செவ்வாய், 25 அக்டோபர், 2016

இந்துமதம் வாழ்வியல் தத்துவம் என்றால் அது யாருக்கு?


 இந்துமதம் ஒரு வாழ்வியல் தத்துவம் என்று ஒரு நீதிபதி சொல்லிவிட்டாராம். மதவெறிக்கும்பல் அதனைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறது. அந்த நீதிபதியே நான் சொன்னதை மதவெறியர்கள் தவறாகப் புரிந்துகொண்டு தங்களது மதவெறித்தனத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் நினைக்கும் பொருளில் நான் கூறவி;ல்லை என சொல்லிவிட்டார்.

 இந்துமதம் வாழ்வியல் தத்துவம் என்றால் அது யாருக்கு? என்று மதவாதிகளைக் கேட்டால் அதற்கெல்லாம் அவர்கள் சரியான பதிலை நாணயமாகச் சொல்ல மாட்டார்கள்.

இந்துமதம் ஒரு சொர்க்கம்தான். யாருக்கு? உயர்ஜாதிப் பார்ப்பனக்கும்பலுக்கு. அவர்கள் சொர்க்க வாழ்வு வாழ்வதற்காக மற்ற கீழ்ஜாதி மக்கள் அனைவரும் நரக வாழ்வு வாழவேண்டும். இதனை அண்ணல் அம்பேத்கார் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.
பார்ப்பான் நல்ல வீட்டில் வசிக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய உழைப்பைக்கொடுக்கக் கூடியவர்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கீழ்ஜாதி மக்கள். அந்த வீட்டுக்கு செங்கல் சுமப்பது, சிமென்ட் கலப்பது மண்சுமப்பது எல்லாம் இந்த மக்கள். அந்த சூத்திரர்கள் செங்கல்லால் கட்டப்பட்ட வீட்டிலோ ஓடுபோட்ட வீட்டிலோ வசிக்கக் கூடாது என்கிறது மனுதர்மம்.

அத்துடன் அந்த வீட்டைக் கட்டும்போது வீட்டின் அனைத்துப் பகுதியிலும் கீழ்ஜாதி மக்கள் புலங்கியிருப்பார்கள். அதனால் தீட்டாகிவிட்டது. அந்தத் தீட்டைப்போக்க கிரஹப்பிரவேஷம் என்ற ஒன்றை நடத்தி மாட்டை வீட்டுக்குள் விட்டு சிறுநிர் கழிக்கச் செய்தால் தீட்டுப்போய்விடும் என்கிறது மனுதர்மம். அது கீழ்ஜாதி மக்களை மாட்டைவிடக் கேவலமாக இழிவுபடுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே இன்றைக்கு வீடுகட்டும் கீழ்ஜாதி மக்கள் பார்ப்பனர்கள் செய்கின்ற அதே சடங்கைச் செய்து தங்கள் சமுதாயத்திற்கு இழிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
உழவுத்தொழில் இல்லையென்றால் உலகமே இயங்காது என்பத வள்ளுவர் வாக்கு. ஆனால் அந்த உழவுத்தொழிலைப் பாவமான தொழில் என்கிறது மனுதர்மம். அந்த உழவர்களைச் சூத்திரர்களாகக் கீழ்ஜாதி மக்களாக ஆக்கியது மனுதர்மம். அந்த உழவர்கள் என்றைக்கும் நல்ல சாப்பாடு சாப்பிட்டதாக வரலாறு இல்லை. விவசாய உற்பத்திப் பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் நல்ல பொருள்களையெல்லாம் வியாபாரிகளிடம் விற்றுவிட்டு கழித்துக்கட்டப்பட்ட பொருள்களையே உண்கிறார்கள். குறிப்பாக ஒரு விவசாயி கத்தரிக்காய் சாகுபடி செய்கிறாரென்றால் நல்ல கத்திரிக்காய்களையெல்லாம் விற்றுவிட்டு பூச்சிக்கத்திரிக்காயை பயன்படுத்துகிறார். உழவுத்தொழிலுக்கே சம்மந்தமில்லாத பார்ப்பனர்கள் மிக உயர்ந்த உணவுவகைளை உண்டுகொழுப்பதுதான் கடந்த காலத்திலிருந்து இன்றுவரையுள்ள வரலாறு.
நெசவுத்தொழில் இல்லையென்றால் மனிதன் ஆடையற்ற அரைமனிதனாகத்தான் இருப்பான். ஆனால் அந்த ஆடையை நெசவுசெய்து கொடுக்கும் தொழிலாளி என்றைக்கும் நல்ல துணிமணி உடுத்தியதாக வரலாறில்லை. அந்த நெசவுப்பக்கமே தலைவைத்துப் படுக்காத பார்ப்பான் பாப்பாத்திகள் விதவிதமான உடைஉடுத்தி வீதிஉலா வந்தது வரலாறு. ஆனால் உழைக்கும் மக்கள் அனைவருமே நல்ல உடை உடுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டனர். குறிப்பாகப் பெண்கள் மேலாடை அணிவதற்குக் கூட நம்நாட்டில் உரிமை இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.
அனைவரும் வெயிலிலும் கற்களிலும் முட்களிலும் நடந்தால் காலுக்கு வரும் பாதிப்பிலிருந்து காப்பாற்றுவதற்கு செருப்புத் தைத்துத் தரும் தொழிலாளி அவன் காலில் செருப்பணிய அனுமதியில்லை. இது அவனுக்கு சொர்க்கமா?
மற்றவர்கள் வீடும் தெருவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக துப்புரவுப் பணியில் ஈடுபடும் தொழிலாளி வசிக்கும் இடமோ சுகாதாரமற்ற சாக்கடை ஓரத்திலேதான். அவர்களுக்கு நல்ல சாக்கடை வசதியும் தண்ணீர் வசதியும் கிடையாது. அதேபோல மற்றவர் மலத்தைத் தலையிலே சுமந்து சுத்தம் செய்யும் அநதத் தொழிலாளிக்கு இந்து மதம் கொடுத்த பெயர் தோட்டி. அவர்களைத் தொட்டாலே தீட்டு என்பது. இது அவர்களுக்கு வாழ்வியல் நெறியா?
ஒருமனிதன் இறந்துவிட்டால் சில மணிநேரங்களில் அப்பிணம் அழுகி நாற்றமெடுத்து ஊரையே நோய்க்கிடங்காக மாற்றிவிடும். அப்படி நாற்றமெடுத்த பிணத்தின் அருகில் இறந்தவர்களின் உறவினர்களே நெருங்க முடியாது. ஆனால் அப்பிணத்தை பக்குவமாக சிதையில் வைத்து முழுவதும் எரித்து சாம்பலை எடுத்துத் தரும் தொழிலாளியை வெட்டியான் என்று இழிவுபடுத்தி அவனைத் தீண்டத்தகாதவன் ஆக்கிய இந்துமதம் யாருக்கு வாழ்வியல் நெறி?
ஒரு ஆண்மகன் பிறந்ததிலிருந்து முகச்சவரம் செய்யாமல் முடியை வெட்டிக்கொள்ளாமல் இருந்தால் காட்டுமிராண்டியாகத்தான் அலைய வேண்டியிருக்கும். அப்படி காட்டுமிராண்டிகளாக இல்லாமல் அவனுடைய முகத்தை மழித்து தலையில் உள்ள முடியை வெட்டி அழகுபடுத்தும் தொழிலாளிக்குப் பெயர் அம்பட்டன். அதேபோல் அழுக்கான உடைகளைத்துவைத்து சுத்தமான உடையாக மாற்றித்தரும் தொழிலாளிக்குப் பெயர் வண்ணான் என்பது. அவர்கள் அழகாக முடியை வைத்துக்கொண்டாலோ சுத்தமான துணி உடுத்தினாலோ வண்ணார ஒயிலு அம்பட்ட எழிலு என்று கிண்டலடிக்கும் நிலை ஒரு காலத்தில் இந்துமதம் உருவாக்கி வைத்திருந்தது. இது அவர்களின் வாழ்வியல் நெறியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக