செவ்வாய், 25 அக்டோபர், 2016

இந்தி படிக்காததால் எங்கள் வாழ்வு பாழாய்விட்டது என்று புலம்புகிறார்கள்



நம்முடைய தமிழர்கள் இப்பொழுது ரொம்பப்பேர் மனவருத்தத்தில் இருக்கிறார்கள். அதாவது இந்த திராவிடக் கட்சிக்காரர்கள் இந்தியைப் படிக்க வேண்டாம் என்று சொல்லி நம் வாழ்வையே பாழாக்கி விட்டார்கள். நாமெல்லாம் இந்தி படித்திருந்தால் எங்கேயோ இருந்திருப்போம் என்று அங்கலாய்க்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்           

இந்தியை எதிர்த்தவர்கள் திராவிட இயக்கத்தினர் மட்டுமல்ல. பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை தனது நவசக்தி இதழில் கடுமையாக விமர்சனம் செய்த திரு.வி.கää சுத்த சைவ அன்பர்கள் இந்த நாத்திகர்களைக் கொல்லாமல் இன்னும் விட்டுவைத்திருக்கிறார்களே என்று சொன்ன மறைமலைஅடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உட்பட எதிரும் புதிருமாக இருந்தவர்களெல்லாம் பெரியாருடன் ஒன்று சேர்ந்துதான் இந்த இந்தியை எதிர்த்தார்கள். அதற்குக் காரணம் என்ன?


1938ல் அன்றைய சென்னை மாகாணப் பிரதம அமைச்சராக இருந்த இராஜாஜிதான் முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தியைப் புகுத்தினார். அப்பொழுது இராஜாஜி என்ன சொன்னார் தெரியுமா? இந்த நாட்டின் தேசிய மொழியாக இருக்கத் தகுதியானது சமஸ்கிருதம்தான். அதனை தேசியமொழியாக அங்கீகரிப்பதற்கு முன்னோடியாக இடைக்காலமாக இந்தி புகுத்தப்படுகிறது என்றார். இதே கொள்கையைத்தான் ஆர்எஸ்எஸ்சும் சொன்னது. சமஸ்கிருதம் ஆட்சிமொழியாவதற்கு முன்னால் இடைக்காலமாக இந்தி இருக்கட்டும் என்றது ஆர்எஸ்எஸ்.

இவர்களுடைய நோக்கம் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு மனுதர்மம்தான் இந்த நாட்டுக்கு அரசியல் சட்டமாக ஆக வேண்டும். அதன்படி ஏற்கனவே இருந்த வருணாசிரமம் கெட்டியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம் பிராமணர்கள்தான் எல்லாவற்றிலும் தலைமையேற்பவராக இருக்க வேண்டும் என்பதுதான்.     

இந்தியைப் புகுத்திய இராஜாஜி 1938ல் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார். அதன்பிறகு 1952ல் சுதந்திரம் பெற்ற பிறகும் மீண்டும் தமிழக ஆட்சிப் பொறுப்பையேற்ற இராஜாஜி 6000 பள்ளிகளை இழுத்து மூடியதுடன் ஒவ்வொருவரும் அவரவர் ஜாதித் தொழில்களைத்தான் செய்ய வேண்டும் என்றும் சட்டம் இயற்றினார் என்பதிலிருந்தே இதனுடைய ஆபத்தைப் புரிந்துகொள்ளலாம். இந்த ஆபத்தை உணர்ந்த காரணத்தால்தான் எதிரும் புதிருமாக இருந்த தமிழகத் தலைவர்கள் இந்தியை எதிர்த்தார்களே தவிர வேறு எந்த உள்நோக்கமோ குறுகிய எண்ணமோ கிடையாது. அவர்கள் அப்படி எதிர்க்காமல் இருந்திருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும்? தமிழர்கள் படித்திருக்க முடியுமா? வேலைவாய்ப்பைப் பெற்றிருக்க முடியுமா? ஜாதி ஆணவத்தின் தாக்கம் குறைந்திருக்குமா?


இந்தியை நாங்கள் படித்திருந்தால் வடமாநிலங்களில் எங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கும் என்பது இவர்களது குற்றச்சாட்டு. அப்படியானால் இந்திக்காரன்கள் எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டதா? வடமாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டமே கிடையாதா? அவ்வாறு இருந்தால் தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்புக்காக கொண்டுவரப்பட்ட பெல் நிறுவனத்தில் இந்திக்காரன்கள் இவ்வளவுபேர் எப்படி வந்தார்கள்?  

இந்த இந்தி ஆதரவாளர்கள் யாராவது இந்த இந்திக்காரன்கள் ஆதிக்கத்தை எதிர்த்துப் பேசியதுண்டா? ஒரு காலத்தில் அனைத்து வேலைவாய்ப்புக்களும் பார்ப்பனர்களுக்கே தாரைவார்க்கப்பட்ட போது பிராமணர்கள் அறிவாளிகள், அதனால் அந்த வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள் என்றார்கள். அதுபோல இப்பொழுது இந்திக்காரன் ஆதிக்கத்தைப் பேசினால் இந்திக்காரன் நம் தமிழனைவிட அறிவாளி, அதனால் அவன் வேலைக்கு வந்துவிடுகிறான் என்று சமாதானம்தான் இவர்களால் பேசப்படுகிறது.          

இது தமிழனை அவமானப்படுத்தும் செயலாகும். தமிழுக்கும் தமிழினத்துக்கும் எதிரானவர்கள்தான் இந்தி படிக்காததால் எங்கள் வாழ்வு பாழாய்விட்டது என்று புலம்புகிறார்கள். அவர்கள் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை. தாராளமாகப் படிக்கட்டும் ஆனால் தமிழின முன்னேற்றத்திற்காக உழைத்த திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தாமல் இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக