சனி, 17 டிசம்பர், 2016

OBC சான்று தொடர்பாக விளக்கம்



சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் கழித்தே அரசுத்துறை மற்றும் பொதுத்துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அது அமுலுக்கு வரும்போதே பொருளாதாரத்தில் மேம்பாடடைந்த பிரிவினர் என்று கூறி கிரிமிலேயர் என்ற ஒன்றை மத்திய அரசு புகுத்தியது. இதனை திராவிடர் கழகம் ஆரம்பத்திலேயே எதிர்த்தது.

ஏனெனில் இந்திய அரசியல் சட்டத்தில் சமூகää மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடவில்லை. அப்படி இருக்க பொருளாதார அளவுகோலை மத்திய அரசு புகுத்தியது.

அது தவறான கொள்கை என்பதை அரசே ஒப்புக் கொள்ளும் வகையில்தான் அந்த பொருளாதார உச்சவரம்பு அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. முதலில் ஒரு லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றது. பிறகு அது 4.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அது தற்பொழுது ஆறு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் கொள்கை தவறானது (பொருளாதார அளவுகோல்) என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

இந்த வருமானம் என்பது என்ன? என்பதற்கு மத்திய மாநில அரசுகள் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. அரசு மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றுவோருக்கு அவர்களின் மாத வருவாயைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அத்துடன் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த மாத ஊதியம் மற்றும் விவசாயம் அல்லாத வகைகளில் வரக் கூடிய வருமானம் ஆறு இலட்சத்தைத் தாண்டினால் மட்டுமே அவர்கள் மேம்பாடடைந்த பிரிவினர் என்று கணக்கிடப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாக அரசு ஆணைகள் கூறுகின்றன.

ஆனால் அரசின் இட ஒதுக்கீடு இந்த மக்களுக்குச் சென்று சேரக்கூடாது என்று கருதக்கூடிய கெட்ட எண்ணங்கொண்ட அரசு அதிகாரிகள் நம்முடைய பெல் ஊழியர்கள் தம் பிள்ளைகளுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றுகள் பெறச் செல்லுகின்றபோது உங்கள் பெற்றோரின் மாத ஊதியம் ஆறு இலட்சத்தைத் தாண்டிவிட்டது.

அதனால் உங்களுக்குOBC சான்றிதழ் வழங்க முடியாது என்று மறுத்து விடுகின்றனர். நம்மிடம் அதற்கான அரசு ஆணைகள் தெளிவாக உள்ளது. சில அதிகாரிகளிடம் அவற்றைக் காட்டும்போது அந்த அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்கி வருகின்றனர். ஆனால் ஒருசில முட்டாள் அதிகாரிகள் இன்னும் சில இடங்களில் அவ்வாறு வழங்கமுடியாது என்று மறுத்து வருகின்றனர். உதாரணத்திற்கு மல்லியம்பத்து கிராம நிர்வாக அலுவலர் OBC சான்று வழங்க முடியாது என சண்டித்தனம் செய்து வருகிறார்.

இது சட்டவிரோதமானது என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி வினவியதில் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு சாதிச்சான்று (NON CREAMY LAYER வழங்குகின்ற போது அவர்களின் மாத ஊதியத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அனைத்து வருவாய் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நமக்குத் தகவல் அளித்துள்ளனர்.

எனவே, நமது ஊழியர்கள் தொழிலாளியாகவும் மேற்பார்வையாளர்களாகவும் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்பதால் OBC சான்றிதழ் பெறுவதில் மேற்கண்ட பிரச்சினைகள் இருந்தால் திராவிடர் தொழிலாளர் கழக நிர்வாகிகளை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்பதற்காக 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்திய இயக்கம் திராவிடர் கழகம் என்பதால் இது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற அக்கறையில் இதனை வெளியிடுகிறோம்.

இதுபோன்று நமது மக்களின் உரிமைகளைப் பெறுவதில் பிற்படுத்தப்பட்ட அமைப்புகள் போதிய கவனம் செலுத்துவதுதான் சரியானதாக இருக்குமே தவிர தாழ்த்தப்பட்டோர் போராடிப் பெற்ற உரிமைகளை வழங்கக் கூடாது என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் அல்ல என்பதனையும் இங்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

OBC சான்று தொடர்பாக விளக்கம் தேவைப்படுவோர் தொடர்புக்கு : 9442148697


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக