வெள்ளி, 9 டிசம்பர், 2016

தமிழனுக்குத் தகுதியில்லை என்று இழிவுபடுத்திப் புறக்கணிக்கும் நிர்வாகம்


கேட்க நாதியில்லையா?

 பொறியாளர் 170 பேரில் வெறும் 25 பேரே தமிழன். மேற்பார்வையாளர் 160 பேரில் வெறும் 20 பேரே தமிழன். மற்ற எல்லாம் ஆந்திராக்காரன், மலையாளி, கன்னடியன், இந்திக்காரன். இவையெல்லாம் கொழுத்த சம்பளம் உள்ளää அதிகாரமுள்ள பதவிகள். நம்முடைய தமிழன் ஆந்திராவுக்கு ஆர்டிசான் தேர்வுக்கு அடிமை வேலைக்குத் தேர்வெழுதச் சென்றான். அடித்து விரட்டினான் ஆந்திராக்காரன். அந்த ரிசல்ட் என்ன ஆச்சுன்னே தெரியல.

ஆனால் இங்கே? தமிழன் விரல் சூப்பிக்கொண்டிருக்கிறான்.

நிரந்தரத் தன்மையுள்ள கடைநிலை வேலைகளில் காண்டராக்டைப் புகுத்தியது நிர்வாகம். அன்ஸ்கில்ட் வேலைக்கு அப்ரூவல் இல்லையென்றது நிர்வாகம். இப்பொழுது எஞ்சினியர்களையும் காண்ட்ராக்ட்டில் புகுத்துகிறது.

தரம்தான் நமது தாரக மந்திரம் என்பது நிர்வாகத்தின் கொள்கையாகச் சொன்னார்கள். அந்தத் தரக்கட்டுப்பாட்டிலேயே காண்ட்ராக்ட் எஞ்சினியர்கள் வந்துவிட்டார்கள். நிறுவனத்தின் முதுகெலும்பு தரம் என்பார்கள். அந்த முதுகெலும்பை முறிக்கும் வேலை தொடங்கிவிட்டது. நிரந்தர வேலைக்கெல்லாம் அகில இந்திய அளவில் தேர்வு வைத்து தமிழனுக்குத் தகுதியில்லை என்று இழிவுபடுத்திப் புறக்கணிக்கும் நிர்வாகம் இந்த வேலைக்கு மட்டும் தமிழனை எடுப்பது ஏன்? இந்த வேலை செய்ய மட்டும் தமிழனுக்குத் தகுதி வந்துவிட்டதா?

அப்ரண்டிஸ் என்ற பெயரில் அய்டிஅய் படித்தவர்களையும், டிப்ளமா படித்தவர்களையும், எஞ்சினியரிங் படித்த தமிழன் வீட்டுப்பிள்ளைகளையும் எடுத்து நன்றாகக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி வெளியேற்றும் நிர்வாகம் இங்கு அப்ரண்டிஸ் முடிக்கும் நம் வீட்டுப்பிள்ளைகளை நிரந்தர வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் போதுமட்டும் அவர்களுக்குத் தகுதி இல்லாமல் போய்விட்டது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு அய்ந்து ஆண்டுகளில், இங்கே அதிகாரமுள்ள பதவிகளில் எல்லாம் இந்திக்காரனும், மலையாளியும்ää ஆந்திராக்காரனும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவனுமாக இருப்பான். நம் தமிழன் எல்லாம் சொந்த மண்ணில் அகதிகளைப்போல் அவர்களிடம் கைகட்டிச் சேவகம் புரியும் அடிமைகளாக இருப்பான்.

இது திட்டமிட்டு நம் மீது திணிக்கப்படுகிறது. இதைக் கேட்பதற்கு நாதியில்லையா?

தேசியம் என்ற பெயரால் நமது உரிமைகளையெல்லாம் அந்நியனுக்குத் தாரைவார்த்து விட்டு வந்தாரை வாழவைத்து தமிழன் மட்டும் நொந்து நூலாவதா?

இது அடுத்த தேர்தல் பற்றிய பிரச்சினையல்ல. அடுத்த தலைமுறை பற்றிய பிரச்சினை. தந்தை பெரியார் இயக்கம் அடுத்த தலைமுறைபற்றிச் சிந்திக்கிறது. ஓட்டுக்கேட்காப் பெரியார் பட்டாளத்திற்கு உரிமை கேட்க ஆதரவு தாரீர்! அதில் உறுப்பினராகச் சேர்வீர்!

கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்க!         94421 48697,  94435 13852                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக