வெள்ளி, 14 அக்டோபர், 2016

விவேகாநந்தரது சிந்தனை தேசத்தையே வழிநடத்தும் என்பது கற்பனை



 இது ஒரு வழக்காடுமன்றத்தின் தலைப்பு. இந்த வழக்காடு மன்றத்தை நடத்தியது வேறு யாருமல்ல. விவேகானந்தரின் 151வது பிறந்தநாள் கொண்டாடிய பிஎம்எஸ் சங்கம்தான் அது. அதற்காக அவர்களைப் பாராட்டுகிறோம். அவர்களையும் அறியாமல் அவர்கள் சில நேரங்களில் இதுபோன்ற உண்மைகளை ஒத்துக் கொள்வார்கள்.      

வழக்காடு மன்றத்தில் என்ன பேசினார்கள் என்பதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அவர்களது வேண்டுகோளின்படி நிர்வாகம் நமக்கெல்லாம் வழங்கியதல்லவா பாரதமே உயிர்த்தெழு என்ற விவேகானந்தரின் நூல்? அதிலிருந்தே விவேகானந்தரின் சிந்தனைகள் இந்த தேசத்தை வழிநடத்தும் என்பது கற்பனை என்பதற்கு ஆதாரங்களைக் காட்டுவோம்.

~கடமையைச் செய், பலனை எதிர்பாராதே| என்பது விவேகானந்தரின் கூற்று                 (பக்கம் -7)

அதனை பிஎம்எஸ்ஸே கடைப்பிடிக்கிறதா? இல்லையே! ஆர்டிசானுக்குப் பயிற்சி வகுப்பு நடத்துகிறேன் என்றார்கள். பணம் வாங்கிக் கொண்டு நடத்தினாலும் அதில் பயிற்சிபெற்றவர்கள் படித்து தங்களுடைய உழைப்பையெல்லாம் பயன்படுத்தி வேலைக்கு வந்து விட்டால் உடனே அவர்களிடம் சென்று எங்கள் சங்கத்தில் சேருங்கள் என்று உறுப்பினர் படிவத்தை நீட்டுகிறது. இது பலனை எதிர்பார்க்காத செயலா? இவர்களே விவேகானந்தரின் கூற்றுப்படி நடக்க முடியாதபோது அவரது சிந்தனை தேசத்தையே வழிநடத்தும் என்பது கற்பனைதானே?

அடுத்து விதவை மறுமணமே கூடாது என்கிறார். அவரது கருத்துக்கள் ஒரு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கலாம். அக்கிரஹாரங்களில் ஒருபெண் விதவையானால் மொட்டையடித்து வெள்ளைப் புடவையுடுத்தி மூலையில் உட்கார வைக்கப்பட்டிருப்பார்கள். இன்று எந்த அக்கிரஹாரத்திலாவது அது மாதிரி மொட்டைப் பாப்பாத்தியைப் பார்க்க முடியுமா? மறுமணங்கள் அங்கேயும் பெருகிவிட்டதே!

எட்டு வயதுக்குள் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைப்பதை ஆதரித்தவர் விவேகானந்தர். இன்றைக்கும் மேட்ரிமோனியலில் பார்க்கும்போது 38 வயது பிராமணப் பெண்ணுக்கே வரன் தேடுகிறார்கள். அக்கிரஹாரமே அவரது கொள்கையைக் கடைப்பிடிக்காதபோது அவரது சிந்தனை தேசத்தையே வழிநடத்தும் என்பது கற்பனைதானே?

அடுத்து நமது பெண்மையின் இலட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்கிறார். இன்றைக்கு சீதை மாதிரி எந்தப் பெண்ணையாவது அவளது கணவன் உன்மேல்; சந்தேகமாக இருக்கிறது. அதனால் நீ தீயில் இறங்கி உன்னைக் கற்புள்ளவள் என்று நிரூபித்துக் காட்டு என்றால் இந்த பிஎம்எஸ் காரர் வீட்டுப் பெண்களாவது அதனை ஏற்றுக் கொள்வார்களா?

"யோவ், உன் மேலும்தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. முதலில் நீ நெருப்பில் இறங்கிக் காட்டு, மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்வார்களா இல்லையா?

அப்படியிருக்க விவேகாநந்தரது சிந்தனை தேசத்தையே வழிநடத்தும் என்பது கற்பனைதானே?

~அறிவு விழிப்புற்றாலும் குயவன் குயவனாகவும், மீனவன் மீனவனாகவும், விவசாயி விவசாயியாகவும்தான் இருப்பான் அவரவர் குலத்தொழிலைத்தான் அவரவர் செய்வார்கள்| என்று சொல்லுகிறாரே, இன்று எந்தப் பார்ப்பானாவது தன்னுடைய குலத்தொழிலை விடாமல் செய்கிறானா? அவன் ஏதாவது ஒரு கோயிலில் சின்ன மணியை ஆட்டிக்கொண்டு தட்டில் விழும் தட்சணைக் காசை மட்டும் பெற்றுக்கொண்டு தன் குலத்தொழிலைச் செய்பவன் எவனாவது இருக்கிறானா?

கார்ப்பரேட் நிறுவனங்களில் நுழைந்து இலட்சம் இலட்சமாய் சம்பாதித்து கோடியில் புரளுகிறானா? இல்லையா? பார்ப்பனர்களே விவேகானந்தரது சிந்தனை வழி நடக்காதபோது அவரது சிந்தனை தேசத்தையே வழிநடத்தும் என்பது கற்பனைதானே?

செருப்புத் தைப்பவன் நாட்டை ஆள ஆசைப்படக் கூடாது என்றவர் விவேகானந்தர். இன்று குடியரசுத் தலைவராகää உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் வந்துவிட்டார்கள். அப்படியிருக்க விவேகாநந்தரது சிந்தனை தேசத்தையே வழிநடத்தும் என்பது கற்பனைதானே?

இன்னும் ஜாதியை ஒழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார் விவேகானந்தர். ஆனால் ஜாதியை ஆதரிக்கும் இந்த ஆர்எஸ்எஸ், பிஜேபி, பிஎம்எஸ் காரர்களே ஜாதியைப் பாதுகாக்கத்தான் நாங்கள் இயக்கம் நடத்துகிறோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லையே! அப்படியிருக்க விவேகாநந்தரது சிந்தனை தேசத்தையே வழிநடத்தும் என்பது கற்பனைதானே?

எனவே, இந்த உண்மையை ஒத்துக்கொண்ட பிஎம்எஸ்ஸைப் பாராட்டுகிறோம்.  எனவே,காலாவதியாகிப் போன பழைய சிந்தனைகளைத் தூக்கியெறிவோம்! உண்மையான மக்கள் நலனுக்குப் பாடுபடுவோம்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக