வியாழன், 27 அக்டோபர், 2016

சித்திரை 1அய் ஆதரிப்பவர்கள் தமிழ்ப்பெயர் அல்லாத ஆண்டுகளை தமிழன் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு இவரை யாருமே நாணயமான அறிவுப்பூர்மான பதிலைச் சொன்னதில்லை



 கடந்த 2008ம் ஆண்டு தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்றக்கழக அரசு தமிழர்களுக்குப் புத்தாண்டு சித்திரை 1 அல்ல. தை முதல்நாள்தான் என்று அரசு ஆணை பிறப்பித்தார்கள். இந்த முறை ஆட்சியைப்பிடித்த அஇஅதிமுக அரசு அதனை மாற்றி மீண்டும் சித்திரை 1 தான் தமிழர்க்குப் புத்தாண்டு என்று அறிவித்தது. ஆகக் கூடி ஒரு அரசு நினைத்தால் ஒரு உத்தரவில் ஒரு ஆண்டுப்பிறப்பு எது என்று மாற்ற முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறதா? இல்லையா?

சித்திரை 1 அய் மீண்டும் தமிழர்களின் ஆண்டுப்பிறப்பாகக் கொண்டாட உத்தரவிட்டதற்கு அதிமுக அரசும் அதன் ஆதரவாளர்களும் சொல்லும் காரணம் ஆண்டாண்டு காலமாய் இருந்ததைக் கருணாநிதி மாற்றி விட்டார். எனவே, அதிமுக அரசு மீண்டும் பழைய நடைமுறையைக் கொண்டு வந்தது என்று கூறுகிறார்கள். அவர்கள் ஒரு வினாவிற்கு விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்த சித்திரை 1 தான் தமிழனின் ஆண்டுப்பிறப்பு என்பது எவ்வளவு காலமாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூற முடியுமா? அதற்கு முன்பு வேறு ஒரு நடைமுறை இருந்திருக்கலாம். அப்பொழுதெல்லாம் மன்னராட்சிக்காலம். மன்னர் யாராவது ஒருவர்தான் இதனை மக்கள் மீது திணித்திருக்க முடியுமே தவிர தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இதனை யாரிடமாவது கோரிக்கை வைத்து அமுல்படுத்தி இருக்க வாய்ப்பில்லை.

மன்னர்கள் அனைவரும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செய்ல்பட்டார்கள் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. மன்னர்கள் எத்தனையோ பேர் எது எதற்கெல்லாமோ அடிமையாகி ஆட்சியையே யார்யாரையோ ஆளச் செய்துவிட்டு அந்தப்புரமே கதி என்று கிடந்திருக்கிறார்கள். உல்லாச வாழ்வும் ஊதாரி வாழ்வும் மதுää மாது என வாழ்ந்த மன்னர்களும் ஏராளம் இருந்திருக்கிறார்கள். மக்கள் எப்பொழுதும் ஏன்? எதற்கு? என்று எதிர்த்துக் கேட்க முடியாத அளவுக்கு அடிமையாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அடிமை வாழ்வு வாழ்ந்தகாலத்தில் எவனோ ஒரு ஏமாளி மன்னனைப் பிடித்து தமிழனுக்கு விரோதமானää தமிழுக்கு விரோதமான கும்பல் இந்த சித்திரை 1தான் தமிழனின் புத்தாண்டு என்று மாற்றியிருக்க வாய்ப்பிருக்கிறது.
ஏனெனில் இந்த சித்திரை 1அய் அடிப்படையாயக் கொண்ட ஆண்டுகளின் பெயர்கள் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோர்பதி பவ, யுவ, தாது, ஈஸ்வர என்று அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒரு சொல்கூடத் தமிழச் சொல் கிடையாது. தமிழ்ச்சொல் இல்லாத பெயர்களைக் கொண்ட ஆண்டுகள் எப்படித் தமிழன் தலையில் திணிக்கப்பட்டது? அதைத் திணித்தவன் யார்? இதனை அப்படியே எந்த எதிர்ப்பும் இல்லாமல் தமிழன் ஏற்றுக் கொண்டிருந்திருப்பானா? எவ்வளவு அடக்குமுறை கொண்டு இது தமிழன்மீது திணிக்கப்பட்டதோ? யார் கண்டது?

அடுத்து இந்த ஆண்டுகளின் பெயர்களுக்குக் காரணமாகச் சொல்லப்படும் கதை அறிவுப் பூர்வமானதா? ஒழுக்கமானதா? அந்தக் கதையைää தாய்ää தங்கைää தமக்கைää மகள் ஆகியோரிடம் கூச்சமில்லாமல் சொல்ல முடியுமா? எவ்வளவு ஆபாசம்? அசிங்கம்?
நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் அல்லது அலிக்கும்ää கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்தான் இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பெயர்களாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறதேää அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

அடுத்து இந்த சித்திரை 1 ஆதரவாளர்கள் கூறும் காரணம் ~காலம் காலமாய் இருப்பதை மாற்றலாமா? | என்பதுதான்.

காலம் காலமாய் இருப்பதை மாற்றாமல் அப்படியே எல்லாவற்றையும் கடைப்பிடித்தால் தமிழன் காட்டுமிராண்டியாகத்தான் இருப்பான். காலம் காலமாயத் தமிழனின் தேசிய ஆடை எது? கோவணம்தானே? அந்தக் கோவணத்துடன்தான் இருப்பேன் என்று எந்தத் தமிழனாவது சொல்லுவானா?

நாயும் பூனையும் கழுதையும் பன்றியும் நடமாடிய வீதிகளில் மனிதன் நடக்க முடியாத காட்டுமிராண்டித்தனம் இருந்ததே அதை மாற்றும்போது கூட பிற்போக்குவாத காட்டுமிராண்டிகள் இந்த பதிலைத்தானே சொன்னார்கள்? அதனை ஏற்றுக்கொண்டு தீண்டாமை ஒழிப்புச்சட்டத்தை விலக்கிக்கொள்ள முடியுமா?

பிறந்த உடனே பெண் குழந்தையின் கழுத்தில் தாலி கட்டிய காட்டுமிராண்டித்தனம் சாரதா சட்டத்தின்மூலம் ஒழிக்கப்பட்டதே! அதுவும் காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழக்கம்தானே! அதனை மீண்டும் கொண்டு வரலாமா? கணவன் இறந்த உடன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தபோதும் இதே கூச்சல் கேட்கவில்லையா? தேவதாசி என்ற பொட்டுக்கட்டும் முறையை ஒழிக்கச் சட்டம் கொண்டு வந்தபோதும் சென்னை மாகாண சட்டசபையில் இதேபோன்ற வாதத்தை தமிழ்நாட்டின் பிரபலமான தலைவர்கள் எடுத்து வைத்து வாதிட்டார்களே! அதனை ஏற்று மீண்டும் தேவதாசி சட்டத்தைக் கொண்டு வரலாமா? குழந்தைத்திருமணத்தால் ஒரு வயதுக் குழந்தைகூட விதவையாக இந்த நாட்டில் இருந்ததே! அது கடைசிவரை விதவையாகத்தான் இருக்க வேண்டும், வெள்ளைச் சேலை யுடுத்தி முக்காடுபோட்டு மூலையில் உட்கார வைத்து நடமாடும் பிணமாக சமுதாயம் அவர்களை வைத்திருந்ததே! அந்தக் கொடுமைகூட காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததுதான். அதனை மீண்டும் அமுல்படுத்தலாம் என்று எந்த அறிவாளியாவது சொல்வாரா?

குழந்தைத் திருமணம் செய்துகொண்ட ஆண் அந்தப் பெண்ணுக்கு பத்து வயதாக இருக்கும்பொழுது உடலுறவு கொள்ளலாம் என்று இருந்த சட்டத்தை வெள்ளைக்காரன் 1890களில் பனிரெண்டு வயதாக ஆக்கினான். அதனை எதிர்த்து இந்நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் திலகர் போன்ற பிரபல தலைவர்களே போராடினார்கள். அந்தத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று வெள்ளைக் காரன் அந்தச் சட்டத்தை வாபஸ் வாங்கியிருந்தால் இன்று நாம் விலங்குகளைவிடக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோமா?

இந்த நாட்டின் உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கூடக் கல்வி மறுக்கப்பட்டது. அதேபோல அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்றுகூடக் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டவைதானே! அதற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் கொடுக்கப்பட்ட கல்வியைப் பறித்து விடலாமா?
இப்படி ஏராளமான பழக்கங்களும் வழக்கங்களும் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தவையெல்லாம் அவ்வப்பொழுது அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. அதுபோலத்தான் அறிவுக்கு ஒவ்வாத கதைகளும் காரணங்களும் கொண்ட சித்திரை 1அய் தை முதல் நாளுக்கு மாற்றுவது தவறில்லை என்று டாக்டர் கலைஞர் அவர்கள் அதனை மாற்றினார்கள். அது ஒன்றும் அவருடைய சொந்தக் கருத்துக் கிடையாது.

தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திருவிக. நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்கள் அய்நூறு பேருக்குமேல் 1920ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி தமிழருக்கான ஆண்டினை முடிவு செய்தார்கள். தமிழனின் முப்பாட்டன் திருவள்ளுவப் பெருந்தகையின் பிறப்பை அடிப்படையாக வைத்து தமிழனின் ஆண்டை முடிவு செய்தார்கள். கிறித்து பிறப்புக்கு 31 ஆண்டுக்கு முற்பட்டவர் திருவள்ளுவர் என்று முடிவுசெய்து அதனைத் தேர்வு செய்தார்கள். அதனைக் கடைப்பிடிப்பதும் எளிதானது.

நடப்பு ஆண்டான 2013 உடன் 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பாகும். இதில் காலக்கணக்கை எளிதாக கணக்கிட முடியும். ஒருவர் வயதைக் கணக்கிடுவதற்குக் கூட பழைய ஆண்டுமுறை உதவாது. அறுபது ஆண்டு முடிந்;து மீண்டும் முதல் ஆண்டு வரும்போது 61 வயது முடிந்தவரை நேரில் பார்க்காதவர் அவருக்கு வயது ஒன்று என்றுதான் கூறுவாரே தவிர 61 என்று கூற மாட்டார். இதற்காகவும் பழைய ஆண்டுமுறையை மாற்ற வேண்டியது அவசியமாகும். அத்துடன் தை ஒன்று என்பது விவசாயத்தை அடிப்படையாய்க் கொண்டு வாழ்ந்த தமிழனுக்குப் பெருமைதானே தவிர அதில் ஒன்றும் இழிவு இல்லை.

சித்திரை 1அய் ஆதரிப்பவர்கள் தமிழ்ப்பெயர் அல்லாத ஆண்டுகளை தமிழன் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு இவரை யாருமே நாணயமான அறிவுப்பூர்மான பதிலைச் சொன்னதில்லை. அதுபோல் அறுபது ஆண்டுகளின் தோற்றத்துக்குச் சொல்லப்படும் கதை அறிவுக்குப் பொருத்தமில்லாத ஆபாசமானதாக இருக்கிறதேää அதனை ஏன் தமிழன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கும் எவரும் பதில் சொன்னதில்லை. அத்துடன் இந்த ஆண்டினைக் கொண்டு காலத்தையும் கணிக்க முடியாது. ஒருவனின் வயதைக்கூட கணக்கிட முடியாது என்றால் அதற்கும் நாணயமான பதில் இல்லை.  இது தமிழனின் மானத்துக்கும் அறிவுக்கும் விடப்பட்ட சவாலாகும்.
எனவேää மானமும் அறிவும் உள்ள தமிழர்கள் கொண்டாட வேண்டிய புத்தாண்டு தை முதல்நாள்தான். தமிழனுக்கு மானமும் அறிவும் இருக்கக் கூடாது என்று சொல்பவர்கள் சித்திரை 1 அய்க் கொண்டாட வேண்டும் என்கிறார்கள்.

ஆகவே தமிழர்களே! மானத்தோடும் அறிவோடும் இருக்கப் போகிறீர்களா? தமிழின எதிரிகளின் பேச்சைக் கேட்டு அவற்றை இழிக்கப் போகிறீர்களா? சிந்திப்பீர்!
         இவண்
         ம.ஆறுமுகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக