாம் எத்தகைய காட்டுமிராண்டித்தனமான நாட்டில் வாழ்ந்திருப்போம் என்பதை எண்ணிப் பாருங்கள். அந்தத் திலகரின் வழி வந்த இந்து முன்னணி ஆர்எஸ்எஸ் கும்பலும் அவர்களின் சூழ்ச்சியை என்ன ஏதென்று அறியாத அப்பாவித் தமிழர்களும்தான் சித்திரை 1அய் மாற்றுவது கூடாது என்று வாதிடுகிறார்கள்
.
இது தமிழனின் மானத்துக்கும் அறிவுக்கும் விடப்பட்ட சவால். அதனை எதிர்த்து முறியடிப்பதில்தான் தமிழனின் தன்மானம் காப்பாற்றப்படும். எனவே, இந்துமத பிற்போக்கு வாதிகளின் பித்தலாட்டத்தை முறியடிப்போம். தை முதல் நாளைத் தமிழனின் புத்தாண்டாக்கி நம் தன்மானத்தை மீட்டெடுப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக