புதன், 28 டிசம்பர், 2016

தொழிலாளிகளே யாரும் இல்லை என்கிறபோது இவர்கள் தொழிற்சங்கம் யாருக்கு வைத்திருக்கிறார்கள்?


“மேதினம் ஒரு வர்க்கப் போராட்டம், மற்றும் தேசிய சீர்குலைவின் சின்னம்.

 பல தரப்பட்ட வருமான அளவுகள் நாட்டில் இருப்பதை நாம் நன்கு அறிவோம். அதில் உள்ள மன்னிக்க முடியாத ஏற்றத் தாழ்வுகளை களைந்தெறியவும் நாம் உறுதி பூண்டுள்ளோம்.

ஆனால் நம்நாடு இருவேறு எதிரிடையான வர்க்கங்களாகப் பிரிந்தது என்று எண்ணுவது தவறாகும். இது முதலாளிகள் ஒரு பக்கமும் தொழிலாளிள் மற்றொரு பக்கமுமான போராட்டமா?
யார் முதலாளி? ஒரு தொழிலகத்தில் அந்தத் தொழிலகத்தின் அதிபரோடு தொழிலாளி உறவு கொண்டுள்ள ஒருவன் தன் வீட்டு வேலைக்காரனைப் பொறுத்த மட்டில் முதலாளியாகிறான்.

நமது நாட்டில் நாவிதர்கள், வண்ணார்கள், கொல்லர்களி ஆகியோர் யாருக்குத் தொழிலாளர்கள்? அவர்களுடைய முதலாளி யார்? அவர்கள் எந்த ஒரு தனி நபருக்கும் வேலைக்காரர்கள் அல்ல. இன்றைய தொழில்துறை வார்த்தைகளின்படி அவர்கள் தங்களுக்குத் தாங்களே முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள்.
ஆகவே, இரண்டு வர்க்கங்கள் என்ற எண்ணம் ஒரு அற்புதமான மாயை. இது நிச்சயம் தேசிய சீர்குரைவிற்கு இட்டுச் செல்லக்கூடிய சிந்தனை. இது நம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றம் சுய கவுரவம் ஆகியவற்றுக்குப் பெரும் குந்தகமாகவே அமையும்”

மேலே உள்ள வாசகங்கள் ஆர்எஸ்எஸ் சின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் வெளியிட்ட சங்க மடலில் (ஆகஸ்ட் செப்டம்பர் 1987) உள்ள வாசகங்கள்.

இதன்படி நம் தொழிலகத்தில் பாடுபடுகின்ற யாரும் தொழிலாளிகள் அல்லர். தொழிலாளிகளே யாரும் இல்லை என்கிறபோது இவர்கள் தொழிற்சங்கம் யாருக்கு வைத்திருக்கிறார்கள்? இது யாரை ஏமாற்ற?
பாரதீய மஸ்தூர் சங்கமானது பாரதீய கலாச்சாரத்தை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்டதாகும்… கலை கைத்தொழில் மற்றும் தொழிலகங்களை உருவாக்கியவர் விஸ்வகர்மா…

என்று சொல்லும் இவர்;கள் நாவிதர்கள், வண்ணார்கள், கொல்லர்கள் யாருக்குத் தொழிலாளர்கள்? அவர்கள் தங்களுக்குத் தாங்களே முதலாளிகள், தங்களுக்குத் தாங்களே தொழிலாளர்கள் என்றும் கூறுகிறார்கள்.

இவர்கள் சொல்வது உண்மையா?

இவர்களது பாரதீய கலாச்சாரம் என்பது ஜாதியக் கலாச்சாரம் ஆகும். இவர்களே முதலாளிகள் என்கிறபோது யாராவது ஒரு நாவிதரிடம் வந்து முதலாளி எனக்கு சவரம் செய்து விடுங்கள் என்று கேட்பாரா?

 வண்ணார்களிடம் முதலாளி எனது துணியைத் துவைத்துக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்களா?

கொல்லர்களிடம் அதாவது விஸ்வகர்மாத் தொழிலாளியிடம் முதலாளி எனக்கு வீடு கட்டித் தாருங்கள் என்று கெஞ்சியிருக்கிறார்களா?

அப்படிக் கேட்டு அவர்கள் கேட்கும் கூலியைக் கொடுத்திருக்கிறார்களா?

இது எவ்வளவு பெரிய பித்தலாட்;டமான வார்த்தை ஜாலம்?
இவர்கள் கூறும் இந்த பாரதீய கலாச்சாரத்தில் தொழிலாளிகள் என்பவர்களது நிலை என்னவாக இருந்தது தெரியுமா?

“இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் ஊருக்கு வெளியே மரத்தடி தோப்பு மயானத்திற்கு சமீபமாயுள்ள மலைப் பூந்தோட்டம் இவைகளில் அனைவருக்கும் இவர்கள் இன்ன தொழிலாளி என்று தெரியும்படி தன் தொழிலைச் செய்துகொண்டு வாசஞ் செய்ய வேண்டும்”

“தனக்கு வேலை செய்கிற சூத்திரன் சக்தியையும் அவன் செய்யும் பணிவிடையையும் அவன் காப்பாற்ற வேண்டிய குடும்பத்தையும் யோசித்து ஜீவனத்துக்குத் தக்கபடி கூலியேற்படுத்த வேண்டும்”

என்று மனுதர்மம் அத்தியாயம் 10;ல் சொல்லப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட தொழிலாளர்களை பிஎம்எஸ் என்ன சொல்கிறது? அவர்களே முதலாளிகள். அவர்களே தொழிலாளிகள் என்கிறது.
இதுதான் பாரதீய கலாச்சாரத்தில் தொழிலாளிகளுடைய நிலை. இப்படிப்பட்ட தொழிலாளர் சமுதாயத்தை உருவாக்குவதுதான் பிஎம்எஸ் சின் கொள்கை என்றால் உண்மையான தொழிலாளர் நலன் நாடுவோர் அதனை முறியடிப்பதுதானே சரியான வழியாக இருக்க முடியும்

எனவே, வருணபேதமற்ற வர்க்கபேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதே உண்மையான தொழிற்சங்கவாதிகளின் கடமையாக இருக்க வேண்டும். அத்தகையை சமத்துவ சமுதாயம் அமைக்க அனைவரும் பாடுபடுவோம். மீண்டும் குலதர்மத்தைக் கொண்டுவரத் துடிக்கும் மனுதர்மவாதிகளை அடையாளம் கண்டு புறந்தள்ளுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக