வெள்ளி, 14 அக்டோபர், 2016

பொது சிவில் சட்டம்



ஹிந்துக்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் ஆர்எஸ்எஸ், பாஜக, இ.முன்னணி, பிஎம்எஸ் கும்பல் உண்மையில் இந்துக்கள் அனைவருக்கும் பாடுபடுகின்ற இயக்கமா?

1982ல் குஜராத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உயர் பட்டப்படிப்பான எம்டி,எம்எஸ் படிப்புக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அன்று அம்மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு 2 சதவிகித இட ஒதுக்கீட்டினை வழங்கியது. உடனே அம்மாநில ஆர்எஸ்எஸ், பிஜேபியினர் அதனை எதிர்த்துக் கடுமையாகப் போராடினர். பயங்கர வன்முறை அங்கு நிலவியது. உயர்ஜாதி ஊடகங்கள் அதனை ஊதிப் பெருக்கின. அந்தக் கலவரத்தை ஆதரித்து தமிழகத்தில் ஊர்வலங்கள் நடத்தத் திட்டமிட்டனர். அந்த ஊர்வலத்தை எதிர்த்து திராவிடர் கழகமும் ஊர்வலம் நடத்துவோம் என்று திராவிடர் கழகத்தலைவர் அய்யா வீரமணி அறிக்கை விட்டவுடன் உயர்ஜாதியினரின் ஊர்வலத்துக்கு அளித்திருந்த அனுமதியை அன்றைய எம்ஜிஆர் அரசு ரத்து செய்தது. அதனால் இங்கு அரங்கேற இருந்த வன்முறை தடுத்து நிறுத்தப்பட்டது.

1989 ல் பிரதமராக வாராது வந்த மாமணி வி.பி. சிங் அவர்கள் மண்டல் குழு அறிக்கையினை அமுல்படுத்தி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தியபோது ஆர்எஸ்எஸ் பிஜேபி கூட்டம் அவரது ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அத்துடன் உயர்ஜாதிக் கும்பல் நாடெங்கிலும் பயங்கர வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப்பட்டது. குஜராத்தில் நியாய விலைக் கடையிலிருந்து மண்ணெண்ணெய் வாங்கி வந்த இளைஞன்;மேல் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொளுத்தி விட்டு இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தியதால் அதனைக் கண்டித்து அந்த இளைஞன் தீக்குளித்து மாண்டுபோனான் என்று ஊடகங்கள் கூசாமல் புளுகின.

இவ்வாறு தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் வன்முறையை ஏவிவிட்ட அதே கும்பல்தான் குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் சாவுக்கும் காரணமாய் அமைந்தது. தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரானவர்கள்தான் தாழ்த்தப்பட்டோரையும் பிற்படுத்தப்பட்டோரையும் இந்துக்கள் என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரம் செய்யத் தூண்டுகிறார்கள்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூறி மதவெறியைத் தூண்டுவதும் அவர்கள்தான். அவர்கள் சொல்லும் இந்து மதத்திலேயே அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்கிறதா? அனைத்து இந்துக்களுக்கும் பொதுவான சுடுகாடு எங்காவது உண்டா? கிராமங்கள் அனைத்திலும் உயர்ஜாதியினருக்குத் தனி சுடுகாடும் தீண்டத்தகாதவர்களுக்கு தனி சுடுகாடும் என்ற நிலைதானே இன்னமும் நிலவுகிறது?

இன்னமும் தாழ்த்தப்பட்டவர்களது பிணத்தை எடுத்துச்செல்லும் பாதைக்காகச் சண்டை நடந்துகொண்டுதானே இருக்கிறது? பொது சிவில் சட்டத்துக்காக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை முஸ்லிம்களோடு மோத விடுபவர்கள் பொது சுடுகாடு வேண்டும் என்று போராடாதது ஏன்?

இந்துக்கள் வழிபடும் கோயில்களில் சென்று வழிபடவும் பூஜை செய்யவும் அனைத்து இந்துக்களுக்கும் உரிமை உண்டா? அனைத்து ஜாதியிலுள்ள இந்துக்கள் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை எதிர்த்து வழக்காடுமன்றம் சென்றிருப்பவர்கள் யார்? அவர்களை எதிர்த்து ஆர்எஸ்எஸ், இந்துமுன்னணிக் கும்பல் போராடாதது ஏன்?

முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிராகக் கலகம் செய்வதற்கு மட்டும் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களை இந்துக்கள் என்று வெறியேற்றிப் பயன்படுத்திக் கொள்வது. ஆனால் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமை என்று வருகிறபோது வேறு மாதிரி நடந்துகொள்வது, பொது சிவில் சட்டம் கேட்கும்போது இந்துக்கள் என்று வெறியேற்றுவது அதே நேரத்தில் பொது சுடுகாட்டைப்பற்றி மூச்சு விடாதது போன்ற இரட்டை நாக்கு- இரட்டைப் போக்குப் பேர்வழிகள்தான் இந்துத்துவாவாதிகள்.

அவர்கள்தான் இன்று மோடியை முன்னிறுத்தி தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களைப் பறிக்கத் திட்டமிடுகிறார்கள். மோடி என்பது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் முகமூடி. அதன் பின்னால் இருப்பது ஆர்எஸ்எஸ் என்கின்ற ஓநாயின் கொடிய முகம். எனவே, அவர்களிடம் ஏமாந்துவிடாதீர் என்று தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களை எச்சரிக்கிறோம்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக