வெள்ளி, 14 அக்டோபர், 2016

நாம் கொண்டாட வேண்டிய தொழிலாளர் தினம் மே தினமா? விஸ்வகர்மா ஜெயந்தியா?



நம்முடைய மக்கள் குடியிருக்க வீடு கட்டும்போது பார்த்துப்பார்த்துக் கட்டுகிறார்கள். உயர்ந்த வகை சிமென்ட், செங்கல், கம்பி, இரும்பு, உயர்ந்த வகையில் பளபளப்பான கிரானைட் கற்கள், உயர்ந்தவகை வண்ணம் எல்லாவற்றிலும் உயர்ந்ததையே தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக வீட்டைக் கட்டினாலும் கிரஹப்பிரவேசம்னு ஒண்ணச் செய்யலேன்னா அவங்களுக்கு நிம்மதியே இருக்காது.

 புகையே படக்கூடாது என்பதற்காக கேஸ் அடுப்பு, இன்டக்ஷன் அடுப்பு, சோலார் அடுப்பு  வைத்துக் கட்டப்பட்ட வீட்டில் பளபளப்பான கிரானைட் கற்கள் பதித்த தளத்தில் பார்ப்பானைக் கூட்டிவந்து மூன்றடி உயரத்துக்கு செங்கல்லை அடுக்கி விறகுச் சுள்ளிகளைப் போட்டு புகையை உண்டாக்கி எல்லோரையும் இரும வைத்து, சாகப்போற பசுமாட்ட ஓட்டிவந்து ஒண்ணுக்கடிக்க வச்சு சாணியக் கழிய வச்சு சமஸ்கிருதத்தில புரியாத மந்திரத்தச் சொல்லி பசு மூத்திரம், சாணம், பால், தயிர் இவற்றுடன் தண்ணீரைக் கலக்கி கோமியம் என்ற பெயரால் வீட்டைக்கட்டிக் குடிபுகும் தம்பதியரைக் குடிக்க வைப்பார்கள். அதுவும் விடியக்காலம் நாலரை டு ஆறு என்று டயம் போட்டு சொந்தக்காரனையும் கஷ்டப்படுத்தி வரவச்சு கிரஹப் பிரவேஷம் பண்ணினாத்தான் ஷேமமா இருக்க முடியும்னு பார்ப்பான் சொல்றத நம்பிக்கிட்டு இவ்வளவும் செய்தால்தான் நிம்மதி ஏற்படுது. இது எதுக்காகன்னு யாருக்காவது தெரியுமா?

 தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் யாருக்காவது நூறு வருஷத்துக்கு முன்ன மாடிவீடுää மச்சுவீடு இருந்ததுன்னு நிரூபிச்சா ஒரு லட்சம் பரிசு தரப்படும்னு திராவிடர் தொழிலாளர் கழகம் அறிவிச்சு ஏழு மாசம் ஆச்சு. இன்னமும் அந்தப் பரிசினை வாங்க யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அப்படியென்றால் நூறு வருஷத்துக்கு முன்ன மாடிவீடு மச்சு வீடு உள்ளவர்கள் நம்முடைய தொழிலாளர்களில் யாரும் இல்லை என்பதுதானே இதன் பொருள்? 

 நூறு வருஷத்துக்கு முன்னால நம்ம நாட்டில மாடிவீடு மச்சு வீடு யாரு கட்டியிருப்பாங்க? ராஜாக்கள், ஜமீன்தார்கள் அரண்மனையில் வாழ்ந்தார்கள். அடுத்து அக்கிரஹாரத்திலும் முன்னேறிய ஜாதியினரின் குடியிருப்புக்களிலும் மாடிவீடு மச்சு வீடு இருந்திருக்கும். அந்த வீட்டைக் கட்டிக்கொடுத்த தொழிலாளிகள் கொத்தனார், சித்தாள், ஆசாரி,வண்ணம் தீட்டுபவர் எல்லாம் நம்ம பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்கள்தானே?

அப்படி நமது மக்கள் வேலை செய்ததால் அந்த வீடு தீட்டாகி இருக்குமாம். அந்தத் தீட்டைப் போக்கத்தான் இந்த கிரஹப்பிரவேசம்.

        மனுதர்மம் அத்தியாயம் 5, சுலோகம் 124 இவ்வாறு சொல்கிறது         

"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல், பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப்படுத்தப்படுகிறது|.

     (சண்டாளாதிகள் - கீழ்ஜாதிக்காரர்கள்)    

இது உழைக்கும் நமது பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துகின்ற செயலா? இல்லையா? இதனை அறியாமல் நம்முடைய மக்கள் இலட்சக்கணக்கில் செலவு செய்து வீட்டைக்கட்டி, பார்ப்பனரை அழைத்து கிரஹப்பிரவேசம், கணபதிஹோமம் இவையெல்லாம் செய்வது நம்முடைய உழைக்கும் மக்களை நாமே இழிவுபடுத்துவதாகாதா?

இவ்வாறு உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மத்தைச் சட்டமாக ஆக்க வேண்டும் என்று சொன்னவர் திலகர். அந்தத் திலகர் பிறந்தநாளில் அவரது கொள்கையை அமுல்படுத்த ஆரம்பிக்கப்பட்டதுதான் பாரதீய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்).   இவர்கள்தான் உழைப்பவர்களுக்கு உரிமை பெற்றுத் தந்த மே தினத்தைத் தொழிலாளர் தினமாக ஏற்றுக் கொள்ளாமல் இந்த மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறார்கள்.       

எனவே, தொழிலாளர்களே! நாம் கொண்டாட வேண்டிய தொழிலாளர் தினம் மே தினமா? விஸ்வகர்மா ஜெயந்தியா? சிந்திப்பீர்! மனுவாதிகளுக்கு தக்க பதிலடி தாரீர்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக