ஞாயிறு, 30 அக்டோபர், 2016

வீரமணி இந்த இயக்கத்தின் தலைவராகாமல் இருந்திருந்தால் பெரியாரால் போராடிப்பெறப்பட்ட உரிமைகள் நமக்குத் தொடர்ந்து கிடைத்திருக்குமா?


Image result for veeramani image
பத்து வயதுக்கும் குறைவான வயதில் பகுத்தறிவுக்கொள்கையை மேடையேறி சிங்கமென கர்ஜித்த சிறுவன் வீரமணி, தான் அந்த இயக்கத்தின் தலைவராவோம் என்று எண்ணி இயக்கத்திற்கு வந்தவரல்ல. ஆனால் அவர் இந்த இயக்கத்தின் தலைவராகாமல் இருந்திருந்தால் பெரியாரால் போராடிப்பெறப்பட்ட உரிமைகள் நமக்குத் தொடர்ந்து கிடைத்திருக்குமா? எண்ணிப்பாருங்கள்.

பெரியார் அறக்கட்டளைப் பாதுகாப்பு :
   
பெரியார் மறைந்துவிட்டார். அப்பொழுது திராவிடர் கழகம் திமுகவுடன் இணையப் போகிறது. கலைக்கப் போகிறார்கள் திராவிடர் கழகத்தை என்ற வதந்தியை உலவவிட்டார்கள். பெரியார் மறைந்தவுடன் செய்தியாளர்கள் இக்கேள்வியை வீரமணியிடம் எழுப்ப திராவிடர் கழகம் இணையாது, கலையாது, தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்தார் வீரமணி. பெரியாருக்குப்பின் அன்னை மணியம்மையார் தலைமையில் இயக்கம் வீறுநடைபோட அன்னையாருக்கு உதவியாக இருந்து இயக்கத்தைக் கட்டிக் காத்தவர் வீரமணி.

நெருக்கடி நிலைக்காலத்தைப் பயன்படுத்தி பெரியார் சொத்துக்களை அபகரிக்கவும் அவர் கட்டிக்காத்த விடுதலையை ஒழித்துக்கட்டவும் பார்ப்பனர்கள் பகீரத முயற்சி எடுத்தார்கள். ஆனால் வீரமணியிடம் அம்முயற்சி பலிக்கவில்லை. வருமானவரித் துறையினர் பெரியார் காலத்திலேயே பல இலட்ச ரூபாய் வரி போட்டார்கள். அது அன்னை மணியம்மையார் காலத்திலும் அவரது மறைவுக்குப் பிறகும் பல மடங்காகி எண்பது லட்ச ரூபாய்க்கு மேல் ஆனது. அய்யா வீரமணி அவர்கள் தனது நுட்பமான அறிவால் அதையெல்லாம் எதிர்கொண்டு எண்பது லட்சம் ரூபாய் வருமானவரியைத் தள்ளுபடி செய்ய வைத்ததோடு பெரியார் அறக்கட்டளையை அறக்கட்டளைதான் என்று நீதிமன்றத்தையே அறிவிக்கச் செய்து அதற்கு வருமானவரியிலிருந்து விலக்குப் பெற்றுப் பெரியார் சொத்தைப் பாதுகாத்தார்.

வருமான உச்சவரம்பு நீக்கம்: 
   
எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார் என்றவுடன் ஆரியம் துள்ளாட்டம் போட ஆரம்பித்தது. பெரியார் அவர்கள் எந்த சமூகநீதிக்காக காங்கிரசைவிட்டு வெளியே வந்தாரோ அதை ஒழிக்க இதுதான் சரியான தருணம் என்று நினைத்து சதி வேலைகளில் இறங்கியது. இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் எம்ஜிஆர் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பதால் அவரைக்குழப்பிவிட்டு வருமான அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வற்புறுத்தி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒன்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று எம்ஜிஆர் காலத்தில் உத்தரவு வந்தது. பெரியாரிடம் பாடம் பயின்ற வீரமணி இதனைக் கடுமையாக எதிர்த்தார். இட ஒதுக்கீட்டின் வரலாற்றை எம்ஜிஆருக்கு எடுத்துச்சொன்னார்.

ஒருவன் ஏழை என்பதால் அவனுக்குப் படிப்பு மறுக்கப்படவில்லை. அவன் பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான் கல்வி மறுக்கப்பட்டது. ஏழையாக இருந்த பார்ப்பனப்பிள்ளைக்குக் கல்வி கிடைத்தது. பணக்காரனாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடையாது என்று இருந்த நிலையை எடுத்துச்சொல்லி எந்த ஜாதியின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அந்த ஜாதியின் காரணமாக அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதுதான் உண்மையான சமூகநீதி என்று கூறி எம்ஜிஆர் அவர்களிடத்தில் இடஒதுக்கீட்டுத் தத்துவத்தைப் புரியவைத்த பிறகு அதனைப் புரிந்துகொண்ட எம்ஜிஆர் அவர்கள் 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு அதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருந்து வந்த 31 சதவிகித இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக்கினார். அதுதான் பின்னர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவிகமாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதமாகவும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த வருமானவரம்பு ஆணை ஒழிந்து இடஒதுக்கீடு 50 சதவிகிதமாக ஆனபோது அய்யா வீரமணி அவர்களுக்கு அய்ம்பது வயதுகூட நிறைத்திருக்கவில்லை. அவ்வளவு இளவயதில் மிகப்பெரும் சமூகநீதிக்காவலராக விளங்கினார் அய்யா வீரமணி. அந்த வருமான வரம்பு ஆணை நடைமுறைப்படுத்தப் பட்டிருக்குமேயானால் ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு என்பதேகூட இந்நேரம் ஒழிந்துபோயிருக்கும்.


இடஒதுக்கீட்டில் பார்ப்பனப்புரட்டை முறியடித்தல்: 

எம்ஜிஆர் அவர்களது அமைச்சரவையில் ஹண்டே என்ற பார்ப்பனர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவர் குலக்கல்வித்திட்டம் கொண்டுவந்த இராஜாஜியின் சுதந்திராக்கட்சியைச் சேர்ந்தவர். அவர்களுக்கு இடஒதுக்கீட்டின்மீது எப்பொழுதுமே ஒரு கண் உண்டு. எனவே, அவரது துறையில் நடைபெற்ற பணிநியமனத்தில் திறந்தபோட்டி என்பதை இதர வகுப்பினர் என்று வியாக்கியானம் தந்து முழுக்க முழுக்க முன்னேறிய ஜாதிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தது அந்தத்துறை. வெகுண்டெழுந்தார் வீரமணி. அரசியல் சட்டத்தில் உள்ள இடஒதுக்கீட்டை சட்டவிரோதமாக ஏமாற்றுகிறது சுகாதாரத்துறை என்று வழக்குப்போட்டார். அந்த திட்டம் முறியடிக்கப்பட்டு பொதுப்போட்டியில் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் தேர்வாகும் வழிவகை செய்தவர் அய்யா வீரமணி.


நுழைவுத்தேர்வை எதிர்த்துப்போர்ப்பரணி : 
 
அப்பொழுது கல்வியிலும் வேலைவாய்ப்புக்களிலும் ஆட்களைத் தேர்வு செய்வதற்கு நேர்முகத்தேர்வுமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அந்த முறையின்மூலமாக தேர்வுக்கு வருகின்றவர்களின் குடும்பப் பின்னணி, முதல்தலைமுறையாக வருகிறார்களா, கிராமப்புறத்தைச் சேர்ந்தவரா, ஏழை விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவரா என்றெல்லாம் விசாரித்து முதல்தலைமுறையில் வருபவர்களுக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு முறை கொண்டுவரப்பட்டது. அதனால் ஏழை எளிய கிராமப்புற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தை எடுத்துச்சொல்லி நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக் கடுமையாகப் போராடினார். நுழைவுத்தேர்வு நுழைவதா? என்ற அவரது நூல் நுழைவுத்தேர்வின் கேடுகளை அப்பட்டமாக விளக்கியது.

அது இருபது ஆண்டுகளுக்குப்பின்னால் நிறைவேறியது. அந்த நுழைவுத்தேர்வு ரத்துக்கு முதல்முதல் குரல் கொடுத்தவர் அய்யா வீரமணி அவர்கள்தான். தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ஒழிக்கபட்;டுவிட்டாலும் அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும் என்று மத்திய மனிதவளத்துறையின் அறிவிப்பைக் கடுமையாக இன்னமும் எதிர்ப்பதில் அய்யா வீரமணி அவர்கள் முன்னணியில் இருந்து வருகிறார்.

சமூகநீதிக்கு எதிரான சதி முறியடிப்பு : 

குஜராத்தில் மருத்துவ உயர்படிப்புக்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 2 சதவிகிதம் இடஒதுக்கீடு அந்த மாநில அரசால் வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து உயர்ஜாதி ஊடகங்கள் அங்கே மிகப் பெரிய கலவரத்தைத் தூண்டிவிட்டன. ஜாதிவெறியர்கள் கலகம் செய்தனர். அந்தக் கலவரத்தை ஆதரித்து தமிழகத்தில் அப்பொழுது முற்பட்டோர் என்ற பெயரைச்சொல்லி இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர். தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பா? அனுமதியோம், அனுமதியோம் என்று ஆர்த்தெழுந்தார் அய்யா வீரமணி.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக எந்த இடத்தில் பேரணி நடத்த இருக்கிறார்களோ அதே இடத்தில் அதே தேதியில் அதே நேரத்தில் நாங்களும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேரணி நடத்துவோம் என்று அறிவித்தார் அய்யா வீரமணி. எம்ஜிஆர் அவர்கள் முற்பட்டோர் நடத்த இருந்த பேரணிக்கு அனுமதியை ரத்து செய்தார். அதன்மூலம் இடஒதுக்கீட்டு எதிர்ப்புக்குரல் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. அதேபோல பார்ப்பன சங்கம் இடஒதுக்கீட்டை எதிர்த்து உண்ணாவிரதம் அறிவித்தார்கள். அதனை எதிர்த்து உண்ணும் விரதம் நடத்தப்படும் என்று அறிவித்து அதனையும் முறியடித்தவர் அய்யா வீரமணி அவர்கள்.

மண்டல் குழு அறிக்கைக்கான போராட்டமும் வெற்றியும் : 

சமூகநீதி வரலாற்றில் மண்டல்குழு அறிக்கை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்குமுன்பு சென்னை மாகாணத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு இருந்தது. சுதந்திர இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசில் ஒழிக்கப்பட்டுவிட்டது. சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதற்காக காகாகலேல்கர் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் தலைவரே அந்த அறிக்கைக்கு எதிரான கருத்தைக் கூறியதால் அந்த அறிக்கை அப்படியே ஊறுகாய் ஜாடிக்குள் சென்றுவிட்டது.


1977ல் ஜனதா ஆட்சிக்காலத்தில் பி.பி.மண்டல் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அது இந்தியாமுழுவதும் ஆய்வுசெய்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 27 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது. அந்த அறிக்கை வெளியான உடனேயே இந்து பத்திரிகை அந்த அறிக்கையைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று தலையங்கம் தீட்டியது.

பெரியாரிடம் பாடம் பயின்ற அய்யா வீரமணி உடனடியாக விடுதலை யில் மண்டல் அறிக்கையை விரைந்து அமுல்படுத்த வேண்டும் என்று அறிக்கை எழுதினார்.
இந்து பத்திரிகைய நிருபர் அய்யா வீரமணியிடம் மண்டல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே அதை விரைவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை எழுதுகிறீர்களே! அது எப்படி? என்று வினவியபோது உங்கள் பத்திரிகையில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே அதை புதைகுழிக்கு அனுப்பவேண்டும் என்று ஏன் எழுதினீர்களோ அதே காரணத்துக்காகத்தான் நாங்கள் அதனை விரைந்து அமுலாக்க வேண்டும் என்று எழுதுகிறோம் என்று பதிலடி கொடுத்தார்.

அந்த மண்டல் அறிக்கையை வெளியிடவே மறுத்தது இந்திரா அரசு. அதனை வெளியிடுவதற்காக அய்யா வீரமணி அவர்கள் எடுத்த முயற்சிக்கு அளவே இல்லை. வடநாட்டிலிருந்து ராம்விலாஸ் பஸ்வான், சந்திஜித் யாதவ், சரத் யாதவ், போன்ற தலைவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து மாநாடு நடத்தினார். இவரும் வடபுலத்திற்குச்சென்று பல்வேறு மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். இந்திராகாந்தி வீட்டுமுன்பு மறியல் செய்தார். இப்படி அவர் தலைமையில் மண்டல் அறிக்கையை வெளியிடவும் அதனை அமுல்படுத்தவும் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42. போராட்டங்கள் 16. வேறு எந்த இயக்கமும் இதுபோன்று ஒரு பிரச்சினைக்காகவே இத்தனை மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தி இருக்குமா என்பது அய்யமே!

வாராது வந்த மாமணி வி.பி.சிங் :    

 மண்டல் அறிக்கை வெளியான பிறகு அதனை அமுல்படுத்துவற்காகவும் கடுமையான போராட்டங்களை நடத்தியவர் அய்யா வீரமணியவர்கள். வாராது வந்தமாமணியாய் வி.பி.சிங் அவர்கள் பிரதமரான பிறகு அவர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி மண்டல்குழு அறிக்கையில் கூறியுள்ள ஒரு பகுதியை மட்டும் அமுல்படுத்தினார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பிஜேபி ஆர்எஸ்எஸ் கூட்டம் ரதயாத்திரை நடத்துவதாகக் கூறி நாடெங்கிலும் மதக்கலவரத்தைத் தூண்டிவிட்டது. பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தபோது விபிசிங் அரசுக்கு எதிராக வாக்களித்து அவருடைய அரசையே கவிழ்த்தது பிஜேபி கும்பல். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஒருமுறை அல்ல ஆயிரம் முறைகூட நான் பதவி இழக்கத் தயார் என்றார் விபி.சிங் அவர்கள்.

உபி முதல்வராகவும் இந்திரா அமைச்சரவையில் அமைச்சராகவும் பின்னர் ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த வி.பி.சிங் அப்பொழுதெல்லாம் மண்டல் குழு அறிக்கையைப் பற்றிப் பேசாதவர் பிரதமரானவுடன் அதனை அமுல்படுத்துவது ஓட்டுக்காக என்று கிண்டல் செய்தார் துக்ளக் சோ. உபி முதல்வராகவும் இந்திரா அமைச்சரவையில் அமைச்சராகவும் பின்னர் ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர் வி.பி.சிங். அப்பொழுதெல்லாம் மண்டல் குழு அறிக்கையைப் பற்றி வி.பி.சிங் அவர்களுக்கு எதுவும் தெரியாது. பிரதமர் ஆனவுடன் ராம்விலாஸ் பஸ்வான் மூலமாக அவருக்கு மண்டல் அறிக்கையை அமுல்படுத்துவதன் அவசியத்தைப் புரிய வைத்தவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் ஆவார்கள்.

~அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்கிளிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதேபோல சமுதாயப்பணியிலே நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து அந்த உணர்ச்சியை நான் பெறுகிறேன்| என்றார்  வி.பி சிங் அவர்கள்.

அந்த உணர்ச்சிதான் சமூகநீதிக்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் பதவி இழக்கத் தயார் என்று கூற வைத்தது.

தாழ்த்தப்பட்டோருக்கு மண்டல்குழு அறிக்கையின் பாதுகாப்பு :
 
இந்த மண்டல்குழு அறிக்கையை அமுல்படுத்துவதற்காக திராவிடர் கழகம் போராடி வந்த நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடையே பிரித்தாளும் சூழ்ச்சி நடந்தது. அதாவது இந்த மண்டல்குழு அறிக்கையினால் தாழ்த்தப்பட்டோருக்கு எந்தவித நன்மையுமில்லை. எனவே, இப்போராட்டங்களில் தாழ்த்தப்பட்டோர் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்ற விசமத்தனமான கருத்து பரப்பப்பட்டது. அய்யா வீரமணி அவர்கள் இதற்கு சரியான விளக்கம் கொடுத்தார்கள். அதுவரை இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவரது இட ஒதுக்கீட்டையுமே ஒழிப்பதற்கு முயற்சித்தார்கள் என்பதையும் ஜாதி அடிப்படையில் எந்த இடஒதுக்கீடு இருந்தாலும் அது தகுதி – திறமையை பாதிக்கும் எனவும் எனவே ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றே அனைவரும் முயற்சித்தார்கள்.

மண்டல் குழு அறிக்கை என்பது தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு வேலி பொன்றது. அது அமுலானால்தான் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடும் பாதுகாக்கப்படும். இல்லையேல் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் மிகச் சுலபமாக அந்த இடஒதுக்கீட்டையும் ஒழித்து விடுவார்கள் என்று மிகத் தெளிவாக விளக்கமளித்தார்கள். அத்துடன் மண்டல்குழு அறிக்கையில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து வழங்கப்பட்டு வந்தாலும் அது முழுமையாக வழங்கப்படவில்லை என்பதையும் புள்ளிவிவரத்துடன் வெளியிட்டது. அவர்களுக்குரிய இடஒதுக்கீடு அனைத்துத் துறைகளிலும் அனைத்துப்பணிகளிலும் நிரப்பப்பட வேண்டும் என்று மண்டல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்தார்கள். அவரது கூற்று நூற்றுக்கு நூறு சரி என்று பின்னர் நிரூபணமானது.

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நியாயமானதுதான். ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அவசியமில்லை என்று அந்த இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் பேச ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு மண்டல் குழு அறிக்கை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்குமே பொதுவானது என்பதை எடுத்துக்கூறி ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் மண்டல்குழு அறிக்கையை அமுல்படுத்தப் போராட வேண்டியதன் அவசியத்தை அய்யா வீரமணி அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான சதி :     

மண்டல்குழு அறிக்கை செல்லுமா செல்லாதா என்று வழக்கு மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. திர்ப்பளித்த நீதிபதிகள் அந்த அறிக்கை செல்லும் அல்லது செல்லாது என்று தீர்ப்பளிப்பதற்குப் பதிலாக மண்டல் அறிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டு வழக்குக்குத் தொடர்பில்லாமல் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்று அதில் குறிப்பிட்டனர். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு அப்பொழுது நடைமுறையில் இருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டிலுள்ள இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கு பெரிய துருப்புச்சீட்டுக் கிடைத்ததுபோல் ஆகிவிட்டது.

வழக்கறிஞர் விஜயன் என்பவர் மூலம் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் தமிழ்நாட்டிலுள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு செல்லாது@ 50 சதிவிகிதத்திற்குமேல் இடஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக அரசோ இதில் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியது. எதிர்க்கட்சிகளோ இதுதான் சரியான தருணம். இந்த அரசு இதில் அக்கறை காட்டவில்லை@ சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறைகூறி அரசியல் நடத்தலாம் என்று திட்டமிட்டன.

ஆனால் தந்தை பெரியார் வழிவந்த திராவிடர் கழகம் சும்மா இருக்க முடியுமா?

வகுப்புரிமைக்காகவே தன் வாழ்நாளில் பெரும் போராட்டம் நடத்திய தலைவர் பெரியார் அல்லவா? அவரது சீடரால் இந்த ஆபத்தைப் பொறுத்துக்கொண்டு வாளாவிருக்க முடியுமா? அப்பொழுது தமிழகத்தை ஆண்ட முதல்வர் செல்வி ஜெயலலிதா ஒரு பார்ப்பனப் பெண்மணி. மத்தியில் பிரதமர் நரசிம்மராவ் ஒரு பார்ப்பனர். குடியரசுத்தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா என்ற பார்ப்பனர். அனைவருமே பார்ப்பனராக இருந்தாலும் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்வது. சிலர் இந்திய அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொன்னார்கள்.

தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள்தான் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை எங்கே? தீர்வு என்ன? என்பதைச் சரியாகக் கணித்து அதற்கு செயல்வடிவம் கொடுத்தார்கள்.
31(சி) சட்டத்தை எழுதிக்கொடுத்தவர் தமிழர் தலைவர்:   மத்திய அரசை அணுகி இடஒதுக்கீட்டுக்காக ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரச் செய்வது அப்போதைக்கு சாத்தியமல்ல என்றும் அதற்காக மாநில அரசே தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தனியாக ஒரு சட்டத்தை இயற்ற முடியும் என்றும் அப்படி சட்டம் இயற்றி அதனை இந்திய அரசியல் சட்டம் 9வது அட்டவணையில் பாதுகாப்பாக வைத்துவிட்டால் அதை எதிர்த்து யாரும் வழக்குத் தொடுக்க முடியாது என்பதையும் எடுத்துக்கூறி 31(சி) என்ற பிரிவின்படி ஒரு சட்டத்தையே எழுதிக்கொடுத்து அதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றச்செய்தார் அய்யா வீரமணி.

அதற்குப்பிறகு நாடாளுமன்ற இரு அவைகளிலும் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பதற்காக தமிழகத்திலிருந்து ஒரு குழு சென்று குடியரசுத்தலைவரைச் சந்திக்கச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் என்று சொல்லிக் கொண்டவர்களெல்லாம் அக்குழுவில் செல்ல ஒத்துக்கொள்ளவில்லை.

தமிழர் தலைவர் அவர்கள் தமிழகத்திலுள்ள சிறிய அரசியல் கட்சிகள் சமுதாய அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு டெல்லி சென்று குடியரசுத்தலைவரைச் சந்தித்து அதற்கு ஒப்புதல் பெற்று அதனை 9வது அட்டவணையில் பாதுகாப்பாக இடம்பெறச்செய்தார்.

இந்த செயல் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

தேர்தலில் பங்கெடுக்காத ஒரு இயக்கம் சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ செல்லாத ஒரு இயக்கம் ஒரு அரசியல் சட்டத்தை எழுதிக்கொடுத்து அதற்கு சட்டப்பாதுகாப்புப் பெற்றுத் தருவது மகத்தான ஒன்றாகும். அதனைச் செய்ததன்மூலம் அய்யா வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் உண்மையான கொள்கை வாரிசு என்பதையும் பெரியார் என்ற பல்கலைக்கழகத்தில் கற்றுத்தேர்ந்த சரியான மாணவர் என்பதையும் தந்தையையும் விஞ்சக்கூடிய தனயன் என்பதையும் நிரூபித்துக் காட்டினார்.

 இந்திய அரசியல் சட்டம் இதே இடஒதுக்கீட்டுக்காக தந்தை பெரியார் அவர்களின் போராட்டத்தின் காரணமாக முதல்முதலாகத் திருத்தப்பட்டது. அவரது தனயன் வீரமணி அவர்களால் ஒரு சட்டமே இயற்றப்பட்டு அது இந்திய அரசியல் சட்டத்தின் 76வது திருத்தமாக ஏற்கப்பட்டு 9வது அட்டவணையில் வைக்கப்பட்டது என்பது மிகப்பெரும் வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும்.

இந்த  ஒரு செயலுக்காகவே ஒடுக்கப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அவருக்கு ஊர்தோறும் சிலை அமைத்து அவருக்குச் சிறப்புச்செய்ய வேண்டும்.

ஆனால் நிலைமை எப்படி இருக்கிறது? இந்த இடஒதுக்கீட்டின்படி இன்று கல்வி வேலைவாய்ப்புப் பெறுகின்ற எந்த இளைஞனுக்கும் இந்த இடஒதுக்கீடு எப்படிக்கிடைத்தது என்ற வரலாறே தெரியாது.

நன்றிபாராத தொண்டுக்குச் சொந்தக்காரர்:   

கலைஞர் அவர்கள் ஒருமுறை இந்த சட்டத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றபொழுது இதனை எழுதிக்கொடுத்தவர் மானமிகு வீரமணி. ஆனால் எந்த இடத்திலும் செல்வி ஜெயலலிதா அவர்கள் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை என்று சொன்னார்கள். அதற்கு ஆசிரியர் அவர்கள் என்ன கருத்துத் தெரிவித்தார்கள் தெரியுமா? திராவிடர் கழகம் என்பது நன்றிபாராத தொண்டினைச்  செய்யக்கூடிய இயக்கம். அதனால் யாரும் எங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார்களா என்று பார்ப்பதைவிட அதனால் பயனடையும் மக்கள் யார் என்றுதான் பார்க்கவேண்டும் என்று அடக்கத்தோடு சொன்னவர்தான் அய்யா வீரமணி அவர்கள்.

மதவெறியை மாய்க்க மனிதநேயம் காக்க அய்யா வீரமணியின் முயற்சி:   

இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் ஒருபக்கம் இப்படி இருக்க இந்திய அரசியலில் மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்தாடியது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற கற்பனைவாதத்தைக் கிளப்பிவிட்டு ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்பரிவார்க்கும்பல் மதவெறியைத் தூண்டிவிட்டு நாட்டையே கலவர பூமியாக மாற்றத் துடித்தது. நானூறு ஆண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதியை கரசேவை செய்யப் போகிறோம் என்று கூறிக்கொண்டு இராணுவமும் காவல்துறையும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இடித்துத் தரைமட்டமாக்கினர்.

அதனால் நாடுமுழுவதிலும் இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டெறிந்தது. தமிழகம் தந்தை பெரியார் பிறந்தமண்@ இங்கு மதவெறிக்கு இடமில்லை என்று அறைகூவல் விடுத்து தமிழகமெங்கும் மதவெறியை மாய்ப்போம்@ மனிதநேயம் காப்போம் என்று சூறாவளி என சுற்றிவந்து பிரச்சாரம் செய்தார். அதன் காரணமாக தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியது.

 அதன்பிறகு தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம் ஏற்படத்துவங்கியது. திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்ட அ.இ.அதி.முக ஆர்எஸ்எஸின் அரசியல் பிரிவான பாரதீய ஜனதாவுடன் கூட்டுச்சேர்ந்து அவர்கள் தமிழகத்தில் கணக்குத்திறக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தது. தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நாங்கள் காலூன்றிவிட்டோம். இனி எங்களை யாரும் அசைக்க முடியாது. இங்கே நாங்கள்தான் பெரியண்ணன் என்பதுபோல பிஜேபி மார்தட்டியது. அதற்கேற்றாற்போல அதிமுக பிஜேபியோடு உள்ள உறவைத் துண்டித்தபோது திராவிட இயக்கங்கள் என்று சொல்லிக்கொண்ட திமுக, மதிமுக போன்றகட்சிகளும் பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லிக்கொண்டவர்களும் அந்த பிஜேபியோடு கூட்டுச் சேர்ந்தார்கள்.

தந்தை பெரியார் கொள்கையில் ஊறித்திளைத்த அய்யா வீரமணி அவர்களால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிஜேபிக்கு எதிரான ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்க முயற்சித்தார்கள். 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக,கம்யூனிஸ்டுகள் தமிழ்மாநில காங்கிரஸ் உருவாக்கிய அய்யா மூப்பனார் ஆகிய அனைவரையும் ஓரணியில் சேர்த்து பிஜேபியோடு கூட்டுச்சேருகின்ற அணியினருக்குத் தமிழகத்தில் இடமில்லை என்ற வரலாற்றை உருவாக்கினார்கள். முன்பு கூட்டணி ஏற்படுத்தி ஜெயலலிதா இனி எக்காலத்திலும் பிஜேபியோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என்று பொதுமேடையில் அறிவித்தார்கள் என்று சொன்னால் அப்படிச் சொல்ல வைத்தவர் அய்யா வீரமணி ஆவார்கள்.

இந்த இடத்தில் ஒரு செய்தியைப் பதிவுசெய்தாகவேண்டும். 1996 தேர்தலில் நரசிம்மராவ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ளாமல் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரசை உருவாக்கியவர் அய்யா மூப்பனார் அவர்கள். அவர்களிடம் பிஜேபியின் நச்சுத் தன்மையையும் அதனுடன் கூட்டுச்சேர்ந்து அக்கட்சியைத் தமிழகத்தில் வளரவிட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தினையும் எடுத்துச்சொல்லி ஊழலைவிட மதவாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை எடுத்துச்சொல்லி பிஜேபிக்கு எதிரான ஒரு அணியை உருவாக்குவதன் அவசியத்தை எடுத்துச் சொன்னவர் அய்யா வீரமணி அவர்கள்.

அந்தக்காலக்கட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்கூட பாஜக ஒரு தீண்டத்தகாத கட்சியல்ல என்றும் ஆர்எஸ்எஸ் சும் திராவிடர் கழகம்போல ஒரு சமுதாய இயக்கம்தான் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தக்கருத்தை அய்யா மூப்பனார் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த சூழ்நிலையில்தான் அய்யா மூப்பனார் அவர்களும் வீரமணி எனக்கு ராஜகுரு. அந்த ராஜகுரு சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறி பிஜேபிக்கு எதிரான அதிமுக அணியில் இடம்பெற்று பிஜேபிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற நிலையை உருவாக்க ஒத்துக்கொண்டார்;.

ஆனால் சொன்ன வாக்கை ஜெயலலிதா காப்பாற்றவில்லை. மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியோடு கூட்டுச்சேர்ந்தார். 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. அந்த நிலைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்த அய்யா வீரமணி அவர்கள் திமுக ஆதரவு கேட்காமலேயே பிஜேபிக்கு எதிரான திமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று நெய்வேலி மத்திய கமிட்டியில் தீர்மானம் இயற்றியதோடு பாஜகவை மட்டுமல்ல பாஜகவோடு கூட்டுச் சேர்கின்ற எவருக்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற நிலையை உருவாக்கப் பாடுபட்டார்.

அத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும் பாஜகவுக்கும் ஒரு இடம் கூடக்கிடைக்கவில்லை. அத்தோடு பாஜகவின் அத்தியாயம் தமிழகத்தில் முடிவுக்கு வந்தது. இன்று அக்கட்சி தமிழகத்தில் சீந்துவாரற்ற கட்சி ஆகிப்போனது. அதற்கு மூலகாரணம் அய்யா வீரமணியும் அவர் அழியாது காப்பாற்றி வரும் தந்தை பெரியாரின் தத்துவங்களும்தான்.

2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி அனாதை ஆகிவிட்டது. அத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்கள் தனது ஆட்சியில் முதல் அமைச்சரவைக்கூட்டத்திலேயே தந்தை பெரியாரின் இறுதி இலட்சியமான அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்மானத்தை இயற்றியதோடு அதற்கான பயிற்சியையும் அளித்தது திமுக அரசு. பார்ப்பனர்களால் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கப்பட்டு அர்ச்சகர் நியமனம் தடைபட்டுக்கிடக்கிறது.

சேதுசமுத்திரத்திட்ட ஆதரவு:    

அத்துடன் தந்தை பெரியாரும் தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் போராடிவந்த சேதுசமுத்திரத்திட்டம் கலைஞர் அவர்களின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டு அதற்கான முக்கால்வாசிப்பணிகள் முடிவுற்ற நிலையில் திராவிட இயக்கம் என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் அண்ணா திமுகää அண்ணாவின் கொள்கைகளுக்கெதிராய் அங்கே இராமன் கட்டிய பாலம் இருக்கிறது@ அதனை இடிக்கக்கூடாது என்று சர்வதேச அரசியல் தரகர் சுப்பிரமணியசாமியுடன் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடைபெற்றுள்ளார். அவர்களின் அந்த பார்ப்பனப் போக்கையும் எந்தவிதமான ஆதாரமுமில்லாமல் அத்திட்டத்திற்கு இடைக்காலத்தடை வழங்கிய உச்சநீதிமன்றத்தின் பார்ப்பனப் போக்கையும் அம்பலப்படுத்தி வருபவர் அய்யா வீரமணி அவர்கள்.

பார்ப்பனப் பண்பாட்டுப்படையெடுப்பை முறியடித்தல்:

அதேபோல் ஆபாசமான கதையைக் கொண்ட முழுவதும் சமஸ்கிருதப் பெயர்களைக்கொண்ட சித்திரை முதல் நாளை அடிப்படையாகக் கொண்ட புத்தாண்டு தமிழர்க்கு இழிவானது. தமிழர்களின் தன்மானத்தைக் காக்கின்ற வகையிலே தந்தை பெரியார் அவர்களும் மறைமலையடிகள் திருவிக போன்ற தமிழ் அறிஞர்களும் வலியுறுத்திய தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்களை அறிவிக்கச் செய்தவர் அய்யா வீரமணி அவர்கள்.

சேதுசமுத்திரத்திட்டமும் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டமும் தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்கின்ற தி;ட்டமும் தடுக்கப்பட்டுள்ளது தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள சவால் ஆகும். அவையெல்லாம் அறிவுப்பூர்வமாக சட்டப்பூர்வமாக மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் எடுத்துச்செல்லப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்கான பணியினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அய்யா வீரமணி அவர்களால்தான் முடியும். அந்தப் பணிக்கு அவருக்குத் துணையாகத் தோள்கொடுக்க வேண்டியது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

தந்தை பெரியாருக்குப் பின்னால் தமிழகத்தில் ஜாதிவெறி மதவெறி தலைதூக்கிவிடாமல் தடுத்து சமூகநீதியைக் காத்து தமிழர்களின் தன்மானத்தைக் காத்து தமிழகத்தில் ஜாதிவெறி மதவெறிக்கட்சிகளுக்கு இடமில்லை என்ற நிலையைத் தோற்றுவித்து சங்கராச்சாரியார்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, சாமியார்களின் சல்லாபங்களைத் தோலுறித்து மூடநம்பிக்கைகளை முறியடித்து தந்தை பெரியாரின் உண்மையான வாரிசாகத் தமிழர் தலைவராக உயர்ந்து நிற்கிறார் அய்யா வீரமணி. அவர் மட்டும் இல்லாதிருந்தால் …

தந்தை பெரியார் தோற்றுவித்த கட்சி ஒழிக்கப்பட்டிருக்கும். அவரது செல்வங்கள் ஆதிக்கச்சக்திகளால் கபளீகரம் செய்யப்பட்டிருக்கும். சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கப்பட்டிருக்கும். தமிழகம் மதவெறியர்களின் பிடிக்கு மாறியிருக்கும். ஜாதிவெறி தலைதூக்கியிருக்கும். மூடநம்பிக்கைகள் முடைநாற்றமெடுத்திருக்கும். மீண்டும் இங்கு மனுதருமம் மகுடமேறியிருக்கும். வருணாசிரமம் காலூன்றியிருக்கும்.

 இன்னமும் சமூகநீதிக்கு ஆபத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மண்டல் அறிக்கை இன்னும் முழுமையாக அமுலாகவில்லை. உயர் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு இன்னும் முழுமைபெறவில்லை. கிரீமிலேயர் என்ற கிருமி பிற்படுத்தப்பட்டோரை வாட்டி வதைக்கிறது. பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு என்பது இன்னமும் கானல்நீராகவே உள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ஒழிக்கப்பட்டு விட்டது என்று தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் இனி அகில இந்திய நுழைவுத்தேர்வு என்ற பூச்சாண்டி நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

 அவற்றையெல்லாம் முறியடிக்க ஈரோட்டுக்கண்ணாடி அணிந்திருக்கும் தமிழர் தலைவர் அவர்களால்தான் இது முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இவ்வாறு தமிழர்களின் பாதுகாவலராக தமிழர் தலைவராக இவ்வளவு சாதனைகளைச் செய்வதற்கு அவருக்கு போர்க்கருவியாக இருந்தது இருந்துவருவது விடுதலை நாளிதழாகும். அந்த விடுதலை நாளிதழ் அய்யா வீரமணியின் பொறுப்பிற்கு வராமல் இருந்திருந்தால் தந்தை பெரியாரே அதனை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்.

அய்யா வீரமணி அவர்கள் விடுதலை நாளிதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு தந்தை பெரியார் காலத்தைவிட வலிவோடும் பொலிவோடும் வந்துகொண்டிருக்கிறது. அது இணையதளத்திலும் வெளியாகி உலகிலுள்ள 93 நாடுகளில் வாழக்கூடிய தமிழர்களாலும் உடனுக்குடன் படிக்கப்பட்டுவருகிறது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

50 ஆண்டு வரலாற்றுச்சாதனை:     

அவர் விடுதலைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது என்பது உலகப் பத்திரிகை வரலாற்றிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். அந்த அய்ம்பது ஆண்டு நிறைவடையும் நிலையில் அவருக்கு பாராட்டுவிழா என்பதை நன்றி என்பதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார். அவர் விரும்புவதெல்லாம் விடுதலை இல்லாத தமிழன் இல்லமே இருக்கக் கூடாது என்பதுதான். என்னைச் சந்திக்க வருகின்றவர்கள் எனக்கு சால்வை அணிவிக்காதீர்கள். சால்வைக்குப் பதில் சந்தா வழங்குங்கள் என்பதையே அவர் ஒவ்வொரு தோழரிடமும் வேண்டுகோளாக வைப்பார்கள். விடுதலையை வளர்த்தெடுப்பதையே அவர் பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டுள்ளார்.

விடுதலைக்கு அய்ம்பது அண்டுகள் ஆசிரியராக இருந்திருக்கிறாரே தவிர அதற்காக தந்தை பெரியார் காலத்திலும் அதற்குப்பிறகும் ஒரு பைசா ஊதியமாக எதிர்பார்த்ததில்லை. தனக்கு பொதுக்கூட்டங்களில் அன்பளிப்பாக வழங்கப்படும் தொகை முழுவதையும் இயக்கத்திற்கே ஒப்படைக்கும் ஏந்தல் அவர். அவரது எடைக்கு எடை ரூபாய் நாணயங்கள வழங்கப்பட்டாலும் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டாலும் அதனை இயக்கத்திற்கே ஒப்படைத்து வருபவர். எடைக்கு எடை வழங்கப்பட்ட வெள்ளியையும் தங்கத்தையும்கூட இயக்கத்தின் சொத்தாக மாற்றியவர் அய்யா வீரமணி. அப்படி தங்கத்தால் எடைபோடப்பட்ட தங்கத்தலைவரின் மனங்குளிர விடுதலை சந்தாக்களை வாரி வழங்குவோம். நன்றியுள்ள தமிழர்களே! வெள்ளித்தோட்டாக்களை அள்ளி வழங்குங்கள் விடுதலை என்ற போர்வாளைக் கூர்தீட்ட.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக