வியாழன், 27 அக்டோபர், 2016

பார்ப்பனரல்லாதார் கூட்டமைப்பு - தலித் அல்லாதார் கூட்டமைப்பு



நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் கூட்டமைப்பு என்று துவக்கி பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டனர் திராவிட இயக்க முன்னோடிகள்.

அப்பொழுது கலெக்டர் பதவிகளில் இந்தியர் என்ற பெயரில் இருந்தவர்கள் 11 பேர். இதில் 9 பேர் பார்ப்பனர்கள். ஜில்லா முன்சீப்புகளில் 200 பேரில் 150 பேர் பார்ப்பனர்கள். 61 சப் ஜட்ஜூகளில் 45 பேர் பார்ப்பனர்கள். அதுபோல மேல்மட்ட பதவிகளில் முக்கால்வாசிப்பேர் பார்ப்பனர்களே! பார்ப்பனர்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவிகிதம். அனுபவித்தது 75லிருந்து 90 சதவிகிதம். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1894ல் பட்டம் பெற்றோர் 3 சதவிகிதமுள்ள பிராமணர்கள் 69 சதவிகிதம் பேர். 87 சதவிகிதமுள்ள பிராமணரல்லாதார் 19 சதவிகிதம். 6 சதவிகிதமுள்ள முஸ்லிம்கள் 0.7 சதவிகிதம் மட்டுமே! தாழ்த்தப்பட்டோர் எவருமே இல்லை. 1800ல் துவக்கப்பட்ட மெட்ராஸ் ஹைகோர்ட்டில் ஒருவர்கூட பார்ப்பனரல்லாத நீதிபதி வரவில்லை.

மருத்துவப் படிப்பில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி சென்னை மாகாணத்தில் இருந்தது. அதை நீக்கியது நீதிக்கட்சி. அப்படி நீக்கவில்லையென்றால் நம்ம அய்யாக்கள் டாக்டராகி இருக்க முடியுமா? பார்ப்பனரல்லாதாருக்கு படிப்பு வராது என்றார்கள். மீறிப் படித்தோம். தகுதி – திறமை எங்களுக்கே சொந்தம் என்றது பார்ப்பனக்கூட்டம். அதையும் முறியடித்து நம் தகுதி திறமையை நிலை நாட்டினோம்.
அந்தக் காலத்தில் மட்டுமல்ல இன்னமும் அதுதானே நிலை. மத்திய அரசின் செயலாளர்கள் 102பேரில் அனைவருமே பார்ப்பனர்கள். உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளில் தாழ்த்தப்பட்டவர் ஒரே ஒருவர். பிற்படுத்தப்பட்டவர் யாரும் இல்லை. பிரதம மந்திரி அலுவலகம்ää ஜனாதிபதி அலுவலகம் முழுக்க பார்ப்பன ஆதிக்கம்.  இன்னமும் அய்அய்டி யில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமுலுக்கு வரவில்லை. அகில இந்திய மருத்துவக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த அன்புமணி இராமதாஸ் ஆனந்த் அய்யரிடம் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. பொதுத்துறைகளில் இட ஒதுக்கீடு முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. தனியார் துறையில் அது எட்டிப்பார்க்கவில்லை.

ஆக, தாழ்த்தப்பட்ட –பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்குமான உரிமையைத் தட்டிப்பறித்து ஆதிக்கம் செய்த பார்ப்பனருக்கு எதிராக பார்ப்பனரல்லாதார் கூட்டமைப்பு உருவானதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் தலித் அல்லாதார் கூட்டமைப்பு என்ற ஒன்று உருவாகியுள்ளதே! அதன் நோக்கம் என்ன? எல்லா இடத்திலும் தலித்துகளே ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்லப்படுவது உண்மையா? எங்கே போனாலும் 18 சதவிகிதத்துக்காரனிடம் கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது என்று பேசப்படுவது உண்மையா? அவர்களே சொல்வதுபோல் அவன் பதினெட்டு சதவிகிதம்தான் இருக்கிறான். அது அவர்கள் ஜனத்தொகையைவிடக் குறைவுதானே! ஆனால் மூன்று சதவிகிதம் இருக்கக் கூடிய பார்ப்பான் 70 சதவிகிதம் 80ää 90 சதவிகிதங்கள் இன்னமும் அனுபவிக்கிறார்களே! அவர்களுக்கு எதிராக உங்கள் கோபம் திரும்பவில்லையே, ஏன்?

நேற்றுவரை தலித்தான அவன்  நம்மிடம் கைகட்டி நின்றான். அவனிடம் நாம் சென்று கைகட்டி நிற்பதா? என்கின்ற ஆதங்கம்தானே இதில் மேலோங்கி இருக்கிறது? முழங்காலுக்குக் கீழே வேட்டியணியாதே! என்று கொடுமைப்படுத்தினோம். இன்று அவன் ஜீன்ஸ் பேண்ட் போட்டு உலா வருகிறானே! காலிலே செருப்புப்போடாதே என்று மிரட்டி வைத்தோம். இன்று விலை உயர்ந்த ஷ_க்களை அணிந்து வருவதா என்கின்ற ஆத்திரம்தானே! தெருவிலே நடக்காதே என்றோம். இன்று அவன் காரிலே உல்லாசமாய் வருகின்றானே என்கின்ற பொறாமை உணர்ச்சிதானே இதற்கெல்லாம் காரணம்?
நீங்கள் செய்த அந்தக் கொடுமைகளுக்குப் பழிவாங்க நினைக்காமல் தன்னுடைய முன்னேற்றத்தைப் பார்த்துக்கொண்டு செல்வதைப் பொறுக்க மாட்டாமல்தான் தலித் அல்லாதார் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறீர்களா?  அவர்கள் முன்னேற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத உங்களால் பார்ப்பனரிடம் உரிமைபெற முடியுமா? பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்ற பொருளில் சூத்திரன் என்று சொல்வதற்கே கோபப்படாத நாங்களா இதற்கெல்லாம் கோபப்படப் போகிறோம் என்கிறீர்களா? மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடி வெற்றி பெறலாம், மானமற்ற ஒருவனிடம் போராடி வெற்றி பெற முடியாது என்றார் பெரியார். அதை உண்மையாக்க முயற்சிக்காதீர்! மான உணர்ச்சி பெறுவீர்! மனித உரிமையை மதிப்பீர்!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக