புதன், 12 அக்டோபர், 2016

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்தநாள்விழா

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்தநாள்விழா

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களில் பல பேருக்கு கையெழுத்து மட்டுமே போடத்தெரியும். அதுவே நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டை வண்டிமைதான். இன்றைக்கிருக்கும் பிள்ளைகளுக்கு தாத்தா- பாட்டி பெயர் தெரியும். தாத்தாவுடைய தாத்தா பாட்டியின் பெயர் யாருக்குமே தெரியாது. காரணம் பார்ப்பனரல்லாதார் யாருமே தங்களுடைய வரலாற்றைப் பதிவுசெய்யக்கூடிய அளவிற்கு படிப்பறிவில்லாதவர்களாக இருந்தனர்.

ஆனால் பார்ப்பனர்களைக் கேட்டால் என்னுடைய தாத்தா ஹைகோர்ட் ஜட்ஜாக இருந்தார். அவருடைய தாத்தா வெள்ளைக்கார ஜட்ஜீக்கு குமாஸ்தாவாக இருந்தார். அவருடைய தாத்தா திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தார் என்று கூறுவதுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எங்களுடைய முன்னோர் பரத்வாஜ கோத்திரம் என்பார். கௌடில்ய கோத்திரம் என்பார். கவுசிக கோத்திரம் என்பார். இவர்கள் எல்லாம் ரிஷிகள் முனிவர்கள் என்பார். வேதகாலத்தில் இதிகாச காலத்தில் வாழ்ந்தவர் என்பார். அந்த அளவிற்கு அவர்கள் நூற்றுக்கு நூறு கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். நாங்கள் மட்டுமே அறிவாளிகள். அறிவு முழுக்க எங்களுக்கே சொந்தம் என்று ஆக்கி வைத்திருந்தார்கள்.

சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றார்கள். படிப்பதைக் காதிலே கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றார்கள். மனதிலே இறுத்தி வைத்திருந்தால் நெஞ்சைப்பிள என்றும் உத்தரவு போட்டார்கள். இவ்வளவு கடுமையான தண்டனை இருக்கும்போது எவனுக்காவது படிக்க வேண்டும் என்ற துணிவு வருமா? யாராவது படிப்பதைக் காதுகொடுத்துக் கேட்க தைரியம்தான் வருமா? கேட்டிருந்தாலும் அதை நினைவில் வைக்கும் எண்ணம்தான் வருமா?
முன்பு படிக்கக் கூடாது என்றனர். பின்னர் படிப்பு வராது என்றனர். படித்தாலும் தகுதி – திறமை இருக்காது என்றனர். தகுதியும் திறமையும் தங்களுக்கே சொந்தம் என்று சாதித்தனர் பார்ப்பனர்கள். ஆனால் இன்று என்ன நிலைமை? மருத்துவப்படிப்பில் கடந்த ஆண்டு நூற்றுக்கு நூறு சதவிகிதம் எடுத்த முதல் பத்துப்பேரில் ஒரு பார்ப்பனக் குஞ்சுகூடக்கிடையாது.

எல்லோரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மதிப்பெண்களை அள்ளிக்குவித்து மாநில அளவில் முதல் இடங்களில் வருபவர்களில் பார்ப்பனர்களைத் தேடிப்பிடிக்க வேண்டும்.

இந்த நிலை உருவாக யார் காரணம்? பெரியார் காரணம். எங்களுடைய பிள்ளைகளுக்குப் படிப்பிலும் உத்தியோகத்திலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காகவே காங்கிரசில் சேர்ந்தார். அங்கு அதற்கு எதிர்ப்பு வந்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார். அந்த இடஒதுக்கீட்டை அமுல்படுத்திய நீதிக்கட்சியை ஆதரித்தார். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் அந்த இடஒதுக்கீட்டுக்குத் தடைவந்தபோது வெகுண்டெழுந்து போராடி அரசியல் சட்டத்தை முதல்முதலாகத் திருத்தச்செய்தார். அதன் காரணமாகத்தான் இன்று பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அனைவரும் படித்துப் பட்டம் பெற்றுப் பதவிபல பெற்றுள்ளோம்.அந்த அறிவுலக ஆசானின் 133 வது பிறந்தநாள் செப்டம்பர் 17. அதனை நன்றியுள்ள தமிழர் அனைவரும் விழாவாகக் கொண்டாடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக