புதன், 12 அக்டோபர், 2016

தன்னுரிமைத் தமிழர் தேசியத் திருநாள்



இருண்டு கிடந்தது ஏற்றத் தாழ்வால்
மருண்டு போனது மண்ணில் மானுடம்
உருண்டு திரண்டனன் உஞ்ச விருத்திகள்
சுருண்டு கிடந்தனர் சூழ்ச்சியால் தமிழர்!

பிறவி பேதம் பேசும் நாட்டினில்
வறண்டு போனது வாழ்வும் வளமும்
அறிவுத் துறையில் ஆரியம் புகுந்திட
அறிவைத் திரித்து ஆற்றலை முடக்கியே!

வஞ்சகப் பார்ப்பனர் வர்ணதர் மத்தால்
வஞ்சிக்கப் பட்டு வாழ்விழந் தமக்கள்
பஞ்சம சூத்திரர் பன்னூ றாண்டாய்
பஞ்சைப் பராரியாய் படுதுயர் பட்டார்!

மன்னர் ஆட்சியில் மனுமுறை தவறா
மன்னர் மாறினும் மாறா மனுமுறை
என்றுமே பார்ப்பனர் ஏற்றங் கொண்டிட
அன்றும் இன்றும் ஆளுமை காணீர்!

வேதம் ஓதி வேள்விகள் செய்தார்
சாதியும் மதமும் சடங்குக ளிங்கு
ஆதியி லில்லை அருந்தமிழ் நாட்டினில்
பாதியில் வந்தது பாழ்படுத் திற்று!

கடவு ளென்னும் கற்பனை காட்டி
மடமை வளர்த்தார் மக்களை ஒடுக்கவே
உடைமை வர்க்கம் ஓங்கிடத் தமிழரோ
முடக்கப் பட்டார் முடமாய் மூலையில்!

மானமும் வீரமும் விளைந்த மண்ணில்
மானமும் அறிவும் மாந்தர்க் கென்று
மானிட மேன்மையில் மனமும் கொண்டு
மானம் மீட்டார் மானமிகு பெரியார்!

சாதியும் மதமும் சண்டையில் முடிய
சாதியை ஒழித்து சமத்துவம் காண
மதவெறி மாய்த்து மானுடம் மீட்க
புதுமை நோக்கில் புரட்சிப் பெரியார்!

பீடுயர் சிந்தனை யாளர் பெரியார்
கேடற ஒழித்து கீழ்மை அகற்ற
நாடு நகரம் நானில மெங்கும்
பாடுகள் பட்டார் பகுத்தறிவைப் பாய்ச்சியே!

தன்மானச் சீயம்; தமிழடை யாளம்
தன்னிக ரில்லாத் தமிழர் தலைவர்
தன்முனைப் புள்ள தலைவரின் பிறந்தநாள்
தன்னுரிமைத் தமிழர் தேசியத் திருநாளே!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக