வியாழன், 13 அக்டோபர், 2016

ஜாதியை ஒழிக்க அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்


 தந்தை பெரியாருடைய ஒவ்வொரு செயலும் ஜாதி ஒழிப்பை மய்யப்படுத்தியே அமைந்தது. ஜாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டது. பெரியாரின் உழைப்பால் கல்வி கிடைத்தது. அதே ஜாதியினால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. பெரியாரின் உழைப்பால் இட ஒதுக்கீடு பெற்றோம். தெருவில் நடக்கவும், செருப்பணியவும், துண்டுபோடவும் உரிமை பெற்றோம். ஜாதியின் ஆதிக்கம் பெரியாரால் தகர்க்கப்பட்டது.

 ஜாதி ஒழிக்கப்பட வேண்டியது என்பதைப் பலரும் ஒப்புக்காவது ஒத்துக் கொள்கிறார்கள். அவர்கள் உடனடியாகச் சொல்வது இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடும் என்பதுதான். இது குசும்புத்தனமான பேச்சு. உண்மையில் ஜாதி எங்கே சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறது? கோயில் கருவறையில் அல்லவா? அந்தக் கருவறையில் சென்று அர்ச்சகர் பணிபுரிய என்ன தகுதி?

மற்ற எல்லாவற்றிலும் தகுதி – திறமை பேசுபவர்கள் இந்த விசயத்தில் தகுதி திறமையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பிறப்பால் பிராமணன் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்ற நிலையை வைத்துள்ளான். அந்த பார்ப்பான் ஒழுக்கமானவனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. காஞ்சிபுரம் தேவநாதன் மாதிரி கோயில் கருவறையை  கர்ப்பம் உண்டாக்கும் அறையாக மாற்றினாலும் அவன் பிராமணன்தானாம். அவனைப் போன்றவர்கள்தான் அர்ச்சகராக இருக்க வேண்டுமாம். இதையெல்லாம் அந்த ஜாதி ஒழிப்பு வீரர்கள்(?) பேச மாட்டார்கள்.

 பிராமணரல்லாத அனைவருக்குமே கோயிலில் நுழைய உரிமை இல்லையாம். கோயில் கட்ட பணம் கொடுத்தவன் தமிழன், கொத்தனார், சித்தாள் வேலை பார்த்தவன் தமிழன், சிலை வடித்தவன் தமிழன். இவர்கள் யாருக்கும் உரிமையில்லையாம். இவர்கள் நுழைந்தால் சாமி தீட்டாகி விடுமாம். சாமி சிலையைத் தொட்டால் சாமி செத்துப் போகுமாம்.

1872ல் நடந்த ஒரு வழக்கில் எந்தெந்த சாதிக்காரன் எந்தெந்த இடத்தில் நின்று கடவுளை வணங்க வேண்டும் என்று தீர்ப்பே சொல்லி இருக்கிறான்.  பார்ப்பான் கருவறை வரை செல்லலாம். சத்திரியன் அர்த்த மண்டபம் வரை செல்லலாம் சூத்திரன் கொடிமரம் வரை செல்லலாம். தீண்டத்தகாதவன் கோயிலுக்குள்ளேயே நுழையக் கூடாது. கோபுரம் எவ்வளவு தொலைவிலிருந்து பார்;த்தால் கண்ணுக்குத் தெரிகிறதோ அவ்வளவு தொலைவில் இருந்த கோபுரத்;தைப் பார்த்துத்தான் வணங்கவேண்டும் என்று தீர்ப்பு வந்தது. அப்படி மீறி கோயிலுக்குள் நுழைந்தால் அதற்குப் பரிகாரம் என்ன தெரியுமா?         

 வைகானச ஆகமம் சொல்கிறது “அர்ச்சகர் அல்லாத பிராமணன் சாமி சிலையைத் தொட்டுவிட்டால் ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் புனிதமாய்;விடும். சத்திரியன் கருவறையில் நுழைந்தால் 7 கலசம் வைக்கவேண்டும். வைசியன் தொட்டால் 24 கலசமும் சாந்தி ஹோமமும் பிராமணர்க்கு போஜனமும் நடத்த வேண்டும். சூத்திரன் தொட்டுவிட்டால் 108 கலசமும் மகா சாந்தி ஹோமமும் பிராமணர்க்கு போஜனமும்; செய்ய வேண்டும்” என்று சொல்லப்பட்டுள்ளது. 

இதற்கெல்லாம் பார்ப்பான் சொல்லும் காரணம் நீங்களெல்லாம் கீழ்ஜாதி. எங்களின் வைப்பாட்டி பிள்ளைகள் என்பதுதான். இது ஜாதி தர்மத்தைப் பாதுகாக்கிற விசயமில்லையா? இவையெல்லாம் அந்த ஜாதி ஒழிப்பு வீரர்களின் கண்களுக்குத் தெரியாது. அவர்கள் கண்களை உறுத்துகின்ற விசயம் இட ஒதுக்கீடுதான்.       

 தந்தை பெரியார் மனிதனுக்கு மானமும் அறிவும் மிகமிக முக்கியம் என்றார். அந்த மானத்தை மீட்க ஜாதி ஒழிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியமல்லவா? அந்த ஜாதியை இன்னமும் கெட்டியாகப் பாதுகாக்கிற இடம் கோயில் கருவறை என்பதால்தான் தந்தை பெரியார் ஜாதியை ஒழிக்க அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றார். மானமிகு கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றினார்.

பார்ப்பனர்கள் அதற்குத் தடை வாங்கி இருக்கிறார்கள். மனுதர்மம் எங்கே இருக்கிறது என்று இன்னுமும் சிலர் கேட்கிறார்கள். அந்த மனுதர்மத்தின்படிதான் தடை போடப்பட்டிருக்கிறது. அந்தத் தடையை அடித்து நொறுக்குவோம். கலைஞர் அவர்கள் கொண்டு வந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை அமுல்படுத்த திராவிடர் கழகம் ஆகஸ்ட் 1ந்தேதி நடத்த உள்ள ஆர்;ப்பாட்டத்தில் மான உணர்வுள்ள அனைத்துத் தமிழர்களும் கலந்துகொண்டு  வெற்றி பெறச் செய்வோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக