செவ்வாய், 25 அக்டோபர், 2016

பக்தியும் ஒழுக்கமும்


 கடந்த ஞாயிறன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றும் நேர்மையற்றவர்கள் என்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் நேர்மையோடும் ஒழுக்கத்தோடும் நாணயத்தோடும் நடந்துகொள்வார்கள் என்றும் கடவுள் பக்திதான் இவற்றையெல்லாம் ஊட்டுகிறது என்றும் சில பேர் நீட்டி முழக்கினார்கள்.

இந்த கடவுள் பக்தி எந்த அளவுக்கு ஒழுக்கத்தை போதிக்கிறது என்பதை மகாபாரதத்தைப் படித்தாலே போதும். ரொம்ப ரொம்ப ஒழுக்கமுள்ள தர்மரே சூதாடுகிறார். மனைவியை வைத்து சூதாடுகிறார். அதுவும் தனக்கு அய்ந்தில் ஒரு பங்கு மட்டுமே உரிமையுள்ள துரௌபதியை வைத்து சூதாடுகிறான். இப்படி ஒழுக்கக் கேட்டிற்கும் துரோகத்திற்கும் வஞ்சனைக்கும் மதநூல்களில் இருந்து ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.

இந்த மதவாதிகள் சொல்லும் பக்தியும் ஒழுக்கமும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு மதுரையில்  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைச் சொல்லலாம். அழகர் ஆற்றில் இறங்குகிறார் ஆற்றில் இறங்குகிறார் என்று பக்திச்சுவை நனிசொட்டச் சொட்ட பத்திரிகைகள் எழுதுகின்றன. தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. ஆற்றில் ஏன் இறங்குகிறார்? இறங்கி எங்கே போகிறார்? ஏன் போகிறார்? எப்பொழுது திரும்பி வருவார் என்பதைப்பற்றி யாராவது எழுதுகிறார்களா?         

 மதுரையில் சொக்கநாதருக்கும் மீனாட்சிக்கும் திருமணமாம். அந்தத் திருமணத்துக்கும் தேரோட்டத்துக்கும் எத்தனை ஆர்ப்பாட்டங்கள்? அமர்க்களங்கள்? தங்கத்தால் குதிரை. தங்கத்தால் காளை. வெள்ளியால் காளை. வெள்ளிக்குதிரை என தங்கமும் வெள்ளியும் ஜொலிக்கின்றன. திருமணத்துக்கு வரவேண்டிய பெண்ணின் அண்ணன் கள்ளழகர் நேரத்துக்கு வரவில்லை. திருமணம் முடிந்து விடுகிறது. நான் வருவதற்குள் எப்படித் தாலி கட்டலாம் என்று கோபித்துக்கொண்டு வைகை ஆற்றில் இறங்கி வைப்பாட்டி வீட்டுக்குச் செல்கிறார். அங்கே மூன்று மாதம் தங்கி உல்லாசமாய் இருக்கிறார். மூன்றுமாதமாய் தன்னுடைய கணவனைக் காணவில்லையே என்று அழகரின் மனைவி தேடி வந்து தன்னுடைய கணவன் தேவடியார் வீட்டில் இருப்பதைப் பார்த்து விளக்குமாற்றால் அடித்து வீட்டுக்குக் கூட்டி வருகிறார்.

இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும் அமர்க்களங்களும். இந்தத் திருவிழாக் கொண்டாடுகின்ற பக்தர்களுக்கு இந்தக் கதையைக் கேட்டால் பக்தி உணர்வு பிறக்குமா? வேறு உணர்வு பிறக்குமா? சொக்கருக்கும் மீனாட்சிக்கும் கல்யாணம் எத்தனை முறை நடப்பது? சென்ற ஆண்டு நடந்த திருமணம் என்னாச்சு? டைவர்சா? சென்ற ஆண்டுதான் லேட்டா வந்தோமே இந்த ஆண்டாவது சீக்கிரம் போகணும் என்று அழகர் சீக்கிரம் வரலாமே? ஏன் வரவில்லை? சென்ற ஆண்டு மச்சான் வருவதற்குள் தாலி கட்டியதால் கோபித்துக் கொண்டு போனானே இந்த ஆண்டாவது கொஞ்சம் பொறுத்திருந்து தாலி கட்டலாம் என்று சொக்கநாதரும் தாலி கட்டலாமே? மீனாட்சிதான் என் அண்ணன் வரும்வரை பொறுத்திருங்கள் நாதா என்று சொக்கரைக் கேட்டிருக்கலாமே? ஏன் இவையெல்லாம் நடக்கவில்லை? எல்லாம் பிள்ளை விளையாட்டு என்றார் வள்ளலார். சிறு பிள்ளைகள் மரப்பாச்சி பொம்மையை வைத்து விளையாடுவதுபோல் பெரியவர்கள் கடவுள் பொம்மையை வைத்து விளையாடும் விளையாட்டுத்தான் இதுபோன்ற தேர்த்திருவிழாக்கள் கொண்டாட்டங்கள் எல்லாம்.

இதற்காக எத்தனை லட்சம் மக்கள் கூடுகின்றார்கள்? எத்தனை கோடி பணம் செலவாகிறது? இந்தக் கூட்டத்தில் என்ன என்ன ஒழுக்கக் கேடுகள் நடக்கின்றன? எத்தனை நாட்கள் அரசு இயந்திரங்கள் முடக்கப்படுகின்றன? இதனால் காதொடிந்த ஊசிமுனையளவாவது இந்த நாட்டுக்கோ சமுதாயத்துக்கோ நன்மை உண்டா? பொருளாதார நிபுணர்கள் இதில் எவ்வளவு நட்டம் என்பதை அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா? பொறுப்புள்ள அரசாங்கம் இதனைத் தடை செய்ய வேண்டாமா?

கள்ளழகர் ஆற்றில் இறங்கி தேவடியாள் வீட்டுக்குப் போவதுபோல் சீரங்க ரெங்கநாதனையும் உறையூர் நாச்சியாரிடம் கொண்டுவந்து விட்டு விடிய விடியக் காவல் காத்து பார்ப்பனர்கள் தூக்கிச் செல்வதை சேர்த்தி வைபவம் என்று கொண்டாடுகிறார்களே! இவையெல்லாம் ஒழுக்கத்தை வளர்க்கத்தானா? இந்த இலட்சணத்தில் பக்தி உள்ளவன்தான் ஒழுக்கமாக இருப்பான். பக்தி இல்லாதவனுக்கு ஒழுக்கம் இருக்காது என்பதெல்லாம் எவ்வளவு ஆணவமான பேச்சு என்பது விளங்கவில்லையா? சிந்திப்பீர்! ஒருவனுக்கு பக்தி இல்லாவிட்டால் யாருக்கும் எந்த நட்டமுமில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் எலலாமே பாழ் என்ற பெரியார் சொன்னதன் உண்மையைப் புரிந்துகொள்வீர்!
14.05.2014 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக