புதன், 12 அக்டோபர், 2016

ஜாதி சங்கங்கள் தேவைதானா?


 தமிழர்கள் அனைவரையும் கவுண்டர், வன்னியர், வெள்ளாளர்,தேவர், உடையார், பிள்ளை, செட்டியார் என்று; பல்வேறு ஜாதிகளாக இந்துமதம் பிரித்துள்ளது.. நான் அந்த ஜாதியைவிட உயர்ந்தவன். இந்த ஜாதி என்னுடைய ஜாதியைவிடக் கீழானது என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனிதிலும் நிலவுகிறது. தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஒருவருக்கொருவர் மேல் கீழ் என்ற கேவலமான நிலையும் உள்ளது.

ஆனால் இந்தக் கேவலத்தைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. என்னதான் அந்த ஜாதிக்கு உன் ஜாதி உயர்ஜாதி என்ற எண்ணம் இருந்தாலும் நீங்கள் எல்லோருமே எங்களை விடக் கீழ்ஜாதிதான் என்கிறார்கள் பார்ப்பனர்கள். தமிழர் அனைவரையும் சூத்திரர், பஞ்சமர் என்ற இரு பிரிவிலேயே இந்துமதம் அடைத்து வைத்திருக்கிறது. சூத்திரர் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்பது அதன் பொருள். பஞ்சமன் என்றால் சண்டாளன் என்று பொருள். இவை அனைத்தையும் ஒருவர் ஏற்றுக் கொண்டால்தான் நான் யார் தெரியுமா? நான் சேரனுக்குச் சொந்தக்காரன். சோழனுக்குப் பங்காளி,ராஜாராஜனி;ன் வாரிசு என்று பெருமையாகச் சொல்ல முடியும். சேர சோழ பண்டியனின் வாரிசுகள் அவர்கள் கட்டிய கோயில் கருவறைக்குள்ளே நுழைய முடியுமா? உண்மையில் அதுதான் கேவலமானது. மானமும் அறிவும் அற்ற தன்மை என்று பெரியார் கூறுகிறார்.

1901ல் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அரசாங்கம் சூத்திரர், பஞ்சமர் என்றே அதன் குறிப்பில் எழுதியது. அதைப் பார்த்து சிலர் நாங்கள் சூத்திரர் அல்ல அதற்கும் மேலே என்று வாதிட்டார்கள். உடனே அரசாங்கம் அவர்களை சற்சூத்திரர் என்று குறித்தது. பெரியார்தான் கேட்டார் சூத்திரர் என்றால் தேவடியாள்மகன். சற்சூத்திரர் என்றால் நல்ல தேவடியாள்மகன் என்று பொருள். இதிலே நீங்கள் சற்சூத்திரர் பட்டம் வாங்கத் துடிப்பது கேவலமில்லையா? என்று கேட்டார். இதை அவமானம் என்று கருதி அந்த ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டவர் பெரியார். ஆனால் இன்னமும் சிலர் ஜாதியைப் பாதுகாக்க வேண்டும் என்று துடிப்பதும் ஜாதி சங்கங்கள் வைத்துக்கொண்டு ஜாதியை வளர்ப்பதும் தேவைதானா? ஜாதியின் காரணமாகத்தான் நாம் அனைவரும் பின்தங்கிய நிலைக்கு ஆளானோம் என்பதால்தான் அவர்கள் முன்னேற ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரியார் பாடுபட்டார். அம்பேத்கர் அவர்கள் சட்டம் இயற்றினார்.

ஜாதி அடிப்படையில் மத்திய அரசுப்பணிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு இருந்தது. மாநில அரசில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இருபிரிவினருக்கும் இருந்தது. அப்பொழுது தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையே ஒழிக்க சூழ்ச்சி செய்தார்கள். வி.பி.சிங் அவர்களால் மண்டல்குழு அறிக்கை அமுலான பிறகு தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நியாயம்தான். பிற்படுத்தப்பட்டோருக்குத் தேவையில்லை என்று உயர்ஜாதி ஊடகங்கள் எழுத ஆரம்பித்தன. மண்டல் குழு அறிக்கையின்மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்புக் கிடைத்தது. மண்டல்குழு அறிக்கை அமுலானதை எதிர்த்துப் பார்ப்பனர்கள் போராடியபோது அதற்கு எதிராக திராவிடர் கழகம்தான் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தியது. திருச்சியில் நடந்த போராட்டத்திற்கு பிஹெச்இஎல் லில் இருந்த அனைத்து பிற்படுத்தப்பட்ட ஜாதி சங்கங்களுக்கும் அழைப்புக் கொடுத்தும் ஒருவர்கூட அதில் கலந்துகொள்ளவில்லை. பிற்படுத்தப் பட்டவர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக அமுல்படுத்தப்படுகிறதா என்பதைப்பற்றிக்கூட அவர்கள் கவலைப்படுவதில்லை

எனவே, ஜாதி சங்கம் என்பது ஜாதியினால் ஏற்பட்ட பாதிப்பை முறியடித்து அவரவருடைய உரிமையைப் பெறவும் ஜாதியை படிப்படியாக ஒழிக்கவும் போராடுவதுதான் அதன் வேலையாக இருக்க வேண்டும். அதனை விடுத்து தொழிலாளர் மத்தியில் ஜாதி உணர்வைத் தூண்டிவிட்டு ஜாதிக்குள் ஜாதி திருமண உறவைப் பாதுகாப்பதற்கு மட்டும்தான் ஜாதி சங்கங்கள் பாடுபடும் என்றால் அது மிகமிகக் கேவலமானது மட்டுமல்ல, சுயமரியாதையற்ற தன்மையும் ஆகும். ஆகவே தொழிலாளர்கள் ஜாதி சங்கங்களைப் புறக்கணிக்க வேண்டும். சமத்துவ சமுதாயம் படைக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
27-11-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக