வெள்ளி, 2 டிசம்பர், 2016

பொறியாளர் நிரந்தரம், மேற்பார்வையாளர் நிரந்தரம், ஆர்டிசான் மட்டும் தற்காலிகம் - இது ஏன்?


பொறியாளர் நிரந்தரம், மேற்பார்வையாளர் நிரந்தரம், ஆர்டிசான் மட்டும் தற்காலிகம் - இது ஏன்? ஏன்? ஏன்? என்று ஒவ்வொருவரும் கேட்கிறார்கள். அதுதான் நம்முடைய நாட்டின் கலாச்சாரம். நமது பாரத கலாச்சாரத்தில் மனுதர்மம் நீண்ட காலமாக ஆட்சி செய்தது.

 உடலுழைப்புத் தொழிலைச் செய்யக்கூடியவர்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள். உழைத்துப்போடுவது மட்டுமே அவர்கள் கடமை. கூலி அவர்கள் கேட்கக் கூடாது. கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்பது மனுஸ்மிருதி. அந்த மனுஸ்மிருதி ஏதோ செல்லரித்த ஏடுகளில் இருப்பதல்ல. இன்னும் நடைமுறையில் இருப்பதற்கு உதாரணம்தான் நம் நிறுவனம்.

அந்த மனுதர்ம மனப்பான்மை உள்ள அதிகாரிகள் கார்ப்பரேட் முழுக்க ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வைத்ததே சட்டம். செய்வதே நிர்வாகம். கேட்க யாரும் இல்லை. முதல் பேட்ஜ் ஊழியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டபொழுது எந்த சங்கமும் கண்டுகொள்ளவில்லை.

திராவிடர் தொழிலாளர் கழகம் மட்டும்தான் அதனைத் தட்டிக் கேட்டு துண்டறிக்கை வெளியிட்டது.

 ஏனென்றால் தி.தொ.க தேர்தலுக்காக உள்ள அமைப்பு அல்ல.

இது முதல் பேட்ஜ் ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும். இன்று மாய்ந்து மாய்ந்து எழுதுபவர்கள் எல்லாம் அன்று எங்கே சென்றார்களோ தெரியவில்லை. 2007ல் தேர்தலில் தற்காலிக ஊழியர்களுக்கும் ஓட்டுரிமை வந்தது. உடனடியாக எல்லோருக்கும் அவர்கள்மீது கரிசனம் பொத்துக்கொண்டு வந்தது. அதற்குப்பிறகுதான் நான் முந்தி நீ முந்தி என்று காட்டிக்கொள்கிறார்கள். இப்பொழுதும் அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்றால் யாரும் அவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால் யாரும் காரணத்தைச் சரியாக உணரவில்லை. ஆர்டிசானாக இருப்பவர்களில் 99 சதவிகிதம் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அப்பா – அம்மா கூலித் தொழிலாளி, அல்லது விவசாயக்கூலி, மூட்டை சுமப்பவர், நெசவாளர், தச்சு வேலை செய்பவர், கொத்தனார், சித்தாள், பீடி சுற்றுபவர் கல் உடைப்பவர் செருப்புத் தைப்பவர் துணி வெளுப்பவர் இப்படித்தான் இருக்கிறார்கள். இதில் யாரும் அதிகாரிகள் வீட்டுப்பிள்ளைகளோ டாக்டர் வீட்டுப் பிள்ளைகளோ எஞ்சினியர் வீட்டுப்பிள்ளைகளோ அய்ஏஎஸ் அய்பிஎஸ் வீட்டுப்பிள்ளைகளோ கிடையாது. ஒரு ஜிஎம் ஏஜிஎம் வீட்டுப்பிள்ளைகளும் கிடையாது. இவர்களெல்லாம் மேல்தட்டு அய்ஸ்கிரீம் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

அத்துடன் பார்ப்பனரில் ஏழை இல்லையா? அவர்களுக்கும் பொருளாதார அளவுகோலில் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாதா? என்றெல்லாம் வியாக்கியானம் பேசுகின்றார்கள்.

அடுத்த வேளை கஞ்சிக்கில்லாத  உஞ்சிவிருத்திப் பார்ப்பான் வீட்டுப்பிள்ளையும் யாரும் கிடையாது. ஏனென்றால் இந்த வேலை முழுக்க முழுக்க உடலுழைப்பு சம்மந்தப்பட்ட வேலை. உடலுழைப்பு என்பது நம் அர்த்தமுள்ள பாரதப் பண்பாட்டில் கேவலமானது. அதனால் அதில் யாரும் போட்டிபோடுவது இல்லை.

நூற்றுக்குப் பத்துப்பேர் பார்ப்பன வீட்டுப் பிள்ளை இருந்திருக்குமேயானால் இந்தத் தற்காலிகம் என்பதெல்லாம் ஒருநொடியில் நிரந்தரம் ஆகியிருக்கும். எஞ்சினியரில் பார்ப்பனப்பிள்ளை இருக்கிறது. சூப்பர்வைசரில் பார்ப்பனர் வீட்டுப்பிள்ளை இருக்கிறான். அதனால் அவர்களெல்லாம் எடுக்கும்போதே நிரந்தரம். தொழிலாளரில் அப்படி யாரும் இல்லை. அதனால் அவர்கள் தற்காலிகம். இந்தக் கஷ்ட நஷ்டமெல்லாம் அதன் காரணமாகத்தான்.

இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் புரிந்தும் புரியாததுபோல் நடிப்பதெல்லாம் காரியத்துக்கு ஆகாது. இந்த மனுதர்மத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் அழித்து ஒழிக்கும் நாளே தொழிலாளர்களின் உண்மையான விடுதலை நாளாகும். தயாராவீரா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக