திங்கள், 17 அக்டோபர், 2016

ஆடுகள் சங்கம் வைத்திருக்கும்போது ஏன் ஓநாய்களும் சங்கம் வைக்கக் கூடாது என்று கேட்பதும் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக்; இருக்கும்போது இந்துக்களுக்கு ஏன் ஆர்எஸ்எஸ் இருக்கக் கூடாது என்பதும் ஒன்றுதான்.


நடக்க இருக்கும் 16வது மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு. பாஜக மதவெறி அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். திமுக தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள்ää புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு மதச்சார்பற்ற கூட்டணி என்று கலைஞர் அவர்கள் பெயர் சூட்டியுள்ளார்கள்.

முஸ்லிம் லீக் கட்சியும் மனிதநேயமக்கள் கட்சியும் இடம்; பெற்றுள்ள கூட்டணி எப்படி மதச்சார்பற்ற கூட்டணியாக இருக்க முடியும்? என புத்திசாலித்தனமாக வினா எழுப்புகிறார்கள். இது சரியானதுதானே என்று பலரும் நினைக்கக் கூடும்.

பாஜக என்பது ஆர்எஸ்எஸ் ஸினுடைய அரசியல் பிரிவு. அவர்களின் இலட்சியம் இந்துராஜ்யம் அல்லது இராமராஜ்யம் அமைப்பதே. அந்த இந்துராஜ்யம் அல்லது இராமராஜ்யத்தில் முஸ்லிம்கள் வாழவேண்டுமானால் அவர்கள் இராமனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்கள் இருக்க வேண்டுமானால் அவர்கள் கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறி வருகிறது. அவ்வாறு இல்லையானால் அவர்கள் குடிமக்கள் என்ற உரிமையும் இன்றி உயிர்வாழ மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதுதான் ஆர்எஸ்எஸ் ஸின் குரலாக இருக்கிறது.

குஜராத் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூடக் கிடையாது. அதேபோல உபி நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள 78 பாஜக வேட்பாளர்களில் ஒருவர்கூட முஸ்லிம் கிடையாது. கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து 2000 முஸ்லிம்களுக்குமேல் படுகொலை செய்யப்பட்டார்கள். அதற்காக யாரும் இதுவரை வருத்தப்படவே இல்லை. கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது. அதனால் பதிலுக்குப் பதில் குஜராத் நிகழ்வு என்று கூறுகிறார்கள். பதிலுக்கு பதில் தண்டனை கொடுக்க இவர்கள் யார்? யார் குற்றவாளியோ அவர்களைப் பிடித்து அவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கலாம். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதனை நீதி மன்றம்தான் செய்யவேண்டுமே தவிர சட்டத்தைக் கையிலெடுக்க இவர்கள் யார்? யாரோ செய்த தவறுக்காக அப்பாவி மக்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? முஸ்லிம் செய்தான். அதனால் முஸ்லிம் இனத்தையே  அழிப்போம் என்றால் காந்தியைக் கொன்ற கோட்ஷே ஒரு பார்ப்பான் என்பதனால் அந்தப் பார்ப்பன இனத்தையே பூண்டோடு அழித்திருந்தால் இவர்கள் என்ன செய்திருப்பார்கள்?

எனவே, இப்படிப்பட்ட பேச்சே பாசிசமானது. அயோத்தியிலே மசூதியை இடித்தார்கள். இன்னும் காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதியையும் இடிக்க வேண்டும் என்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய்  நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளையும் சர்ச்சுகளையும் இடிப்போம் என்கிறார்கள். இவர்கள்தான் மதவெறியர்கள். இவர்கள் அமைக்க இருக்கும் அரசுதான் மதவெறி அரசு. அவர்கள் அமைக்க உள்ள அரசுதான் மதசார்புள்ள அரசு.

மாறாக முஸ்லிம் லீக் இருப்பதாலேயே அது மதசார்புள்ள கூட்டணி என்பது ஆர்எஸ்எஸ் கும்பலின் மதவெறியை மறைக்கவே பயன்படும். முஸ்லிம்கள் யாரும் இங்கே முஸ்லிம் ராஜ்யம் அமைப்போம் என்று சொல்லவில்லை. இந்நாட்டிலுள்ள அனைவரும் அல்லாவை வணங்கித்தான் ஆக வேண்டும் என்று கூறுவதில்லை. நாங்களும் இந்த நாட்டுக் குடிமக்களுக்குரிய அனைத்து உரிமைகளுடனும் வாழவேண்டும் என்றுதான் கூறுகிறார்கள்.

ஆடுகள் சங்கம் வைத்திருக்கும்போது ஏன் ஓநாய்களும் சங்கம் வைக்கக் கூடாது என்று கேட்பதும் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக்; இருக்கும்போது இந்துக்களுக்கு ஏன் ஆர்எஸ்எஸ் இருக்கக் கூடாது என்பதும் ஒன்றுதான். ஓநாய்கள் நாள்தோறும் ஒரு ஆட்டை அடித்துத் தின்பது எங்கள் உரிமை என்று கேட்பதற்காக சங்கம் வைத்திருக்கின்றன. ஆடுகள் ஓநாய்களிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கின்றன. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் கண்ணோட்டமே தவறு.

எனவே, ஆர்எஸ்எஸ் தலைமையில் இயங்கும் பிஜேபி என்பது மதவெறி அமைப்பே. அந்த அமைப்புக்கு வாக்களிப்பது முஸ்லிம் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்படோரின் உரிமைகளுக்கும் எதிரானது. ஆகவே, மதவெறி சக்திகளை முறியடிப்போம். அனைத்து மக்களும் அனைத்து உரிமைகளுடனும் வாழவேண்டுமானால் உண்மையான மதச்சார்பற்ற ஒத்த கருத்துள்ள கூட்டணியான திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக