செவ்வாய், 25 அக்டோபர், 2016

கடவுளை நம்பவேண்டுமா

கடவுளை நம்பவேண்டுமா?

 
1983 இல் நாங்கள் எல்லாம் ஈழத்தில் தேடப்பட்ட போது, தமிழ் மண்ணை மிதித்த நேரத்தில் எங்களைத் தாங்கிப் பிடித்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி ஆவார்கள். அதனை என்றைக்கும் மறக்கமாட்டோம்!

தமிழர்களைப் பொறுத்தவரையில் மூன்று தவறு களைச் செய்யக்கூடாது. முட்டாள்தனத்தின் காரணமாக தமிழன் அயலானை ஏற்கக்கூடாது - அயலானைப் போற்றக்கூடாது - அயலானை நம்பக்கூடாது.

கடைசி நேரத்தில் தமிழர்கள் 30 ஆயிரம் பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், அதன் பொருள் என்ன? ஒரு குடும்பத்துக்கு மூன்று பேர்கள் என்று வைத்துக் கொண்டால்கூட, 10 ஆயிரம் குடும்பங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

இந்த 10 ஆயிரம் குடும்பங்கள் அய்யரை அழைத்து, அருந்ததி பார்த்து, சடங்குகளைச் செய்து திருமணங் களைச் செய்துகொண்டவர்கள்தானே! எந்த சாஸ்திர சம்பிரதாயங்கள், மந்திரங்கள், சடங்குகள் தமிழர்களைக் காப்பாற்றின? இதற்கு மேலும் இதை நாங்கள் ஏற்க வேண்டுமா?

கடவுளை நம்பினோம். கந்தா கடம்பா, மகேசா எங்களைக் காப்பாற்று என்று கத்தினோம், கதறினோம். எந்தக் கடவுளும் எங்களைக் காப்பாற்றவில்லையே. இதற்கு மேலும் கடவுளை நாங்கள் நம்பவேண்டுமா?

இரண்டரை லட்சம் தமிழர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அத்தனையும் வாஸ்து பார்த்துக் கட்டப்பட்டவைதான். எந்த வாஸ்து சாஸ்திரம் எங்கள் தமிழர்களின் வீடுகளை இடிக்காமல் காப் பாற்றியது? இதற்கு மேலும் நாங்கள் வாஸ்துவை ஏற்கவேண்டுமா?

2076 சைவக் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. அந்த  கடவுள்களால் தங்கள் கோவில்களையே காப் பாற்றிக் கொள்ள முடியவில்லையே! கோவில்களுக்குச் சென்று வந்த எம்மக்களையும் காப்பாற்றவில்லையே. இதற்கு மேலும் நாங்கள் கோவில்களுக்குச் செல்ல வேண்டுமா?

ஆரியர்களின் மூடநம்பிக்கைகளை ஏற்று நாங்கள் அழிந்ததுதான் மிச்சம். இதற்கு மேலும் ஆரியத்திற்கு நாம் அடிபணிய வேண்டுமா? மூடச்சடங்குகளைப் பின்பற்றி, வாஸ்துவை நம்பி, இவற் றையெல்லாம் நம்பி, நம்பி, ஏற்று ஏற்று வீணாகிப் போனோமே! வீணாகிப் போனோமே!!

நமது இளைஞர்கள் இவற்றையெல்லாம் உணர வேண்டும். நமது மாண வர்கள் கைகளில் ராக்கிக் கயிறுகளைக் கட்டிக் கொண்டு அலைகிறார்களே! ராக்கிக்கும், தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த ஆரிய அடிமைத்தனம்?

நாம் தமிழர்களாகவே வாழ்வோம் - அது போதும். பரந்த மனப்பான்மை எல்லாம் வேண்டவே வேண்டாம். அதனால் நாம் இழந்தது போதும், அழிந்தது போதும் போதும். தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்!

(27.1.2010 அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி இல்ல மணவிழாவில் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் உரை).

எழுச்சிக்கவிஞரின் இந்தக் கருத்துக்கு சச்சிதானந்தத் தின் பதில் என்னவோ!


Read more: http://www.viduthalai.in/page-1/131647.html#ixzz4O6XUAy4s

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக