வியாழன், 13 அக்டோபர், 2016

அம்பேத்கருடைய வாழ்க்கை வரலாறுமட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையும் அதுதான்

(உண்மை வரலாறு)
மராட்டியத்தில் மகாத்மா ஜோதிபாபுலே அவர்கள்தான் 1848ல் இந்தியாவில் தாழ்த்தப் பட்டவர்களுக்கென முதல் பள்ளியைத் துவக்கினார். பிற்போக்கு சக்திகளாலும் உறவினர்களாலும் தான் இழிவுபடுத்தப்ட்டபோதிலும் புறக்கணிக்கப்ட்டபோதிலும் புலேவும் அவரது மாண்புமிகு மனைவியும் தீண்டப்படாத மக்கள் கல்விபெறவும் சமூக இயலாமைகளிலிருந்து விடுபடவம் வேண்டி உயரிய முறையில் அயராது பாடுபட்டனர்.

 இந்தியச் சிற்றரசர்களில் ஒருவரான சாயாஜிராவ் கெய்க்வாட் 1883ல் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினார். இந்தப்பள்ளிகளில் ஆசிரியராகப்பணியாற்ற இந்துக்கள் எவரும் முன்வராததால் முஸ்லிம் ஆசிரியரைக்கொண்டே நடத்த வேண்டியிருந்தது...

 தீண்டப்படாதவர்களுக்குக் கல்வி வழங்குவதற்குக் கெட்ட நோக்கங்கொண்ட எதிர்ப்பு இருந்தபோதிலும் இவர்களுக்குக் கல்வி தரப்படவேண்டும் என்ற கோரிக்கை புதிய ஆட்சியாளர்களிடத்தில் தலைதூக்கிக்கொண்டே இருந்தது. 1856ல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்மூலம் இப்பிரச்சினை முன்னிடம் பெற்றது. தார்வார் என்கிற ஊரில் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தீண்டாத சாதிப் பையனைப் பள்ளியில் சேர்த்திட மறுத்துவிட்டார். இப்பிரச்சினை பம்பாய் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 1858ல் அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. அரசிடமிருந்து பகுதி நிதி உதவிபெறும் பள்ளியில் சாதி இனம் காரணமாக ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அரசு தரும் நிதி உதவி நிறுத்தப்படும் என்றும் அரசின் முழு நிதியினால் நடத்தப்பெறும் பள்ளிகளில் எல்லாச்சாதியினரின் பிள்ளைகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த ஆணை அறிவித்தது.

ஆயினும் சாதி இந்துக்கள் தங்களின் மனப்போக்கை மாற்றிக்கொள்ளாததால் நீண்டகாலம் இந்த ஆணை நடைமுறைக்கு வரவில்லை. தீண்டப்படாதவர்களின் கல்வி முயற்சிகளை தேவையற்ற போராட்டங்கள் என்றும் இவை உணர்வு வயப்பட்ட ஆங்கில அதிகாரிகளாலும் நடைமுறைக்கு உதவாத நம்நாட்டு இந்து சீர்திருத்தக்காரர்களாலும் த}ண்டிவிடப்பட்டவை என்றும் சாதி இந்துக்களின் பிரதிநிதிகள் சாதித்தனர்...

 எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் அம்பேத்கர் படித்தபோது கரும்பலகையில் கணக்கு ஒன்றைப் போட்டுக் காட்டுமாறு ஆசிரியர் அழைத்தார். உடனே வகுப்பில் தடபுடலென ஓசை கேட்டது. வகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த கரும்பலகையின் பின்னால் தாம் கொண்டுவந்திருந்த உணவுத் தூக்கிகளை உயர்ஜாதி மாணவர்கள் வைப்பது வழக்கம். அம்பேத்கர் கரும்பலகையின் அருகில் நின்று அதில் கணக்கைப் போடுவதால் அவர்கள் உணவு தீட்டாகிவிடும் என்று அஞ்சி விழுந்தடித்துக் கொண்டு ஓடிச்சென்று அவரவர் உணவுத்தூக்கிகளைத் தள்ளி வைத்தனர்.

எல்பின்ஸ்டன் கல்லூரியில் அம்பேத்கர் படித்தபோது கல்லூரியின் உணவுக்கடை உரிமையாளர் பார்ப்பனர். அவர் அம்பேத்கருக்கு தண்ணீரோ தேனீரோகூடத் தர மறுத்துவிட்டார்.
 இவையெல்லாம் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் உள்ள ஒரு சிறு பகுதிதான். இதைவிட அதிகமான கொடுமைகளையெல்லாம் அம்பேத்கர் அவர்கள் அனுபவித்தார்கள் என்று அவரது வரலாறு சொல்கிறது. இது தனிப்பட்ட அம்பேத்கருடைய வாழ்க்கை வரலாறுமட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையும் அதுதான். அந்தக்காலக்கட்டத்தில் அம்பேத்கர் போன்ற ஒருவர் - இருவர் மட்டுமே கல்வி கற்க முனைந்தார்கள். அதற்கே இவ்வளவு துயரங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது.

தமிழகத்தில் 1920க்குப் பின்னர் நீதிக்கட்சி ஆட்சி ஏற்பட்டபிறகுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி உரிமைகள் ஓரளவு கிடைத்தன. சுதந்திரம் பெற்ற பிறகுங்கூட வேலைவாய்ப்பில் இட ஒதுக்கிடு வழங்கலாம். கல்வியில் வழங்கக் கூடாது என்று அல்லாடி கிருஷ்ணசாமி வாதிட்டு வென்றார். அதை எதிர்த்துப் பெரியார் போராடியதால்தான் முதல் அரசியல் சட்டத்திருத்தமே வந்தது.
இன்றைக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் கமிஷன் அடிப்படையில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளது. கல்வியில் கூடாது என்று பார்ப்பனர்கள் எதிர்க்கின்றார்கள்.
நிலைமை இப்படியிருக்க 1822ல் 60 முதல் 70 சதம் படித்திருந்தார்கள். 500 பேருக்கு ஒரு பள்ளி இருந்தது என்று ஆர்எஸ்எஸ்காரர்கள் புருடா விடுகிறார்கள் என்றால் உண்மையிலேயே அவர்களுக்கு துணிச்சல் அதிகம்தான். திருடினால் தண்டனை உண்டு. கொலை செய்தால் தண்டனை உண்டு. பொய சொன்னால் ஒரு தண்டனையும் இல்லை. கட்டிவைத்துத் தோலை உரிக்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் எதை வேண்டுமனாலும் அவிழ்த்து விடலாம் என்று; புருடா விட்டுக்கொண்டிருக்கிறார்கள். தோழர்களே! அவர்களைப் புரிந்துகொள்வீர்!
இவண் :
13-04-2007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக