வெள்ளி, 14 அக்டோபர், 2016

மன்பதை காத்த மானமீட்பர் பெரியாரே!

 மன்பதை காத்த மானமீட்பர் பெரியாரே!


பெரியார் என்னும் போராளி பிறவிப்     
பேதத்தை ஒழித்துக் கட்டினாரு                      
ஆரியப் பார்ப்பனரின் அட்டூழி யத்தை    
 ஆட்டங் காண வைத்தாரு                             
 தன்னுரிமைப் போர்தொடுத்து தமிழனின் தனித்த   
அடையா ளத்தைமீட் டெடுத்தாரு                        
தன்மான இயக்கங் கண்டு தமிழகத்தை     
தலைகீழாய்ப் புரட்டிப் போட்டாரு!

கடவுளர் பேரால் கதைபல சொல்லி     
 காசுப் பறிப்பதைச் சாடினாரு                         
முடைநாற்றம் வீசிடும் மூடநம் பிக்கையை    
அய்யா வீறுடன் தாக்கினாரு                         
கல்லுச் சாமியை உடைத்து சல்லியாக்கிச்    
சாலைபோடு வேனென்று சொன்னாரு                         
 பில்லி சூனியம்பேய் சோதிடப் பித்தலாட்     
டத்தைத் தோலுறித்துக் காட்டினாரு!

தன்மான மிழந்து தலைவிதியை நொந்தாரை    
தன்னெழுச்சி கொள்ளச் செய்தாரு                      
எனக்கு மேலே கீழே எவனுமில்லை    
மனிதரெல்லாம் சமமென் றாரு                         
மேலோகம் கீழோகம் ஈரேழு பதினாலு   
 உலகமென்பதை மறுத்தாரு                             
எமகண்டம் இராவு குளிகைப் போன்ற      
நேர வீணடிப்பை எதிர்த்தாரு!

கல்வி வள்ளல் காமராசரை முதல்வராக்கி     
கல்வி நீரோடை பாய்ச்சினாரு                                
எல்லார்க்கும் கல்வி என்பதை நாட்டி     
கல்விப் புரட்சி கண்டாரு                                         
ஏற்றத் தாழ்வகற்றும் இடஒதுக் கீட்டை    
கொண்டுவந்து ஏற்றம் புரிந்தாரு                              
 பற்றற்று வாழ்ந்த பெரியார் கொண்ட       
மானிடப் பற்றால் உயர்ந்தாரு!

இருபதாம் நூற்றாண்டில் அய்யா பெரியார்     
மானிட மேட்டிமைக்குப் பிறந்தாரு                             
 இருட்டில் வதித்த தமிழனுக்கு இருட்டை    
 விலக்கி வெளிச்ச மிட்டாரு                                     
மனுதர்மம் கோலோச்சிய மண்ணில் மானுட    
மறுமலர்ச் சிக்குவித் திட்டாரு                          
மன்பதை காக்கவே மானமீட்பர் பெரியார்    
அரும்பெரும் பாடுகள் ஆற்றினாரே!

காவிகள் திட்டத்தை முறியடிப்போம்!
சமக்கிருத மென்றால் பல்வேறு மொழிகளால்     
செய்யப் பட்டது என்பதாம்                                  
 சமக்கிருதத்தில் திராவிடம் இந்துஸ்தானி உருது   
பாரசீகம் அரேபியம் கலந்தவை                           
  சமக்கிருதம் மொழிக்கெல்லாம் தாயென்பார் அங்ஙன   
மாயின் பேச்சு வழக்கற்றதேன்?                         
 சமக்கிருதம் வேதமொழி மட்டுமே அறிவியல்    
பண்பாட்டுக் கூறுகள் அதனிலில்லை  
                            
பார்ப்பனர் மேன்மைக்கும் உயர்ச்சிக்கும் தூக்கிப்   
பிடிக்கின்ற மொழியே சமக்கிருதம்                   
 பார்ப்பனரில் வெகுசிலர் பேச்சு மொழியாய்     
மட்டும் பயன்படும் மொழியாம்                              
 பார்ப்பனரே அர்ச்சகர் என்பதால் இந்நாட்டில்    
என்றுமொரு வருக்கமாய் இருக்கின்றார்                          
பார்ப்பன சனதாவின் ஆட்சி என்பதால்    
செத்தமொழிக்கு உயிரூட்டு கின்றார்!

சூத்திரனுக்குஎதைக் கொடுத்தாலும் கல்வியைக்    
கொடுக்காதே என்றுசொன்ன மொழியெது?                          
சூத்திரன் வேதத்தைப் படிக்கக் கேட்கக்      
கூடா என்றுரைத்த மொழிஎது?                           
 நூற்றாண்டுக் காலமாய் படிக்கக் கூடா     
தென்று தடுத்துவந்த மொழிஎது?                                  
 நூற்றுக்குத் தொண்ணூற்று ஏழுபேர் உரிமையை    
இன்று முடக்குவது எந்தமொழி
இந்திய அரசின் எட்டாவது அட்டவணை     
மொழிகள் இருபத்தி இரண்டே                                         
இந்திய மொழிகளில் இதுவும் ஒன்றே      
எந்த வகையில் உயர்ந்தது                                             
 எந்த மெய்யியல் கோட்பா டாயினும்      
மக்கள் மொழியில் இருந்தால்                               
அந்தமொழி வாழும் இல்லையேல் எம்மொழி     
யாயினும் வழக்கற்று வீழுமே!

வரலாற்றைப் படைத்தது தமிழினம் வஞ்சகப்   
 பார்ப்பனர்க்கு வரலா றில்லை                               
 வரலாற்றில் பார்ப்பனர் வந்தேறி எத்திப்     
 பிழைத்து ஏற்றங் கண்டார்                                   
முந்தைய பிஜேபி ஆட்சியில் மூக்கடை     
 பட்டார் வரலாற்றைத் திருத்தி                                
இந்துவிய மாக்கலின் கூறாம் சமக்கிருதம்    
காவிகள் திட்டத்தை முறியடிப்போம்!

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக