வியாழன், 13 அக்டோபர், 2016

சின்ன அய்யா, பெரிய அய்யா, ஏனய்யா அவர்கள்மீது உங்களுக்குக் கோபம்?


 அய்யா மூணு சதவிகிதம் இருக்கிற பார்ப்பான் 97 சதவிகிதம் பேரை சூத்திரன் என்று சொன்னான். சூத்திரன் என்றால் வைப்பாட்டி மகன் என்று மனுதர்மம் சொல்கிறது. அதற்காக பெரிய அய்யாவுக்கும் சின்ன அய்யாவுக்கும் குருநாதர்களுக்கும் கோபம் வரவில்லை. மற்ற பெரிய ஜாதிக்காரங்களுக்கும் கோபம் வரவில்லை. அந்த சூத்திரன் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறு என்றான்.

அப்பொழுதும் கோபம் வரவில்லை. வெள்ளைக்காரன் கட்டி வச்ச பள்ளிக் கூடத்திலும் நீதிக்கட்சி ஆட்சியில் வந்த பள்ளியிலும் காமராசர் கொண்டு வந்த பள்ளியிலும் படித்து வந்த பிறகு தகுதி – திறமை உங்களுக்கில்லை. அதற்கு ஒட்டுமொத்த குத்தகை நாங்களே என்றார்கள். அதற்கும் கோபம் வரவில்லை.
எல்லாப்பதவியிலும் பார்ப்பானே இருந்தான்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் கலெக்டர் பதவிகளில் இந்தியர் என்ற பெயரில் இருந்தவர்கள் 11 பேர். இதில் 9 பேர் பார்ப்பனர்கள். ஜில்லா முன்சீப்புகளில் 200 பேரில் 150 பேர் பார்ப்பனர்கள். 61 சப் ஜட்ஜூகளில் 45 பேர் பார்ப்பனர்கள். அதுபோல மேல்மட்ட பதவிகளில் முக்கால்வாசிப்பேர் பார்ப்பனர்களே! பார்ப்பனர்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவிகிதம். அனுபவித்தது 75லிருந்து 90 சதவிகிதம். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1894ல் பட்டம் பெற்றோர் 3 சதவிகிதமுள்ள பிராமணர்கள் 69 சதவிகிதம் பேர். 87 சதவிகிதமுள்ள பிராமணரல்லாதார் 19 சதவிகிதம். 6 சதவிகிதமுள்ள முஸ்லிம்கள் 0.7 சதவிகிதம் மட்டுமே! தாழ்த்தப்பட்டோர் எவருமே இல்லை. 1800ல் துவக்கப்பட்ட மெட்ராஸ் ஹைகோர்ட்டில் ஒருவர்கூட பார்ப்பனரல்லாத நீதிபதி வரவில்லை. இதைப் பார்த்தும் உங்களுக்குக் கோபம் வரவில்லை.

மெடிக்கல் காலேஜில் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்கனும் என்று சட்டம் வைத்திருந்தான். அதைப்பார்த்தும் உங்களுக்குக் கோபம் வரவில்லை. அந்தச் சட்டத்தை நீதிக்கட்சி மாற்றாமல் இருந்தால் சின்ன அய்யாவும் பெரிய அய்யாவும் மருத்துவராகி இருக்க முடியுமா?

மண்டல் கமிஷன் அறிக்கையை குழிதோண்டிப் புதைக்கச் சொன்ன இந்துக் கூட்டத்தின்மீதும் உங்களுக்குக் கோபம் வரவில்லை. அதை அமுல்படுத்திய வி.பி.சிங் அவர்களது ஆட்சியைக் கவிழ்த்தார்கள். அதற்கும் உங்களுக்குக் கோபம் வரவில்லை. மண்டல் கமிஷன்படி இட ஒதுக்கீட்டை அய்.அய்.டி யிலும் அகில இந்திய மருத்துக்கல்வியிலும் இன்னும் அமுல்படுத்தவே இல்லை. அகில இந்திய மருத்துவக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த அன்புமணி இராமதாஸ் ஆனந்த் அய்யரிடம் என்ன பாடுபட்டார் தெரியும்ல. அதைப் பார்த்தும் உங்களுக்குக் கோபம் வரவில்லை.


தற்பொழுது மத்திய அரசின் செயலாளர்கள் 102பேரில் அனைவருமே பார்ப்பனர்கள். உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளில் தாழ்த்தப்பட்டவர் ஒரே ஒருவர். பிற்படுத்தப்பட்டவர் யாரும் இல்லை. பிரதம மந்திரி அலுவலகம்ää ஜனாதிபதி அலுவலகம் முழுக்க பார்ப்பன ஆதிக்கம். பொதுத்துறைகளில் இட ஒதுக்கீடு முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. தனியார் துறையில் அது எட்டிப்பார்க்கவில்லை. இதைப் பார்த்த பிறகும் உங்களுக்குக் கோபம் வரவில்லை.

இப்பத்தான் முதல் தலைமுறையாப் படிச்சுப்புட்டு எங்கேயாச்சும் ஒரு விஏஓ, எங்கேயாச்சும் ஒரு எஸ்அய், எங்கேயாச்சும் ஒரு தாசில்தார், கொஞ்சம் வாத்தியார், அபூர்வமா சில நீதிபதிங்க என்று சில இடங்களில் வந்திருக்கிற தாழ்த்தப்பட்டவனப் பார்த்து உங்களுக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருதே! அது ஏன்?

எங்கே பாத்தாலும் இந்த 18 சதவிகிதக்காரன்தான் இருக்கிறான். அவன்கிட்டத்தான் நாமெல்லாம் கைகட்டி நிக்க வேண்டியிருக்குன்னு சொல்றீங்களே! இது உண்மையா? அரசாங்கமே கொடுக்கிற புள்ளி விவரம் அப்படி இல்லீங்களே! இன்னும் முதல் நிலை அதிகாரிகளில் 4 சதவிகிதம்கூட வரவில்லைங்கிறாங்களே! இரண்டாம் நிலை மூன்றாம் நிலை அதிகாரிகளில் ஏழு சதவிகிதம் எட்டு சதவிகிதம் கூட நிரம்பவில்லையாமே! அப்படி இருக்க எங்கே பார்த்தாலும் அவன்தான் இருக்கிறான்னு சொல்றீங்களே! அவன் என்ன உங்க பங்கையா எடுத்துக்கிட்டான்?

அவன் பங்கு, உங்க பங்கு எல்லாத்தையும் மூணு சதவிகிதம் இருக்கிற பார்ப்பான் எடுத்துக்கிட்டு 70 சதம் 80 சதம் சில இடங்களில் நூறு சதம்கூட அனுபவிக்கிறானே! அவனப் பாத்துக் கோபப்படாம இவனப் பாத்து ஏங்கய்யா கோபப் படுறீங்க?

நேற்றுவரை தலித்தான அவன்  நம்மிடம் கைகட்டி நின்றான். அவனிடம் நாம் சென்று கைகட்டி நிற்பதா? என்கின்ற ஆதங்கம்தானே இதில் மேலோங்கி இருக்கிறது? முழங்காலுக்குக் கீழே வேட்டியணியாதே! என்று கொடுமைப்படுத்தினோம். இன்று அவன் ஜீன்ஸ் பேண்ட் போட்டு உலா வருகிறானே! தோளிலே துண்டு போடாதே என்றோம். இன்று கோட் சூட் போட்டு டை கட்டி வருகிறானே! காலிலே செருப்புப்போடாதே என்று மிரட்டி வைத்தோம். இன்று விலை உயர்ந்த ஷ_க்களை அணிந்து வருகிறானே என்கின்ற ஆத்திரத்தால் கோபப்படுறீங்களா? தெருவிலே நடக்காதே என்றோம். இன்று அவன் காரிலே உல்லாசமாய் வருகின்றானே என்கின்ற பொறாமை உணர்ச்சியாலே கோபப்படுறீங்களர்?

அவன் வீட்டுப் பெண்களை தங்க நகை அணியக் கூடாது என்று கட்டாயப்படுத்தினோம். இன்று அவர்கள் பட்டுப்புடவையும் சுடிதாரும், நெக்லேசும் காசுமாலையும் கம்மலுமாய் ஜொலிக்கிறார்களே என்ற ஆதங்கத்தினால் கோபப்படுறீங்களா?

அவன் உங்களுக்குச் செய்த துரோகம்தான் என்ன? நீங்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்தவர்கள்தானே? அவர்கள் உங்கள் கால் கல்லிலும் முள்ளிலும் வெயிலிலும் நோகாமல் இருக்க செருப்புத் தைத்துக் கொடுத்தவர்கள்தானே! உங்கள் வீட்டு சாக்கடையைச் சுத்தம் செய்து உங்களை சுகாதாரமாக வாழ வைத்தவர்கள்தானே? அவர்கள் உங்கள் வயலில் வேலை செய்து நீங்கள் உங்களுக்கு வயிறாரச் சோறுபோட்டு நீங்களாகப் பார்த்துக்கொடுக்கும் பழைய சோத்தைத் தின்னுப்புட்டு மகாராசன் என்று வாழ்த்தியவர்கள்தானே?

உங்கள் வீட்டுப் பெரிசுகள் செத்துப்போனாலும், ஆடு மாடு செத்துப்போனாலும் நாறிப்போகாமல் இருக்க எடுத்து அடக்கம் செய்துவிட்டு நீங்கள் போடும் கால்பணம் முழத்துண்டு வாய்க்கரிசியில் வாழக்கையை ஓட்டியவர்கள்தானே?

அவர்கள் தங்கள் தொழிலைச் செய்யாமல் இருந்திருந்தால் நட்டம் அதிகம் உங்களுக்குத்தானே? ஆனால் உங்கள் எல்லாரையும்விட ஒசந்த சாதி என்கிற பார்ப்பான் உங்களுக்கு என்ன நன்மை செய்தான்? அவன் தன் தொழிலைச் செய்யாமல் நிறுத்தியிருந்தால் யாருக்கு என்ன நட்டம் ஏற்பட்டிருக்கும்? கோயிலில் மணி அடிப்பதை நிறுத்தி விட்டால் நட்டம் யாருக்கு? திதி, தெவசம், கிரஹப்பிரவேசம் செய்வதைப் பார்ப்பான் நிறுத்தி விட்டால் நாட்டில் என்ன கேடு நிகழும்?

உங்கள் வீட்டில் வந்து உங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்கிறோம் என்ற பேரில் உனது பெண் முதலில் சோமனுக்கு மனைவியாக இருந்தாள். பின்னர் கந்தர்வனுக்கு மனைவியாக இருந்தாள். பின்னர் அக்னிக்கு மனைவியாக இருந்தாள் என்று உங்கள் வீட்டுப் பெண்களைத் தேவடியாள் என்று சொன்னான். இன்னமும் சொல்லி வருகிறான்.

உங்கள் தாயின் திதி திவசத்துக்கு வந்து உங்கள் தாயை விபச்சாரி என்று சொல்கிறான். நீங்கள் கட்டிய கோவிலில் நீங்கள் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்கிறான். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட யாருமே அர்ச்சகராகக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்குகிறான்.

இதைப் பார்த்தெல்லாம் உங்களுக்குக் கோபம் வரவில்லை. ரோஷம் வரவில்லை. வெட்கம் மானம் சூடு சொரணை வரவில்லை. உங்களுடைய உரிமைகளைப் பறித்த பார்ப்பானிடமிருந்து உரிமைகளைப் பெற பார்ப்பனரல்லாதார் கூட்டமைப்பை ஏற்படுத்தி இட ஒதுக்கீட்டை, வகுப்புவாரி உரிமையைப் பெற்று தன்மானத்தை மீட்டெடுத்துத் தந்தது திராவிட இயக்கம். பெரியார் இயக்கம். அந்த திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கொஞ்சமும் நாணயமின்றிச் சொல்லிக்கொண்டு தலித் அல்லாதார் கூட்டமைப்பு என்று துவக்குகிறீர்களே! அந்த தலித்துகள் தமிழர்கள் இல்லையா? அவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட நட்டம் என்ன? பாதிப்பு என்ன? இழிவு என்ன? அவர்களிடமிருந்து எதனை நீங்கள் மீட்கப் போகிறீர்கள்? கொஞ்சமாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

அவர்களா உங்கள் உரிமையைப் பறித்தார்கள்? அவர்களா உங்களைப் படிக்கக் கூடாது என்று சொன்னார்கள்? அவர்களா உங்களை வேலைக்குப் போகக் கூடாது என்று சொன்னார்கள்? அவர்களா உங்களுக்குத் தகுதி – திறமை கிடையாது என்று சொன்னார்கள்?

அப்படியிருக்க ஏனய்யா அவர்கள்மீது உங்களுக்குக் கோபம்? அவர்களின் அறிவைப்பார்த்துத் திறமையைப் பார்த்து படிப்பைப் பார்த்து பதவியைப்பார்த்துப் குணத்தைப் பார்த்துப் பிடித்துப்போய் ஏதாவது ஒரு பெண் அவர்களை விரும்பினால் யாருக்கு என்ன நட்டம்? பார்ப்பன வீட்டுப் பெண்கள்கூட பார்ப்பனரல்லாத இளைஞர்களை விரும்புகிறார்கள். தாழ்த்தப்பட்டவனையும் விரும்புகிறார்கள். உங்களுக்கு வரும் கோபத்தைப் போல் பார்ப்பனர் எவருக்கும் வருவதில்லையே! எங்கிருந்தாலும் நமது பெண் நன்றாக இருந்தால் போதும் என்று பார்ப்பான நினைக்கிறானே! அந்த எண்ணம் உங்களுக்கு ஏன் வருவதில்லை?

உங்களுக்கு அடிமையாக இருந்தவன் உங்களுக்கு சம்மந்தியாகவோ மருமகனாகவோ வருவதை நீங்கள் விரும்புவதில்லை. அவன் என்றென்றைக்கும் உங்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அவ்வளவுதானே! அப்படியானால் பார்ப்பானுக்கு நீங்கள் வைப்பாட்டி மக்கள் என்ற இழிவைத் துடைக்க நீங்கள் முன்வர மாட்டீர்கள். அப்படித்தானே!

அவனுக்கு வைப்பாட்டி மகன் என்ற பெயர் இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு அடிமைகள் மட்டும் இருந்தால் போதும். அவ்வளவுதானே! சிந்தியுங்கள். மனிதராக இருப்பது முக்கியமல்ல. மானமுள்ள மனிதராக இருக்க வேண்டும். மானமிருந்தால் மட்டும் போதாது. மற்றவர்களது மானம் மரியாதைக்கும் நம்மால் பங்கம் வரக்கூடாது. சிந்திப்பீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக