வியாழன், 27 அக்டோபர், 2016

ஒரு பாவத்துக்கு மன்னிப்புக் கிடைக்கிறது என்றால் அல்லது பரிகாரம் இருக்கிறது, கழுவாய் இருக்கிறது என்றால் பாவம் செய்ய எவனாவது தயங்குவானா?


சொர்க்கலோகம், நரகலோகம், இந்திரலோகம், சிவலோகம், வைகுண்டம், பரலோகம் இப்படி எத்தனை எத்தனையோ லோகம் இருக்கிறதாம். எங்கே அய்யா இருக்கிறது என்;றால் எல்லாம் மேலே என்று கையைக் காட்டுவார். அந்த லோகத்திற்குச் சென்று வந்தவர் எவர்? என்றால் விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர் என்பார். அங்கே என்ன இருக்கிறது என்றால் ஆளாளுக்கு வியாக்கியானம் செய்வர். ரம்பா, ஊர் வசி, மேனகை, திலோத்தமை எல்லோரும் இருப்பார்கள், வேண்டிய இன்பங்களை வாரியிறைப்பர், காராம்பசு இருக்கும். கற்பக தரு இருக்கும் வேண்டியது உடனுக்குடன் கிடைக்கும் என்று ஒருவர் சொல்லுவார்.

இன்னொருவர் சொல்லுவார் ஆண்டவர் நீ செய்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பார். நீ செய்கின்ற நல்லது கெட்டதுக்குத் தகுந்தபடி நியாயத் தீர்ப்பு வழங்குவார் என்பார்.

நீ பாவம் செய்கிறாய். அதற்கு மன்னிப்பே கிடையாது. கண்டிப்பாகத் தண்டனை கிடைக்கும் என்பார் ஒருவர். நீ செய்த பாவத்தையெல்லாம் நான் பரமண்டலத்தில் இருக்கும் பிதாவிடம் சொல்லி மன்னிப்பு வாங்கித் தருகிறேன். எனவே, நீ செய்த பாவங்களையெல்லாம் என்னிடம் தெரிவி என்று சொல்லுவார். ஒரு பாவத்துக்கு மன்னிப்புக் கிடைக்கிறது என்றால் அல்லது பரிகாரம் இருக்கிறது, கழுவாய் இருக்கிறது என்றால் பாவம் செய்ய எவனாவது தயங்குவானா?

பார்த்தார் ஒருவர். மற்றவர் செய்கிற பாவத்துக்கெல்லாம் பரமபிதாவிடம் மன்னிப்பு வாங்கித் தருகிறோம். அதே மாதிரி நாம் பாவம் செய்தாலும் மன்னிப்பார்தானே என்று நெல்லையில ஒருவர் பரமபிதாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்று 11ம் வகுப்புப் பெண்ணை மாதாவாக்கினார். பரமபிதா மன்னித்தாரோ என்னவோ தெரியவில்லை. இந்தப் படுபாவி காவல்துறை அதைக் கண்டுபிடித்து நீ செய்தது பாவம். அதற்கு மன்னிப்பே கிடையாது என்று எஃப்ய்ஆர் போட்டுட்டாங்க. பரலோகப்பிதாவிடம் மன்னிப்புக் கேட்டும் பலனில்லாததால் பாவியான  காவல்துறை அதிகாரியிடம் சரண்டர் ஆயிட்டார்.

அவருக்கு ஒன்னும் வௌரம் தெரியவில்லைபோலும். பரிசுத்த ஆவிதான் அவர் வயிற்றில் வளருது என்று கதை கட்டியிருக்கலாம். இல்லாட்டி நித்தம் நித்தம் ஆனந்தம் தந்தவர் மாதிரி நான்தான் பரமாத்மா. என்னோட கூடினா அந்த பரமாத்மாவிடமே கூடினது மாதிரி என்று கதை விட்டிருக்கலாம். காஞ்சி காமகோடி பீடம் கம்மனாட்டியையே கையப்புடிச்சி இழுத்தார்.  காக்கிகள் கைது செய்துகேஸ் போட்;டா. நான் யார் தெரியுமா? நான் ஆண்டவனுக்கும் மேலே! என்மேலயா கைய வச்சே என்று கர்ஜித்தது மாதிரி கர்ஜித்திருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் வௌரம் தெரியாம சரண்டர் ஆயிட்டார்.

இவங்க எல்லாமே ஒன்னச் சொல்லுவாங்க. பக்திதான் ரொம்ப ரொம்ப முக்கியம். பக்தி இல்லேன்னா இந்த ஒலகமே அழிஞ்சிடும். அதனால எல்லோரும் பய பக்தியோட இருக்கனும்கறத ரொம்ப அழுத்தம் திருத்தமாச் சொல்லுவாங்க.

ஆனா இந்த ஈரோட்டுக் கிழவன் மட்டும் வேறு மாதிரி சொன்னார். பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம் என்றார். எனக்கு பக்தி இல்லாததால் நரகம் கிடைக்கும் என்றால் அதனால் உனக்கு ஒன்றும் நட்டமில்லை. ஆனால் ஒழுக்கம் இல்லையென்றால் எல்லாமே பாழ் என்றார். இதில் எது முக்கியம்? பக்தியா? ஒழுக்கமா? சிந்திப்பீர்! பகுத்தறிவுப் பகலவனின் பாதையைத் தேர்ந்தெடுப்பீர்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக