வியாழன், 13 அக்டோபர், 2016

தீண்டாமையை ஒழிக்க எண்ணும் எவரும் சாஸ்திரங்களை ஏற்றுக்கொள்ளாதீர்!


 அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்- கேளுங்கள்:

"சாதிமுறையைப் பின்பற்றுவது மக்களின் தவறு அல்ல. சாதிமுறையை அவர்கள் உள்ளத்தில் ஊறவைத்திருக்கும் மதத்தைத்தான் இதற்குக் குறைகூற வேண்டும். சாதிதான் தீண்டாமைக்குக் காரணமானது. தீண்டாமையை ஒழிக்க வேண்டுமானால் சாதியை ஒழிக்க வேண்டும். அந்த சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதியைப் போற்றுகின்ற மதத்தைக் கற்பிக்கும் சாஸ்திரங்களைத்தான் எதிர்க்க வேண்டும். சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை ஒழிப்பதே இதற்குச் சரியான வழியாகும். சாஸ்திரங்களின் அதிகாரத்தை எதிர்க்காமல், அவை புனிதமானவை என்கின்ற நம்பிக்கையை எதிர்க்காமல், சாஸ்திரங்களைப் பின்பற்றி மக்கள் செய்யும் செயல்களை மட்டும் எதிர்ப்பது பொருத்தமற்றது. சாதி புனிதமானது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்திருக்கும் மதம்தான் எல்லாக் கேட்டுக்கும் மூலகாரணம்" என்று அம்பேத்கர் கூறுகிறார்.

அந்த சாஸ்திரங்களை எவர் கடைப்பிடித்தாலும் அவர் சாதிக்கும் தீண்டாமைக்கும் ஆதரவானவர்தான்.

அண்ணல் அம்பேத்கர் எழுதிய சட்டத்தின்படி கல்வி வேலைவாய்ப்புப் பெற்ற படித்த பதவியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று அதிக அளவில் சாஸ்திரங்களின்மீதும் மதச்சடங்குகளின்மீதும் அதிக மோகம் கொண்டு அவற்றைக் கடைப்பிடிப்பதே நாகரிகம் என்று கருதி அந்த சாஸ்திரங்களின்படி காரியங்களைச் செய்து வருகிறார்கள். பட்டமும் பதவியும் கிடைத்தவுடன் பழையனவற்றையெல்லாம் மறந்துவிட்ட படித்தவர்கள் எந்த சாஸ்திரம் தங்கள் மூதாதையரை இழிவுபடுத்தியதோ அதனை மிக மூர்க்கமாகக் கடைப்பிடிக்கிறார்கள். தங்கள் இல்ல நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்களை அழைத்து அவர்கள் மூலமாக இந்துமத சாஸ்திரங்களின்படி சடங்குகளைச் செய்து தங்கள் வீடு திறப்புவிழாவை கிரஹப்பிரவேசமாகவும் திருமணங்களை பார்ப்பனர்களை வைத்தும் அதற்கு முதலில் ஜோதிடம்ää சாதகம் என்றெல்லாம் பார்த்து அதன்படியும் காரியங்களைச் செய்கிறார்கள்.       

அண்ணல் அம்பேத்கரின் கூற்றுப்படி இவர்களும் சாதிக்கும் தீண்டாமைக்கும் ஆதரவாளர்கள்தான். எவ்வாறெனில் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை பிராமணர்கள்தான் நடத்த வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும்போது பிராமணர் பிறவியின் அடிப்படையில் உயர்ஜாதியாக இருப்பதால் மட்டுமே அவர் அழைக்கப்படுகிறார். அவரை உயர்ஜாதி என்று ஏற்றுக் கொண்டு அழைப்பதால் இவர் தாமாகவே தம்மை தாழ்ந்த ஜாதி என்று ஏற்றுக் கொண்டவராகிறார். பிராமணர் வந்து சடங்குகளைச் செய்யும்போது அந்த சடங்குகளைச் செய்ய உதவும் சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கை பாதுகாக்கப்படுகிறது. சாஸ்திரங்கள் புனிதமானவை ஆகும்போது சாஸ்திரங்களின்படி சாதியும் புனிதமானவை ஆகிறது. சாதி புனிதமானவையாக ஆகும்போது அந்த சாதித் தத்துவத்தின்படி தீண்டாமையும் புனிதமானவை ஆகிறது.      எனவேää சாதி இன்றளவும் பாதுகாக்கப்படுவதற்கும்ää தீண்டாமை காப்பாற்றப்படுவதற்கும் படித்துப் பட்டம்பெற்று பதவியிலிருக்கும் தாழ்த்தப்பட்டவரும் காரணமாகிறார்.

எனவே, பிராமணர்கள் யாரும் எங்களை அடிப்பதில்லை.  பிற்படுத்தப்பட்டவர்தான் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார். அவர்கள்தான் எங்களைத் தாக்குகிறார்கள். எனவே, அவர்கள்தான் எங்களுக்கு எதிரிகள் என்று கூறுபவர்கள் அம்பேத்கர் கொள்கைளை அறியாதவர்களே!   எனவே, தீண்டாமையை ஒழிக்க எண்ணும் எவரும் அம்பேத்கர் கூற்றுப்படி சாஸ்திரங்களை ஏற்றுக்கொள்ளாதீர்! பார்ப்பனரை அழைத்து உங்கள் இல்ல நிகழ்ச்சிகளை சடங்குகளைச் செய்யாதீர்! பிண்டம் போடுவது, சிரார்த்தம் கொடுப்பது போன்ற சடங்குகளைச் செய்யாதீர்! இந்துமதக் கடவுளரை வணங்காதீர்! அப்பொழுதுதான் சாதியும் தீண்டாமையும் ஒழியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக