வெள்ளி, 2 டிசம்பர், 2016

பார்ப்பனரல்லாதார் நிர்வாக இயக்குனராகவோ இயக்குனராகவோ வரமுடியாத சூழ்நிலை



சமூக ரீதியில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை. அந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைத்து வருகிறது பெல் நிர்வாகம்.

2006 ஆர்டிசான் நியமன வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளது. அத் தீர்ப்பின்படி நிர்வாகம் அனைத்துப் பணி நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில் முதலாவதாக பொதுப்போட்டி நடத்தி தகுதியுள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் எவரையும் நியமிக்க வேண்டும். அதன்பிறகு இட ஒதுக்கீட்டின்படி இதர பிற்படுத்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்க வேண்டும் என்று திர்ப்பளிக்கப்பட்டது. இத் தீர்ப்பு திருச்சி பெல்லுக்கு மாத்திரமல்ல. கார்ப்பரேட் முதல் அனைத்து பெல் பிரிவுகளுக்கும் சேர்த்து இத் தீர்ப்பு பொருந்தும்.

ஆனால் கார்ப்பரேட் நிர்வாகம் 2007 முதல் 2011 வரை தேர்வு செய்த வளாகத் தேர்வுகளில் பொறியாளர் தேர்வில் அந்த இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கவில்லை.

BITS, IIT, ANNA UNIVERSITY போன்ற நிறுவனங்களில் நடந்த வளாகத் தேர்வுகளில் இட ஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பின்படி பொதுப்போட்டியில் தாழ்த்தப்பட்ட - இதரபிற்படுத்தப்பட்டவர்கள் யாரும் இடம் பெறாதபடி பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளன.

மொத்தம் தேர்வான பொறியாளர்கள் -- 1416 இதில்  

இதரபிற்படுத்தப்பட்டவர்கள் -- 267 சதவிகிதம் 18.85

தாழ்த்தப்பட்டவர்கள் -- 230 சதவிகிதம் 16.26

மலைவாழ்மக்;கள் -- 87 சதவிகிதம் 6.14

இதில்  இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு   27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது மத்திய அரசாங்கத்தின்  இட ஒதுக்கீட்டுக் கொள்கை. ஆனால் பெல் நிர்வாகத்தில் வழங்கப்பட்டுள்ளதோ வெறும்  18.85
முன்னேறிய ஜாதியினர் 832 பேர் இவர்கள் 58.75  (இவர்கள் 3 மட்டும்தான் இருக்கவேண்டும்)

திறந்த போட்டியில் இதர பிற்படுத்தப்பட்டவர் யாரும் நியமிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்களில் இரண்டே இரண்டு பேர் மட்டும் அய்அய்டி நாக்பூரில் மட்டும் எடுக்கப்பட்டுள்ளார்கள்.   மற்ற எந்தக் கல்வி நிறுவனத்திலும் தாழ்த்தப்பட்டவர்களும் இதர பிற்படுத்தப்பட்டவர்களும் பொதுப்போட்டியில் எடுக்கப்படவில்லை.  இவ்வாறு இந்திய அரசியல் சட்டத்தையும் மதிக்காமல்ää நீதிமன்றத் தீர்ப்பினையும் மதிக்காமல் பணி நியமனங்கள் நடைபெறுகின்றது.

பெல் நிறுவன அதிகார மட்டத்தில் இட ஒதுக்கிட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவோர் தகுதி – திறமை இல்லாதவர்கள் என்ற மனப்பான்மை இருப்பதால் அரசியல் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய இட ஒதுக்கீட்டையும் வழங்காததோடு பார்ப்பன உயர்ஜாதியினர்தான் தகுதி திறமை உள்ளவர்கள் என்ற மமதையோடு அவர்களை அதிகம் நியமித்து வருகிறது.

இது தவறான போக்காகும். இட ஒதுக்கீட்டின்மூலம் பணியில் சேர்ந்தவர்களால் நிறுவனங்கள் அபார வளர்ச்சியைத் தொட்டுள்ளன என அமெரிக்க - இந்திய பொருளாதார நிபுணர்களின் ஆய்வின் முடிவுகள் உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளன.

ஆனால் பெல் நிர்வாகம் இதனை ஏற்றுக் கொள்ளாமல் உயர்ஜாதியினரை அதிகம் எடுத்து வருகிறது. பெல் நிறுவனத்தில் உயர் பதவிகளான நிர்வாக இயக்குனர் இயக்குனர் போன்ற பதவிகளில் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் இடம் பெறுவதே இல்லை. இதே நிலை மேலும் தொடர்வதற்கான சதிச்செயலையே  நிர்வாகம் செய்து வருகிறது.

1416 பொறியாளர்களில் 832 பேரை உயர்ஜாதியினராக நியமித்ததன் மூலம் இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னாலும் ஒரு பார்ப்பனரல்லாதார் நிர்வாக இயக்குனராகவோ
இயக்குனராகவோ வரமுடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இதனை எதிர்த்து முறியடிக்க வேண்டியது சமூகநீதியில் நம்பிக்கை உள்ளவர்களின் கடமை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இதனை அம்பலப்படுத்தியது திராவிடர் தொழிலாளர் கழகம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக