வெள்ளி, 9 டிசம்பர், 2016

அகில இந்திய நுழைவுத்தேர்வு



1984 முதல் நுழைவுத் தேர்வு நுழைந்து பிள்ளைகளையும் பெற்றோர்களையும் பாடாய்ப் படுத்தி வந்தது. பிளஸ் டூ வில் அதிக மதிப்பெண் எடுத்தாலும் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க இயலாவிட்டால் அந்த பிள்ளை தகுதி இல்லாத பிள்ளை என்று ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்.

பதினொன்று பனிரெண்டாம் வகுப்பில் கடினமாக உழைத்து அதிக மதிப்பெண் எடுத்தாலும் அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது. அதனால் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பிள்ளைகளும் பெற்றோரும் பெரும்பாடு பட வேண்டியாகிவிட்டது.

நல்ல வசதி உள்ளவர்கள் நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் நல்ல பயிற்சி மய்யத்தில் சேர்ந்து அதிக மதிப்பெண் எடுத்தனர். பிளஸ் டூவில் குறைந்த மதிப்பெண் எடுத்த பிள்ளைகூட நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் இடம் பிடித்தனர். பயிற்சி மய்யம் என்ற பெயரில் பலபேர் கல்விக்கட்டணமாக பல லட்சம் வசூலித்து பல கோடீஸ்வரர்கள் உருவாயினர்.

ஆனால் கிராமப்புற ஏழை எளிய பாட்டாளி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவன் வீட்டுப் பிள்ளைகளுக்கு அந்த வசதி வாய்ப்புக்கள் இல்லாததால் எளிதாக மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைக்காமல் திண்டாடி வந்தனர்.

கடந்த 2007ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு நம் தமிழ்நாடடுப் பிள்ளைகள் பனிரெண்டாம் வகுப்பு முடித்த உடன் எந்த வித மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் மருத்துவக் கல்லூரியிலோ பொறியியல் கல்லூரியிலோ சேர்ந்து நிம்மதியாகப் படித்து வந்தனர். அதிலும் குறிப்பாக கிராமப்புறää தாழ்;த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகள் எந்த வித மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து மிக எளிதாக மருத்துவமும் பொறியியலும் படிக்க முடிந்தது.

கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்;க்கையில் பொதுப் போட்டியிலேயே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் சிறப்பாக வெற்றி பெற்றனர்.

பொதுப் போட்டியில் உள்ள மொத்த இடங்கள் 884. இதில் பிற்படுத்தப்பட்டோர் 599 பேர் தேர்வானார்கள்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159 பேர் இடம் பிடித்தனர். தாழ்த்தப்பட்டோர் 23 பேரும் அருந்ததியினத்தைச் சேர்ந்தவர் இருவரும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவரும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் 32 பேரும் தேர்வானார்கள். தகுதி திறமை தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை பாராட்டி வந்த முன்னேறிய ஜாதியினர் 68பேர் மட்டுமே. பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்;க்கப்பட்டதால் இந்த வாய்ப்பு கிடைத்தது.

இந்த சமூகநீதியின் விளைச்சலை சகித்துக் கொள்ள முடியாத ஆதிக்கக் கூட்டத்தால் அதனை ஒழித்துக்கட்டும் முயற்சியாக இப்பொழுது அகில இந்திய நுழைவுத்தேர்வு திணிக்கப்பட இருக்கிறது. 2016ம் ஆண்டே இது திணிக்கப்பட்டாலும் தமிழக அரசும் சமூகநீதி ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆண்டு அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் 2017ம் ஆண்டு அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம்தான் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி சேர்க்கை நடைபெற இருக்கிறது.

இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். தமிழக அரசும் சமூகநீதி ஆர்வலர்களும் அதனைத் தடுத்த நிறுத்த முன்வர வேண்டும். தொழிலாளர்களும் தங்களுடைய ஆதரவினை இதற்கு அளிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக