வெள்ளி, 21 அக்டோபர், 2016

செப்டம்பர் 17 என்பது பெரியார் பிறந்தநாள்தான். விஸ்வகர்மா என்ற கற்பனைக்கதாபாத்திரம் உதித்த நாள் அல்ல.



 
 உமாபாரதி என்ற அம்மையார் ஒரு தகவலைச் சொன்னார். தான் மத்திய அமைச்சராக இருந்தபோது சரஸ்வதி நதி பற்றியும் ராமர் பாலத்தைப்பற்றியும் ஆய்வு செய்ய நூறு கோடி ரூபாய் ஒதுக்கினாராம்.

கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ஸி, சீக்கியர் பகுத்தறிவாளர் என அனைவரும் கொடுக்கும் வரிப்பணம் மதவாதிகள் ஆட்சியில் எது எதற்கெல்லாம் செலவாகி இருக்கிறது பார்த்தீர்களா?

 ராமர் என்பது இதிகாசத்தில் வரும் கதாநாயகன்தானே தவிர வரலாற்றில் ராமன் என்பவன் இருந்ததற்கான ஆதாரமோ ராமர் பாலம் இருந்ததற்கான அறிகுறியோ இல்லவே இல்லை என்று மத்திய அரசின் தொல்லியல்துறை  நீதிமன்றத்திலேயே அடித்துச் சொல்லி விட்டது. உண்மையை அப்படித்தான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் பல்டியடித்தது ஓட்டுக்காக.

 அதேபோல சரஸ்வதி நதி ஓடியதாகப் புராணங்களிலும் இதிகாசத்திலும் மட்டும்தான் காணக்கிடக்கிறதே அன்றி வரலாற்றில் அதுபற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. இவை பற்றி ஆராய்ச்சி செய்ய மக்கள் வரிப்பணத்தில் நூறு கோடியைப் பாழாக்கியிருக்கிறார் உமா. இவர்கள் தொடர்ந்து ஆட்சியிலிருந்தால் என்னென்ன ஊதாரிச் செலவு செய்வார்கள் என்பதற்கு அளவே இருக்காது.
 புராணங்களில் சரஸ்வதி நதி பற்றி மட்டுமா சொல்லி இருக்கிறார்கள்? பாற்கடலைப்பற்றியும் சொல்லி இருக்கிறார்கள். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே, ஸ்ரீமன் நாராயணா என்று இன்னமும் பக்தகேடிகள் பாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

 அப்புறம் கற்பகதரு, காராம்பசு, பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. தேவர்கள் மூவர்கள் இந்திரர்ää சந்திரர் சூரியர், ரம்பா ஊர்வசி திலோத்தமா என்று ஒரு பட்டியல். அவர்கள் தேவாமிர்தம் சாப்பிட்டார்களாம். அதனால் அவர்களுக்கு சாவே கிடையாதாம். தேவர்கள் நினைத்தால் சொய்ங் என்று புஷ்பக விமானத்தில் வந்து இறங்குவார்களாம், சொய்ங் என்று மேலே போவார்களாம்.
 இப்பொழுது அவர்களை எல்லாம் காணோமே, புராணங்களில் சொல்லப்பட்டுள்ளவாறு இன்று அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்ய விசாரணைக்கமிஷன் போட்டாலும் போடுவார்கள்.  மக்கள் விழித்துக்கொண்டார்கள். நாமும் தப்பித்தோம்.

 திருப்பாற்கடல் இருப்பது உண்மையா? அது எங்கே இருக்கிறது என்று யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தரத்தயாராக இருக்கிறோம்.

 திருப்பாற்கடலும் தேவர்களும் மூவர்களும் எப்படிக் கற்பனையோ அதுமாதிரிதான் விஸ்வகர்மா என்பதும் கற்பனைதான். திருப்பாற்கடல் இருப்பதை எவராவது நிரூபித்தால் விஸ்வகர்மா இருப்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம்.

 இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி எத்தனை பித்தலாட்டங்கள், புனைசுருட்டுக்கள். விஸ்வகர்மா என்று ஒருவர் இருந்தாராம். அவர் பெரியார் பிறந்தநாள் அன்றுதான் பிறந்தாராம். அதுதான் தொழிலாளர் தினமாம். எவ்வளவு கேலிக்கூத்து?

 கேட்டால் ஒரே ஒருதடவை அவர்கள் அதற்கு பதில் சொல்வதாக நினைத்து உளறிக்கொட்டினார்கள். செப்டம்பர் 17 அய் நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அன்றுதான் புரட்டாசி  1. அதைத்தான் நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம் என்று ஒருவர் அசடு வழிந்தார்.

இந்த ஆண்டு (2007) செப்டம்பர் 17 அன்று ஆவணி 31. 18 ந்தேதிதான் புரட்டாசி 1 பிறக்கிறது. அப்படியானால் எதை விஸ்வகர்மா ஜெயந்தியாக இவர்கள் கொண்டாடுவர்?
செப்டம்பர் 17 என்பது பெரியார் பிறந்தநாள்தான். விஸ்வகர்மா என்ற கற்பனைக்கதாபாத்திரம் உதித்த நாள் அல்ல.

பெரியார் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவோம். விஸ்வகர்மா என்ற கற்பனைச் சரக்கை எதிர்த்து முறியடிப்போம்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
இவண் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக