புதன், 7 டிசம்பர், 2016

இந்துத்துவா காலண்டரும் திதொகவும்

பாரத மிகுமின் நிறுவனம் என்கிற பொதுத்துறை நிறுவனத்தைப் பார்ப்பனர்கள் தங்கள் சொந்த நிறுவனம் போலவே கருதி பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தனர். தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  ஒருமுறை இந்நிறுவனத்தைப் பற்றிச் சொல்லும்போது BHEL என்பது BHARAT HEAVY ELECTRICALS LTDஅல்ல BRAHMIN HEIRARCHY EVERLASTING LTDஎன்று சொன்னார்.அதை நிரூபிக்கும் வகையில்தான் இங்கு செயல்கள் நடந்து வரும்.

இந்து மதப் பண்டிகையான ஆயுதபூஜைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, இந்துமத பூஜை புனஸ்காரங்களைச் செய்து இயந்திரங்களை நிருவுவது என பல பார்ப்பனிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெல் நிர்வாகம் ஈடுபட்டு வருவது இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில் மத்தியில் 1996-97 களில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு கேட்கவா வேண்டும்?

ஆண்டுதோறும் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அதிகாரிகள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் மாதாந்திர நாட்காட்டி வழங்கி வந்தது (2016ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது)
அப்படி 2003ம் ஆண்டு வழங்கிய நாட்காட்டியில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு படம் இடம் பிடித்தது. அது என்னவென்றால் ஒரு மாதம் சிவன், இன்னொரு மாதம் கிருஷ்ணன், அடுத்த மாதம் விநாயகர் என்ற பத்து மாதத்துக்கும் இந்துமத கடவுளர்களின் படங்கள்.

இந்துமதக் கடவுளர் படங்கள் மிகவும் ஆபாசமாகவும் இருந்தது. குறிப்பாக கோகுல கிருஷ்ணனின் படம் நிர்வாணமாக வெளியிடப்பட்டது.

போனால் போகிறதென்று ஒரு சர்ச் படமும் ஒரு நாகூர் தர்கா படமும் இடம் பெற்றிருந்தது.

இதைப் பார்த்து அனைவரும் கொதிப்படைந்தார்கள்.
பல்வேறு மதங்களையும் மதச்சார்பற்றவர்களையும் பணியாளர்களாகக் கொண்ட பொதுத்துறை நிறுவனத்தில் இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு முக்கியத்துவம் அளித்து மற்ற அனைவரும் முகம் சுளிக்கக்கூடிய அளவிற்கு இந்த நாட்காட்டி வழங்குவதா என்று மனங் குமுறினார்கள். கிறிஸ்துவர்கள் இஸ்லாமியர் யாருமே இந்த நாட்காட்டியை வாங்கவே இல்லை. நம்மைப் போன்ற பகுத்தறிவாளர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

இதனைக் கண்டித்து திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக கடுமையாக துண்டறிக்கை வெளியிடப்பட்டது. உடனடியாக இந்த காலண்டர் திரும்பப் பெறப்பட வேண்டும். வேறு ஒரு புதிய காலண்டர் வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம்.

அப்பொழுது பிரச்சார செயலாளராக இருந்த பெரியார் ஊழியன் மானமிகு துரை சக்ரவர்த்தி அவர்கள் காலை மெயின் கேட்டிலும் மாலை வடக்கு வாயிலிலும் கண்டன உரையாற்றினார்கள். திராவிடர் கழகத்தின் சார்பாக கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதடன் திராவிடர் கழகம் இதனை எதிர்த்து கடுமையாகப் போராடும் என்று எச்சரிக்கை விடுத்தார். இது அனைத்து பணியாளர்கள் மத்தியிலும் நல்ல  வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொருவரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.
அதிகாரிகள் மட்டத்திலேயே இது மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கியது.

 மனிதவள மேலாண்மை நிர்வாகத்தில் அன்று கூடுதல் பொது மேலாளராக இருந்த உயர்திரு ஆனந்தன் அவர்களும் மேலாளராக இருந்த திருமதி காயத்திரி அவர்களும் நம் சங்கத்தை அழைத்துப் பேசி இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டு விடுங்கள். ஏதோ தெரியாமல் நடந்துவிட்டது. இனி வரும் ஆண்டுகளில் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னதோடு அடுத்த ஆண்டு காலண்டர் வெளியிடுவதற்கு முன் உங்களிடம் காட்டிவிட்டு வெளியிடுகிறோம் என்று கூடச் சொன்னார்கள்.

அது எங்களுக்குத் தேவையில்லை. இந்த கடவுளர் படங்கள் மாற்றப்பட வேண்டும் வேறு இயற்கைக் காட்சிகளோ அல்லது நமது நிறுவனத் தயாரிப்புகள் பற்றியோ படங்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். அந்தக் கோரிக்கைய ஏற்றுக் கொண்ட நிர்வாகம் அடுத்த ஆண்டு நமது நிறுவனத்தின் தயாரிப்புகள் பற்றிய படங்களோடு காலண்டர் வெளியிட்டது. அது இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பெல் நிர்வாகத்தின் இந்துத்துவா செயல் இதன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்துத்துவா சிந்தனை உள்ள ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து ஊழியர்களும் நம்முடைய செயலைப் பாராட்டினார்கள்.
இந்துத்துவவாதிகள் நம்மிடம் இதுபற்றி விவாதம் நடத்தி தங்களுடைய மனுதர்ம மனப்பான்மையை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக