வெள்ளி, 2 டிசம்பர், 2016

பாபர் மசூதியை இடித்ததன் விளைவாகத்தான் நாட்டில் இந்த அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது.

                ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாந் தேதி வந்துவிட்டால் நாட்டில் யாருமே நிம்மதியாக இருக்க முடியாது. நிம்மதியாகப் பேருந்தில் இரயிலில் விமானத்தில் இருசக்கர வாகனத்தில் போக முடியாது. வீட்டை விட்டு வெளியில் வந்தால் கையில் ஒரு பை கூட எடுத்துச்செல்ல முடியாது.

அந்த அளவிற்கு அந்த நாளை ஒரு பயங்கரவாத நாளாக சித்தரித்து விட்டார்கள். இந்த நாடு அமைதியாக இருக்கக் கூடாது நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்று கருதிய ஆர்எஸ்எஸ் சங்பரிவார் பிஜேபி பிஎம்எஸ் கும்பல் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளான டிசம்பர் ஆறாந்தேதியைத் தேர்ந்தெடுத்து நானூறு ஆண்டு பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்ததன் விளைவாகத்தான் நாட்டில் இந்த அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது.

அந்தக் காரியத்தை மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் கண்டிக்கின்ற சூழ்நிலையில் அந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதியை இடித்த தினத்தை வரவேற்று துண்டறிக்கை ஒட்டி பெல் நிறுவனத்திலேயும் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று சதி நடந்துகொண்டிருக்கிறது. அடுத்து காசியும் மதுராவும் இடிக்கப்பட வேண்டும் என்றும் நாட்டிலுள்ள அனைத்து மசூதிகளையும் இடித்து அங்கே கோயில் கட்ட வேண்டும் என்ற பொருளிலும் ஒவ்வொரு ஆண்டும் துண்டறிக்கை ஒட்டப்பட்டு வருகிறது. இது தொழிலாளர் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்கி வருகிறது.

இதனைச் செய்பவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்தான் என்பது வெள்ளிடைமலை. அவர்கள் ஒழிந்துகொண்டிருப்பது பிஎம்எஸ்ஸில். இப்படிப்பட்ட மதவெறியைத் தூண்டி அதன்மூலம் இந்த நாட்டை இந்து நாடாக்க வேண்டும். அதன்மூலம் பார்ப்பனர்கள்தான் அனைத்து உரிமையும் பெற்றவர்கள்: அவர்கள் ஆண்டவனுக்கும் மேலே@ அவர்களுக்குக் கட்டுப்பட்டே அரசாங்கம் உள்பட அனைத்தும் இயங்கவேண்டும் என்பதற்காக அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்தான் காந்தியைக் கொன்றவர்கள். அவர் இறந்த ஜனவரி 30அய் இப்படி வெளிப்படையாகக் கொண்டாட மாட்டார்கள். காந்தியைக் கொன்ற கோட்ஷே ஆர்எஸ்எஸ்காரன் என்றால் இவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் கோட்ஷே ஆர்எஸ்எஸ் அல்ல என்று சொல்பவர்கள் கோழைகள் என்று கோட்ஷேயின் தம்பி கோபால் கோட்ஷே கூறுவார். அப்படிப்பட்ட கோழைகள்தான் இதுமாதிரி பெயர் போடாமல் துண்டறிக்கை ஒட்டி மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள்.

அவர்கள் பெயர் போடாமல் ஒட்டினாலும் ஒட்டியது பிஎம்எஸ்ஸில் உள்ளவர்கள்தான் என்பது நிர்வாகத்திற்கு நன்கு தெரியும். அவர்கள் பாபர் மசூதியை இடிக்க பெல் நிறுவனத்திலிருந்து சென்று கலந்துகொண்டவர்கள் என்பதும் நிர்வாகத்துக்குத் தெரியும்.

நிர்வாகம் தனக்குத் தெரியாது என்று கூறுமேயானால் ஒட்டியவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்தான். அவர்கள் பிஎம்எஸ்ஸில்தான் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

இந்த நிலையை முறியடிக்க ஒன்று அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நாட்டில் மூன்றுமுறை தடைசெய்யப்பட்டு ஆர்எஸ்எஸ் ஸின் இலட்சியங்களை தொழிலாளர்களிடத்தில் பரப்பி ஆர்எஸ்எஸ் அமைக்க இருக்கும் இந்து ராஜ்யத்துக்கு அடித்தளம் அமைக்கும் பணியில் செயல்பட்டுவரும் பிஎம்எஸ் ஸைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல் இங்கே ஜாதிக்கலவரமும் மதக்கலவரமும் ஏற்பட்டு தொழிலமைதி சீர்குலையும் என்று எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இவண் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக