திங்கள், 17 அக்டோபர், 2016

நம் மானத்திற்கும் அறிவுக்கும் ஒவ்வாத பழக்க வழக்கம்; சம்பிரதாயம் என்ற பார்ப்பனப் பழமை வாதத்தை அடித்து நொறுக்கி மானமுள்ள தமிழனாய் தலைநிமிர்வோம்.



பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள பார்ப்பனர் அல்லாதாரின் உரிமைகளுக்கு எதிராக பல பழக்க வழக்கங்களை சம்ப்ரதாயம் என்ற பெயரால் கடைப்பிடித்து வந்தார்கள். அதனை எதிர்த்து பார்ப்பனர் அல்லாதார் போராடியபோதெல்லாம் சம்ப்ரதாயம் என்றும் பழக்க வழக்கமென்றும் அதை மாற்றக் கூடாது என்றும் அதைத் தடுத்து வந்திருக்கிறார்கள். அதையும் மீறி நம் முன்னோர்களின் கடும் போராட்டத்தினால் பல பழக்க வழக்கங்களும் சம்ப்ரதாயங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சில:

கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அப்பொழுது அந்த நம்பூதிரி;களுடைய வக்கிரபுத்திக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் பலியானார்கள். ஈழவர், புலையர், நாடார், உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் வயதுக்கு வந்தபிறகு யாருமே மேலாடை அணியக்கூடாது என்றும் அப்படி அணிந்தால் அவர்களுக்கு வரியும் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடியபோது இது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழக்க வழக்கம், சம்ப்ரதாயம் என்று அதனை மாற்ற முடியாது என்றனர். தொடர்ந்து முப்பத்தைந்து ஆண்டு காலம் அதற்கான போராட்டம் தொடர்ந்திருக்கிறது. மக்களின் போராட்ட உணர்வுக்கு முன்னால் ஆதிக்க சக்திகள் பணிந்தன. அதற்குப்பிறகுதான் ஒடுக்கப்பட்ட வகுப்புப் பெண்களுக்கு முண்டு என்னும் மேலாடை அணிவதற்கு உரிமை கிடைத்தது. 

        ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலில் நுழைந்து கடவுளை வழிபட உரிமை வேண்டிப் போராடி நீதிமன்றம் சென்றபொழுது நீதிமன்றமே பழக்க வழக்கத்தை மாற்ற முடியாது என்றும் இன்னின்ன சாதிக்காரர் இந்த இந்த இடத்தில்தான் நின்று கடவுளை வணங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதையும் எதிர்த்து நம் முன்னோர் போராடியதன் விளைவாகத்தான் இன்று எல்லா மக்களும் கோயிலில் சென்று வழிபடும் உரிமை கிடைத்தது என்பதும் வரலாறு.           

சேரன்மாதேவியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒரு குருகுலம் நடத்தப்பட்டது. அதிலேயே பார்ப்பனப் பிள்ளைகளுக்கு பொங்கல், புளியோதரை, இட்டிலி, உப்புமாவும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு பழைய சோறும் தனித்தனிப்பந்தியில்  வழங்கப்பட்டது. தனித்தனியாகத் தண்ணீர்ப்பானையும் வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து தந்தை பெரியார் போராடியபோது அந்த குருகுலத்தை நிர்வகித்த வ.வெ.சு. அய்யர் இது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கம். அதனை மாற்ற முடியாது என்று சொன்னார் என்பதும் அதனை எதிர்த்து நம் தலைவர்கள் போராடி அந்தப் பாகுபாடு நீக்கப்பட்டது என்பதும் கடந்தகால வரலாறு.


வைக்கம் வீதிகளில் உயர்ஜாதியினர் வசிக்கும் தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக் கூடாது என்ற சம்பிரதாயத்தைத் தந்தை பெரியார் போராடி அடித்து நொறுக்கியிராவிட்டால் நாயும் பூனையும் நடந்தால் புண்ணியம் மனிதர் நடந்தால் பாவம் என்ற நிலைதானே இன்னமும் தொடர்ந்திருக்கும்?         சென்னை மாகாண சட்டசபையில் தேவதாசிமுறை ஒழிப்பு சட்டம் வந்தபோது இது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சம்ப்ரதாயம், பழக்கவழக்கம், எனவே அதனை ஒழிக்க அனுமதிக்க முடியாது என்று சட்டமன்றத்திலேயே சத்தியமூர்த்தி அய்யர் என்பவர் வாதிட்டார் என்பதும் அதனை எதிர்த்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி குரல் கொடுத்ததால்தான் அந்தத் தேவதாசிமுறை ஒழிக்கப்பட்டது என்பதும் நம் கடந்த கால வரலாறு.     
 
பார்ப்பனரல்லாத மக்கள் படிக்கவும் பதவிகளுக்குச் செல்லவும் உரிமை வேண்டிப் போராடியபோது நீங்கள் உங்களுடைய குலத்தொழில்களைச் செய்வதுதான் சாஸ்திரப்படியும் சம்ப்ரதாயப்படியும் உள்ள பழக்கவழக்கம் என்று நமக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. அதனை எதிர்த்து தந்தை பெரியாரும் நம் தலைவர்களும் போராடியதால்தான் கல்விகற்கவும் வேலைக்குச் செல்லவும் உரிமை கிடைத்தது
என்பதும் கடந்த கால வரலாறு.  

நம்முடைய தமிழர்கள்கூட பழைய பழக்கவழக்கம் சம்பிரதாயம் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. உங்களில் எத்தனை பேருடைய தந்தை படித்துப் பட்டம் பெற்று அரசு வேலையில் இருக்கிறார்கள். அப்படியே அவர் அரசு வேலையில் இருந்தாரென்றால் உங்களுடைய தாத்தா படித்தவராக இருக்க மாட்டார். உங்களில் எத்தனை பேருக்கு உங்கள் தாத்தா பெயரும் பாட்டி பெயரும் தாத்தாவுடைய தாத்தா பெயரும் தாத்தாவுடைய பாட்டி பெயரும் தெரியும்? இந்த நிலைக்கு என்ன காரணம்?

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால்தானே உங்களுடைய தாத்தாவும் தாத்தாவின் தாத்தாவும் படிக்கவில்லை? அந்த பழக்க வழக்கத்தின்படி உங்களுடைய தாத்தாவுக்குக் கிடைக்காத கல்வி உங்கள் அப்பாவுக்கும் கிடைக்காமல் இருந்திருந்தால் இன்று நீங்கள் படித்த படிப்பு உங்களுக்குக் கிடைத்திருக்குமா?

உங்களுக்கு இந்தப் பதவி கிடைத்திருக்குமா? நீங்கள் அனுபவித்து வரும் இந்த சுகபோக வாழ்வு கிடைத்திருக்குமா?    இந்த உரிமைகளெல்லாம்  உங்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த தலைவர்கள்தான் தமிழனுக்குப் புத்தாண்டு  தை முதல் நாள்தான் என்று கொண்டாட வேண்டும் என்று அனைத்துத் தமிழர்களையும் கேட்டுக்கொண்டார்கள். அவர்களால் கிடைத்த வாழ்வை அனுபவித்துக்கொண்டு நம் அறிவுக்கும் மானத்துக்கும் கேடானவற்றைத் தூக்கி எறியச் சொன்னால் அது முடியாது என்பது மானமுள்ளவன் செயல்தானா?  

எனவே, பிரபவ, விபவ, சுக்கில என்ற ஆண்டுகள்தான் தமிழனின் ஆண்டுகள் என்றும் அது காலங்காலமாய்க் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கம் என்றும் அதை மாற்ற முடியாது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டவே பயன்படும்.  நம் மானத்திற்கும் அறிவுக்கும் ஒவ்வாத அந்த பழக்க வழக்கம்; சம்பிரதாயம் என்ற பார்ப்பனப் பழமை வாதத்தை அடித்து நொறுக்கி மானமுள்ள தமிழனாய் தலைநிமிர்வோம்.  தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதை ஓங்கி ஒலிப்போம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக