செவ்வாய், 18 அக்டோபர், 2016

தீட்டாயிடுத்து



இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசாமி கோயிலின் கிழக்குக் கோபுரத்தில் இலேசான விரிசல். அதை இராமநாதசுவாமியால் சரி செய்ய முடியாது. அரசாங்கம்தான் வரவேண்டும். அதை ஆய்வுசெய்து அதுபற்றி இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் அறிக்கை தருவதற்காக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி அக்கோயிலுக்குள் சென்றார். வேறு எதற்காகவும் அல்ல
.
பிழைப்பு நடத்த ஏதாவது துரும்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த கூட்டத்துக்கு இது அல்வா சாப்பிட்டதுபோல. தமிழ்நாட்டுக்கும் தமிழனுக்கும் சம்மந்தமில்லாத வி.இ.பரிஷத், மராட்டியவெறியைக்கிளப்பி தமிழனை அடித்துத் துரத்திய சிவசேனா ஆகிய அமைப்புக்கள் ஒரு இந்துக் கோயிலுக்குள் இஸ்லாமியர் எப்படி நுழையலாம் என்று கண்டனம் தெரிவித்தனர். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாம். அதாவது தீட்டாயிடுத்தாம். அந்தத் தீட்டைப் போக்க பரிகார பூஜை நடத்தப்பட்டதாகக் கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீட்டு என்பது இன்று பரவலாகப் பேசப்படுகிறது. குருவாயூரில் வயலார் ரவியின் பேரனுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடத்தினதால் தீட்டாயிடுத்து என்று நம்பூதிரிகள் தீட்டுக்கழித்தார்களாம். முன்பு இதே கோயிலில மீரா ஜாஸ்மின் என்ற மலையாள நடிகை போய்ச் சாமி கும்பிட்டாராம். அதனாலும் தீட்டாயிடுத்து என்று அந்த நடிகையிடமே பத்தாயிரம் பெற்று தீட்டுக்கழித்தார்களாம்.

குருவாயூரப்பனையும் சபரிமலை அய்யப்பனையும் மனமுருகப்பாடும் ஜேசுதாதஸ் அந்த பகவான்களை வெளியிலெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையோ என்னவோ சபரிமலைக்கும் குருவாயூருக்கும் போய் அவர்களைத் தரிசித்தே தீர வேண்டும் என்று வைராக்கியமாய் இருக்கிறார் அவரை விடவே கூடாது என்று கச்சை கட்டி (காவியும்தான்) நிற்கிறது அக்கிரகாரக் கூட்டம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் சீரங்கம் கோயிலுக்குள் மரியம் பிச்சை என்பவர் சென்றாராம். அதனால்தான் அரங்கநாதன் ஆத்திரம் கொண்டு கல்யாண மண்டபத்தில் 64 பேரை நெருப்பில் பொசுக்கினானாம். அள்ளிவிட்டது அக்கிரகாரக் கூட்டம். மரியம் பிச்சை இன்னமும் கல்லுப்போலத்தான் இருக்கிறார். தீயில் கருகியவர்கள் என்ன பாவம் செய்தார்களோ? இதுதான் திருவரங்கநீதிபோலும்.

இப்படி எதற்கெடுத்தாலும் தீட்டு தீட்டு என்று பேசுகிற இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த இராமகோபாலனும் அம்பிகளும்தான் இந்துமதத்தில் தீண்டாமை எப்படியோ வந்து புகுந்துவிட்டது என்று பசப்புகிறார்கள். தீண்டாமைக்கு ஆணிவேர் எது? தீட்டு, என்பதும் புனிதம் என்பதும்தானே? இதை அளக்க ஏதாவது அளவுகோல் உண்டா?

இன்று மாற்று மதத்துக்காரன் நுழைந்ததால் தீட்டு என்று சொல்லுகின்ற கூட்டம்தானே முன்பு கோயில் முகப்புக்களில் தீண்டத்தகாதவர்களும் பிற மதத்தினரும் நுழையக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத்தனர்? அப்படி எங்காவது தீண்டத்தகாதவன் நுழைந்தால் இதே பரிகாரபூஜையைச் செய்தார்களா இல்லையா? இதுதானே தீண்டாமையின் ஆணி வேர்?

நந்தனைத் தீயிலிட்டுப் பொசுக்கியது எதனால்? நீ தீண்டத்தகாதவன். இந்த உடம்போடு வந்தால் தீட்டு. அதனால் தீக்குள் நுழைந்து இந்த உடம்பை அழித்துப் புதிய உரு எடுத்து வா என்று ஆண்டவன் பெயரால் அவனைத் தீயிலிட்டுப் பொசுக்கியது தீண்டாமைத்தத்துவம் இல்லையா?

அதே திமிர் இன்னமும் சிதம்பரம் தீட்சதர்களுக்குக் கொஞ்சமும் குறையவில்லையே! ஆறுமுகசாமி எனற சிவனடியார். அவர் ஒன்றும் நாத்திகரல்ல. சிவபக்தர்தான். அந்த சிவபெருமானைப்பற்றித் தமிழில் உள்ள தேவாரப் பாடல்களை கோயிலுக்குள் சென்று பாடச் சென்றதற்காக அவரது கையை உடைத்த கூட்டம் தீட்சதர் கூட்;டம் இல்லையா? தேவாரம் பாட நிரந்தரத் தடை பெற்றதற்கும் அடிப்படை என்ன? தீண்டாமைத் தத்துவம்தானே?

இதையெல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல தீண்டாமை எல்லாம்வல்ல எங்கள் கடவுள்களையும் மீறி எப்படியோ வந்து இங்கு புகுந்து விட்டது என்பது ஏமாற்றுவேலை அல்லவா?
தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சட்டத்தில் எழுதப்பட்டதால்தான் கோயில் வாசல்களில் அத்தகைய அறிவிப்புப் பலகைகள் எடுக்கப்பட்டுவிட்டன. அதற்குப் பாடுபட்டவர்கள் அம்பேத்கரும் பெரியாரும்தான்.

தீண்டாமை ஒழிய அந்தத் தத்துவங்கள ;ஒழிய வேண்டாமா?
அதை ஒழிக்க சங்பரிவார் தயாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக