வியாழன், 13 அக்டோபர், 2016

ஜாதி ஒழிய வேண்டுமானால் பார்ப்பான் என்பது சித்திரத்திலும் இல்லாதவாறு ஒழிக்கப்பட வேண்டும்| என்றார் பெரியார்.


 ஜாதி ஜாதி ஜாதி என்று தாழ்ந்துபோன தமிழன், தன்னைத் தமிழன் என்று சொல்வதற்கு மறந்துபோனான். ஜாதிக்கு ஏதாவது அடையாளம் உண்டா? கறுப்பாக இருப்பவர்கள் ஒரு ஜாதி, சிவப்பாக இருப்பவர்கள் இன்னொரு ஜாதி, மஞ்சளாக ஒரு ஜாதி என்று ஏதாவது அடையாளம்; இருக்கிறதா? A,B,AB,O என்ற இரத்த வகையிலும் இது இன்ன ஜாதி இரத்தம் என்று எதுவும் உண்டா? எட்டுக்கோடித் தமிழனில் யாரைப் பார்த்தாலும் நடையை வைத்தோ உடையை வைத்தோää உணவுப்பழக்கத்தை வைத்தோ தோற்றத்தை வைத்தோ இவர் இன்ன ஜாதி என்று கண்டுபிடிக்க முடியுமா?

 நாம் தண்ணீர் என்று சொன்னால் ஜலம் என்றும், வீட்டுக்குப் போகிறோம் என்பதை ஆத்துக்குப் போறோம் என்றும் பேசிக்கொண்டு நாம் வேட்டி அணிந்தால் பஞ்சக்கச்சத்தை அணிந்துகொண்டு, கிராப் வெட்டினால் சிண்டு வைத்துக்கொண்டு, சட்டை அணிந்தால் வெறும் உடம்புடன் பூணூல் திருமேனியுடன் காட்சியளிக்கும் கூட்டத்தினரை மட்டுமே இன்ன ஜாதி என்று அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா இல்லையா?

 டீக்கடையில் பெஞ்சு துடைக்கும் அழுக்குப் பார்ப்பானை சாமி என்று கூப்பிட்டு சாமி ஒரு டீ குடுங்கோ என்று சொல்லுகிறோம் என்றால் அதன் பொருள் என்ன? நம்முடைய பெண்கள் சாதாரண புடவை அணிந்தால் அக்கிரஹாரப் பெண்மணிகள் மட்டும் மடிசார் கட்டுவது ஏன்? ஆக, ஜாதியினுடைய அடையாளத்தை இந்த 2013லும் காத்து வருபவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா?

 அதனால்தான் பெரியார்; ~ஜாதி ஒழிய வேண்டுமானால் பார்ப்பான் என்பது சித்திரத்திலும் இல்லாதவாறு ஒழிக்கப்பட வேண்டும்| என்றார். இந்த ஜாதிக்காரன் இன்ன தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றார் பெரியார்.

பார்ப்பானுக்குக் கிடைக்கும் உயர்ஜாதிக்காரன் என்ற மரியாதை எப்படிக் கிடைக்கிறது? அவன் செய்யும் அர்ச்சகர் தொழிலால்தானே? அதனைப் பார்ப்பான் மட்டுமே செய்வதனால்தானே அவனை எல்லோரும் சாமி என்று கூப்பிடுகின்றனர்? அதனை மாற்றி அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி விட்டால் பார்ப்பானுக்கு மட்டும் கிடைத்த தனி மரியாதை குறைக்கப்பட்டு எல்லோருக்கும் சம அந்தஸ்து கிடைத்து விடாதா? அதனால்தான் தந்தை பெரியார் தனது இறுதி இலட்சியமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்றார்.

ஜாதி ஒழிப்புக்கான அந்த இறுதிப் போராட்டம் நிறைவடையாமலே அவர் மறைந்ததால்தான் அவரது சீடரான கலைஞர் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமலே புதைத்து விட்டோம் என்று சொல்லி அந்த முள்ளை அகற்றும் முகமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்து அதற்கான பயிற்சிப்பள்ளியைத் துவக்கி அதிலே 206பேர் தேர்ச்சி பெற்று பணிவாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். அது நடைமுறைக்கு வந்துவிட்டால் ஜாதியை வைத்து காலங்காலமாக ஏமாற்றிப் பிழைத்து வந்த கூட்டத்துக்கு அது பேரிடியாகப் போய்விடும் என்பதால் உச்சநீதி மன்றம் சென்று அதற்குத் தடை வாங்கி இருக்கிறார்கள்.

சுதந்திரம் அடைந்த நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாக இருக்க முடியுமா? என்று கேட்டு ஜாதி ஒழிப்பை சட்டமாக்க வலியுறுத்தி பல்லாயிரம் தொண்டர்களுடன் போராட்டம் நடத்தி சிறை சென்றவர் பெரியார்.

ஜாதியை வேரோடும் வேரடி மண்ணோடும் புதைக்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் அதற்கு அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பல வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார். அவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள 22-07-2013 அன்று மாலை 5.30 முதல் 8.30 மணிவரை பெல் சமுதாயக் கூடத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்துகொண்டு தெளிவுபெற வாரீர்! வாரீர்!! என அன்புடன் அழைக்கிறோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக