புதன், 12 அக்டோபர், 2016

கொலை செய்யப்பட்ட மகாத்மாவின் கையில் இருந்ததும் பகவத் கீதை. கொலை செய்த கோட்ஷேயின் கையில் இருந்ததும் பகவத் கீதை.


 பட்டப்பகலில் பல பேர் பார்த்திருக்க துள்ளத் துடிக்க இந்நாட்டின் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட தேசப்பிதா மகாத்மாவை சுட்டுப் படுகொலை செய்த படுபாதகன் கோட்ஷே தேச பக்தராம். அவனுக்கு நாடு பூராவும் சிலை வைக்கப் போகிறார்களாம். அவனுக்குக் கோயிலும் கட்டப் போகிறார்களாம். அதற்கு அரசின் அனுமதியும் தேவையில்லையாம். ஏனென்றால் அவன் மகா புருஷனாம். மகாபுருஷனுக்கு சிலை வைக்க அனுமதி கொடுக்க இவர்கள் யார்? என்கிறது அந்தக்கூட்டம்.

கொலை செய்யப்பட்ட மகாத்மாவின் கையில் இருந்ததும் பகவத் கீதை. கொலை செய்த கோட்ஷேயின் கையில் இருந்ததும் பகவத் கீதை. கொலை செய்யப்பட்ட காந்தி உச்சரித்த சொல்லும் ராம்ராம். கொலை காரன் கோட்ஷே உச்சரித்த மந்திரச்சொல்லும் ராம்ராம். கொலையான மகாத்மா அமைக்கப் போவதாகச் சொன்னதும் இராமராஜ்யம். கொலைகாரன் கோட்ஷேயின் இலட்சியமும் இராமராஜ்யம். மகாத்மாவும் வருணாசிரமத்தை ஆதரித்தார். கோட்ஷே ஆதரித்ததும் வருணாசிரமமே. இரண்டு பேரின் கடவுளும் ஒன்றுதான். இரண்டு பேரின் இலட்சியமும் ஒன்றுதான். இரண்டுபேரும் அமைக்க விரும்பிய சமுதாயமும் ஒன்றுதான்.

பிறகு ஏன் கோட்ஷே காந்தியைக் கொலை செய்தான்?
காந்தியிடம் இருந்தது மதநம்பிக்கை. கோட்ஷேவிடம் இருந்தது மதவெறி. காந்தியிடம் ஜாதி நம்பிக்கை இருந்தது. கோட்ஷேவிடம் ஜாதிவெறி இருந்தது. மதவெறியும் ஜாதிவெறியும் சேர்ந்து மகாத்மாவைச் சாவூருக்கு அனுப்பியது. பார்ப்பனர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னார் காந்தி. கோபாலகிருஷ்ண கோகலேவை உதாரணம் சொன்னார். மகாத்மாவாகிய உங்களுக்கே ஒரேயொரு நல்லவர்தான் கண்ணுக்குத் தெரிகிறார். சாதாரண ஆத்மாவான எனது கண்களுக்கு ஒருவர்கூடத் தெரியவில்லை என்றார் பெரியார்.

பெரியார் சொன்னதை காந்தி உணரத் தொடங்கினார். நான் சொல்லும் ராமராஜ்யம் வேறு. இந்த மதவெறியர்கள் கேட்கும் இராமராஜ்யம் வேறு என்றார் காந்தி. என்னுடைய இராமன் வேறு. இவர்களுடைய இராமன் வேறு என்றார் காந்தி.

நான் கேட்கும் வருணாசிரம தர்மத்தின்படி சூத்திரன் தொழிலை பிராமணன் செய்ய வேண்டியதில்லை. டாக்டர் எஞ்சினியர் வேலைகளைச் சூத்திரர்கள் செய்யட்டும். பிராமணர்கள் கடவுளுக்கு அபிஷேக ஆராதனைகள் மட்டும் செய்தால் போதும். நாட்டை ஆள பிராமணர்கள் தேவையில்லை. அதனை சத்திரியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார் காந்தி. அதனால் …
காந்தி நல்லவர்கள் என்று நம்பிய பார்ப்பன இனத்திலிருந்தே கோட்ஷே தோன்றி காந்தியைச் சுட்டுக் கொன்றான்.

அந்த கோட்ஷே தேச பக்தராம். அவன் கொலை செய்யத் தூண்டிய கொலை நூல் கீதை இந்தியாவின் தேசிய நூலாம். புனித நூலாம். வெறும் பருத்தி நூலைப் புனிதநூல் என்று தோளில் தரித்திருக்கும் கூட்டம் வெளிப்படையாய் அறிவிக்கிறது இன்று.
இவ்வளவு நாளாக என்ன சொன்னார்கள் இவர்கள்? எங்களுக்கும் கோட்ஷேவுக்கும் சம்மந்தமே இல்லை என்றார்கள். அவன் வேறு நாங்கள் வேறு என்றார்கள். ஆனால் இன்று துணிச்சலாக வெளியில் வருகிறார்கள்.

கோட்ஷேவுக்கு கொலை செய்யும் உணர்வைத் தூண்டிய இந்துமகாசபைத் தலைவர் மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருதாம். இவ்வளவு நாளாக இந்த மாளவியாவை ஏன் யாரும் வெளியே சொன்னதில்லை? இப்பொழுது மாளவியாவுக்கு மட்டும்தான் பாரத ரத்னா கொடுக்கப்போகிறார்கள். அடுத்து கோட்ஷேவுக்கும் கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
இதற்கெல்லாம் விடை என்ன? தீர்வுதான் என்ன?

தெரிந்து கொள்ள வாருங்கள்! காந்தியாரின் நினைவு நாளாம் ஜனவரி 30ல் பெல் பொறியாளர் அரங்கில் நடைபெறும் மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்கிற்கு! புதியதோர் உலகு செய்வோம்@ கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம். நன்றி!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக