புதன், 12 அக்டோபர், 2016

யாருக்கும் வெட்கம் இல்லை.



தமிழ்நாட்டில் இராஜாஜி இரண்டு முறை முதல்வராக இருந்து ஆட்சி செய்தார். 1938ல் முதல்முறை ஆண்டபோது இரண்டாயிரம் பள்ளிகளை மூடினார். 1952ல் இரண்டாம் முறை ஆண்டபோது ஆறாயிரம் பள்ளிகளை மூடினார். கீழ்ஜாதி மக்களுக்கெல்லாம் படிப்பு எதற்கு? அவனவனும் அவனவன் குலத்தொழிலைச் செய்தால் போதும். மேல்படிப்பு தேவையில்லை என்று சொன்ன ஆர்எஸ்எஸ்ஸின் குருநாதரான (இங்கே பிஎம்எஸ் சின் குருநாதர்) பால கங்காதர திலகரின் கொள்கையை ஏற்று இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அந்தத் திட்டத்தை எதிர்த்து திலகர் பெரிதும் போற்றிய பிள்ளையார் பொம்மையை  தனது சொந்தக் காசில் வாங்கி தெருவில் போட்டு உடைத்தார். அப்பொழுது பிள்ளையாரும் வரவில்லை. பிள்ளையாரின் ஆத்தா, அப்பன், தம்பி மற்றும் சொந்தக்காரன் யாரும் வரவில்லை.
அப்படி பிள்ளையாரை உடைத்த பெரியார் பிறந்த மண்ணில் இன்று பிள்ளையாருக்கு ஊர்வலம் என்று சொல்லி முஸ்லிம்கள் அதிகம் வாழும் மசூதி வழியாக இழுத்துச் சென்று கலவரம் உண்டாக்குகிறார்கள். அம்பதடி பிள்ளையாரு, அறுபதடிப் பிள்ளையாருன்னு ஊர்வலம் போயி அதைக் காவிரியில தண்ணியிருந்தா அதுலேயே போட்டு அமுக்குவாங்க. கடலிலே போட்டு மிதிப்பாங்க. இதையெல்லாம் எதுக்கு செய்யிறீங்கன்னா யாருக்கும் எதுவும் தெரியாது. ஒன்லி மதவெறிதான் இதிலே. இத வச்சு பக்தி பெருகிருச்சுன்னு கத விடுறதுல மட்டும் யாருக்குமே வெட்கமில்லை.

அந்தப் பிள்ளையாரப்பத்தி புராணங்களில என்னா கத விடுறானுங்க. அவருதான்; காவிரி ஆறு உற்பத்தியாகவே காரணமாம். இது பிள்ளையார் புராணத்திலயும் இருக்குது. திருவிளையாடல் புராணத்திலும் இருக்குது. கல்லணைக்குப் போனா அங்க சிலையாவே செஞ்சு வச்சிருக்காங்க. கொள்ளிடமும் காவிரியும் பிரியும் இடத்தில் ஒரு மலை மாதிரி ஒரு வடிவத்த உருவாக்கி அந்த மலை மேல அகத்தியர் கமண்டலத்தப் பக்கத்தில வச்சுக்கிட்டு உட்காந்திருப்பது மாதிரியும் ஒரு காக்கை வந்து அந்தக் கமண்டலத்தத் தள்ளி விடுற மாதிரியும் அதிலேயிருந்து தண்ணி காவிரியில ஆறாப் பெருகி வர்ற மாதிரியும் அகத்தியர் காக்கையை விரட்ட அது பிள்ளையாரா வடிவெடுத்த மாதிரியும் சிலை செஞ்சு வச்சிருக்காங்க.

அதாவது பரமசிவனுக்கும் பார்வதிக்கும் உலகத்தின் வடகோடியான கைலாயத்தில் திருமணம் நடந்ததாகவும் அதைக் காண மூவுலகத்திலும் இருந்தும் முப்பத்தி முக்கோடி தேவர்களும் நாற்பத்தியெண்ணாயிரம் ரிஷிகளும் கின்னரர் கிம்புருடர் அஷ்டதிக்குப் பாலகர்களும் வந்து விட்டதனாலே உலகத்தின் வடகோடி தாழ்ந்து தென்கோடியான கன்னியாகுமரி உயர்ந்திருச்சாம் தராசுத் தட்டு மாதிரி. இதைப் பாத்து அச்சப்பட்ட தேவர்களும் முனிவர்களும் ஈசனிடம் முறையிட கட்டை விரல் உயரமுள்ள அகத்தியரை அழைத்து தென்கோடிக்குப் போ என்றாராம். வரும்போது அகத்தியர் சிவனின் தலையிலுள்ள கங்கையிடமிருந்து கங்கா ஜலத்தை கமண்டலத்தில் பிடித்து வந்தானாம். வந்து குடகு மலையில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று கண்ணை மூடி தவக்கோலத்தில் உட்கார்ந்திருந்தாராம். அப்பொழுது அங்கே வந்த பிள்ளையார் காக்கை வடிவெடுத்து அந்தக் கமண்டலத்தைத் தட்டிவிட அதுதான் காவிரியாய்ப் பெருக்கெடுத்து ஓடி தஞ்சைத் தரணியை வளமான பூமியாக்குகிறதாம்.
இதில் எங்காவது அறிவுக்கோ ஆராய்ச்சிக்கோ இடமிருக்கிறதா? உலகத்தின் வடகோடி என்ன இமயமலையா? தென்கோடி கன்னியா குமரியா? எல்லோரும் கல்யாணத்துக்குச் சென்றதால் தாழ்ந்துபோக பூமி என்ன தட்டையா? அதனைச் சரிசெய்ய கட்டை விரல் உயரமுள்ள அகத்தியனால் முடியுமா? இந்தக் கேள்வியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இது பூமி தட்டை என்று நம்பிய முட்டாள் உலகத்தின் வடகோடி இமயமலை என்று எண்ணிய அறிவு கெட்டவன் தென்கோடி கன்னியாகுமரிதான் என்று நம்பிய முழுமூடன் எழுதி வைத்த கதை.

இந்த அறிவியல் உலகத்திலும் பிள்ளையாரை வணங்குகிறானே பக்தன் அவன் இதை நம்புகிறானா? காவிரி உற்பத்தியாகப் பிள்ளையார்தான் காரணம் என்றால் அதில் தண்ணீர் வரவில்லையென்றாலும் அவன்தானே காரணமாக இருக்க வேண்டும்? இதையெல்லாம் நம்புகின்றவன்தானே பக்தனாக இருக்க வேண்டும்? இதை நம்பி கோயில் கட்டுகின்ற பக்தன் பிள்ளையாரிடம் முறையிடுகின்றானா? பிள்ளையார் கோயிலில் மணியடித்துப் பிழைப்பு நடத்துகிறானே அர்ச்சகன் அவன்தான் பிள்ளையாரிடம் காவிரியில் தண்ணீர் விடச்சொல்லி முறையிடுகிறானா? அல்லது பிள்ளையாரை வைத்து அம்பதடி அறுபதடிப் பிள்ளையார் என்று ஊர்வலம் விடுகிறானே சுளுளு காரன். அவன்தான் பிள்ளையாரிடம் கோரிக்கை வைக்கிறானா? இதனை டிவியிலும் பத்திரிகையிலும் பிரச்சாரம் செய்கின்றானே அவனாவது பிள்ளையார் காவிரியில் தண்ணீர் வர அருள் பாலித்தார் என்று எழுதுவானா?
உண்மையாக எவனும் இதை நம்புவதில்லை. ஆனால் அதை வைத்துப் பிழைப்பு நடத்த மட்டும் யாருக்கும் வெட்கம் இல்லை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக