திங்கள், 17 அக்டோபர், 2016

தந்தை பெரியாரது கொள்கை மனித நேயத்தின்பாற்பட்டது


மனித இன வளர்ச்சியில் தடைக்கற்கள் ஏராளம் உண்டு. அந்தத் தடைக்கல்லில் மிக முக்கியமானது மதம். போதையூட்டக்கூடிய கள், சாராயம், பிராந்தி, விஸ்கி வகையறாக்கள் குடித்தவனுக்குத்தான் போதையளிக்கும். ஆனால் மதம் மனதில் நினைத்தாலே போதை உண்டாக்கக் கூடியது. இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. உலகில் ஏற்பட்ட பூகம்பம், வெள்ளம், இயற்கைச் சீற்றங்கள், உலகப் போர்கள் இவற்றால் அழிந்த மனித உயிர்களைவிட மதங்களுக்காக நடந்த சண்டையில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒழுக்கத்தைப் போதிக்கத்தான் மதங்கள் உண்டாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் இன்று ஒழுக்கக் கேடுகள் மதகுருமார்களால்தான் ஏராளம் நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு குற்றங்களைச் செய்துவிட்டு சிறையில் இருக்கும் கைதிகள் அனைவருமே கிட்டத்தட்ட கடவுள், மத நம்பிக்கையாளர்களே! கடவுளுக்காகவும் மதத்திற்காகவும் மனித உயிர்களைக் கொல்வது பாவமல்ல என்று மதவாதிகள் நம்புகிறார்கள். ஒரு மத நம்பிக்கையாளர்தான் இன்னொரு மத நம்பிக்கையாளரை ஒழித்துக்கட்ட நினைக்கிறார். அங்கே மனிதநேயம் செத்துப் போகிறது.

 ஒவ்வொரு மதமும் இன்னொரு மத நம்பிக்கையாளரைத்தான் எதிரியாகக் கருதுகிறது. ஆனால் இந்து மதம் தன் சொந்த மதத்துக்காரனையே எதிரியாக, இழிவானவனாக, கீழானவனாக நடத்துகிறது. தனது மதத்தை நம்புகின்ற, தான் வணங்கக் கூடிய கடவுளை வணங்கக் கூடிய, தான் கடைப்பிடிக்கின்ற சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கின்ற இன்னொரு மனிதனை இந்து மதத்தில் உள்ள உயர்ஜாதி எனப்படுபவர் ஏற்றுக்கொள்வதில்லை.

சமுதாயம் சிறப்பாக வாழ்வதற்கு அத்தியாவசியமான தொழிலைச் செய்யக் கூடிய தொழிலாளி இந்து மதத்தில் கீழ்ஜாதி. ஒரு நகரத்தில் குப்பை கூளங்கள் சேராமல் சுத்தம் செய்து, சாக்கடையைக் கழுவி, மனித மலத்தையே அப்புறப்படுத்துகிற அத்தியாவசியமான தொழிலைச் செய்கிறவன் தோட்டி. ஒரு மனிதனோ மாடோ விலங்குகளோ இறந்துவிட்டால் அந்தப் பிணத்தை அப்புறப்படுத்துபவன் வெட்டியான். ஒரு மனிதனின் முகத்திலும் தலையிலும் வளரும் தேவையற்ற மயிரை மழித்து அழகூட்டுபவன் அம்பட்டன். ஒருவரது உடையிலுள்ள அழுக்கை நீக்கி சுத்தமான ஆடை வழங்கும் தொழிலாளி வண்ணான் என மிகமிக முக்கியமான தொழிலைச் செய்பவனெல்லாம் இந்து மதத்தில் இழிஜாதி என்று ஆக்கப்பட்டுள்ளார்கள். 

இவர்கள் ஒரு ஆறு மாதத்திற்கு அவர்களது பணியை நிறுத்திவிட்டால் சமுதாயம் மிகுந்த பாதிப்படையும் என்பதில் எந்த வித அய்யமுமில்லை. அதுபோல் ஒவ்வொரு தொழிலாளியும் மிக முக்கியமானவர்களே! அவர்கள் அனைவரும் இந்து மதத்தில் கீழ்ஜாதி.

ஆனால் கோயிலில் சின்ன மணியை அடித்துக்கொண்டு கல்லால் செய்த உருவம் சாப்பிடுவதாகச் சொல்லி ஆறுவேளையும் படையல் செய்து வயிறு வளர்க்கும் பார்ப்பான் பிராமணன். உயர்ந்த ஜாதி. அவன் செய்ய வேண்டிய பூஜை, புனஸ்காரங்கள், சடங்குகள், திதி, தெவசம், கருமாதி, கலியாணம் இவற்றைச் செய்ய முடியாது என்று ஆறு மாதத்திற்குப் பார்ப்பனர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சமுதாயத்திற்கு ஏற்படும் நட்டம் என்ன? மாறாக நன்மைகள் ஏராளம் நடக்குமா? இல்லையா? அந்த பிராமணன் சுகபோகமாக வாழத்தான் சமுதாயத்திலுள்ள அனைவரும் உழைக்க வேண்டும் என்று ஆக்கி வைத்திருப்பது இந்து மதமல்லவா?

அந்த இந்து மதம்தானே மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு. பார்த்தால் பாவம், நிழல் பட்டால் தோஷம் என்கிறது? இந்தத் தீண்டாமைதான் உலகிலுள்ள கொடுமைகளிலே மிக மோசமான கொடுமை என்றவர் தந்தை பெரியார். அவரது கொள்கை மனித நேயத்தின்பாற்பட்டது. அதனால்தான் கடவுளை மற என்ற பெரியார் மனிதனை நினை என்றார்.

அவரது கொள்கைகளை இளம் தொழிலாளர் மத்தியில் கொண்டு செல்ல 16-06-2013 அன்று முழு நாள் பயிலரங்கு நடத்தப்பட உள்ளது. அதில் பங்குகொண்டு பெரியாரியலைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ இளம் தோழர்களை அன்புடன் அழைக்கிறோம்.   கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்க : 94421 48697ää 9443923602        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக