புதன், 12 அக்டோபர், 2016

கீதையின் மறுபக்கத்தையும் படியுங்கள்.



 ஆர்எஸ்எஸ் சங் பரிவாரின் கொள்கை என்பது மனுதர்மத்தை அமுல்படுத்தி பார்ப்பனர்களை உயர்ந்த இடத்தில் அமர்த்துவதே! நம்முடைய மக்களில் சிலர் அது எப்படி சாத்தியமாகும்? அம்பேத்கர் எழுதிய சட்டத்தை பாஜகவால் மாற்ற இயலுமா என்று கேட்கிறார்கள். ஆனால் பாஜக தலைவர்கள் சொல்வது என்னவென்றால் எங்களுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்தால் எங்கள் கொள்கைகளை அமுல்படுத்துவோம் என்பதுதான். அந்த நிலை இன்று உருவாகி விட்டதாக சங்பரிவார் நினைக்கிறது.

 மனுதர்மத்தை அமுல்படுத்துவதாகச் சொன்னால் எதிர்ப்புக்கள் வரும் என்பதால் அதன் முன்னோட்டமாக பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்கிறார்கள்.
 கீதை பைத்தியக்காரனின் உளறல் என்றார் அண்ணல் அம்பேத்கர். கீதையும் கிருஷ்ணனும் உள்ளவரை ஜாதியை ஒழிக்க முடியாது என்றார் தந்தை பெரியார். பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதற்கு இதுவே உதாரணமாகும். ஜாதியைப் பாதுகாப்போம் என்று நேரடியாகச் சொல்ல முடியாத சங் பரிவார் கீதையை தேசிய நூலாக அறிவிப்பதன் மூலம் ஜாதியைக் காப்பாற்ற நினைக்கிறது. 

“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண – கர்ம விபாகச
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யாகர்த்தாரர மவ்யயம்”  

கீதை அத்தியாயம் 4, சுலோகம் 13

இதன் பொருள் : நாலு வருணங்களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது.
இது எவ்வளவு விசித்திரமான குயுக்தி பாருங்கள். கடவுளே நினைத்தாலும் ஜாதியை மாற்றி அமைத்திட முடியாது என்று எழுதி வைத்துக்கொண்டு நமக்கு கிடைத்து வரும் இட ஒதுக்கீட்டால்தான் ஜாதியே பாதுகாக்கப்படுவதாக இன்னும் சில பேர் பேசித் திரிகிறார்கள்.
அத்துடன் கீதை மேலும் கூறுகிறது

“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா – யோன்ய
ஸத்ரியோ வைச்யாஸ் - ததா சூத்ராஸ் - தேஸ் பியாந்தி பராங்கதிம்   .. அத் 9.சுலோ.32

அதாவது பெண்களும் சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள்.
“பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் பகவத் கீதை சொல்கிறது.
பகவத்கீதை தர்மம் என்று சொல்வது வருண ஜாதி தர்மத்தைத்தான். கடவுளின் சதுர்வர்ண கட்டளையை நிறைவேற்றுவதைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை. அவைகளை மீறுவதைக்காட்டிலும் தாழ்ந்தது எதுவும் இல்லை. ஒருவர் மற்றவருடைய கடமையை (ஜாதித் தொழிலை) எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் பயங்கரமானது எதுவும் இல்லை என்கிறது கீதை.

“எப்பொழுதெல்லாம் தருமம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போது ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன் என்கிறான் கண்ணன். அத் 4 சுலோ 7.

அதாவது ஜாதி அழியும்போது அதனைக் காப்பாற்ற கண்ணன் அவதரிப்பாராம்.  
 இவ்வாறு பச்சையாக ஜாதியையும் பெண்ணடிமைத்தனத்தையும் பாதுகாக்கிற நூலைத்தான் இவர்கள் தேசிய புனிதநூலாக அறிவிப்பார்களாம். அதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்.
இவர்கள்தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் திருக்குறளையும் தேசிய நூலாக அறிவிப்பார்களாம். அது எப்படி பன்றியும் கன்றும் ஒன்றாகும்? எல்லாம் ஏமாற்று வேலை. சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்கும் இவர்கள் தமிழ் மீதும் தமிழன் மீதும் அக்கறையுள்ளவர்கள் போல நடிப்பது எல்லாம் நாடகமே!

தமிழ் நாட்டில் காலூன்ற வேண்டும். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றுள்ள முன்னேற்றத்தைத் தடுத்து பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டிற்குள் நாட்டையும் மக்களையும் கொண்டு வருவதே அவர்கள் நோக்கம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்!

குறிப்பு : தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய ~கீதையின் மறுபக்கம்| என்ற நூலில் இருந்து இது தொகுக்கப்பட்டுள்ளது. அந் நூலுக்கு இதுவரை எந்தக் கொம்பனும் பதில் சொல்லவில்லை. புத்தகக் கண்காட்சியில் இப் புத்தக விற்பனை டாப்போ டாப்பு. கீதையையும் படியுங்கள். கீதையின் மறுபக்கத்தையும் படியுங்கள். உண்மை உணருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக