வியாழன், 13 அக்டோபர், 2016

இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவதனால் மட்டும் ஜாதியை ஒழித்துவிட முடியாது.


 ஒரு ரவுடிக்கும்பல் ஆயுதமற்றிருக்கிற மக்கள் கூட்டத்தைத் தாக்குகிறது. கையைக் காலை உடைத்து விடுகிறது. ரவுடிக்கும்பல் இனி அடிக்கக் கூடாது என்று சமூகநல ஆர்வலர்கள் குரல் கொடுக்கிறார்கள். அடிப்பது எனது பிறப்புரிமை என்று அந்த ரவுடிக்கும்பல் சொன்னால் அதனை அனுமதிக்க முடியுமா?
 அடிப்பட்டவரை மருத்துவனையில் சேர்க்கிறோம். நல்ல மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கிறார்கள். அடிபட்டவரைப் பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள், பழங்கள்,பிஸ்கட்டுகள், ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று வாங்கி வந்து நாள்தோறும் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.

நல்ல கவனிப்பு இருக்கிறது, நாள்தோறும் , பழங்கள், பிஸ்கட்டுகள், ஹார்லிக்ஸ், பூஸ்ட் கிடைக்கிறது என்பதற்காக நான் நிரந்தரமாக மருத்துவ மனையிலேயே தங்கி விடுகிறேன் என்று எந்த நோயாளியாவது சொல்வானா? சீக்கிரம் குணமாகி வீட்டுக்குச் செல்வதை விரும்புவானா? சாதாரண மனநிலையிலுள்ள எவரும் சீக்கிரம் குணமடைந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றுதானே விரும்புவர்?

 அதேபோலத்தான் தாழ்த்தப்பட்டவர்களும் - பிற்படுத்தப்பட்டவர்களும் இந்தமதப் பார்ப்பன ஆதிக்கத்தால் நீண்ட காலம் கல்வி மறுக்கப்பட்டு வேலைவாய்ப்பில்லாமல் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தார்கள். அப்படிப் புறக்கணித்ததைத் தவறு என்று எந்தப் பார்ப்பானும் பரிகாரம் செய்ய முன்வரவில்லை. மாறாக தகுதியும் திறமையும் தமக்கே சொந்தம் என்று இன்னமும் வாய்க்கொழுப்பாகப் பேசி வருகிறார்கள்.

நல்ல அரசாக இருந்தால் இத்தனை ஆண்டு காலம் நீங்களே கல்வி வேலைவாய்ப்பில் எல்லாவற்றையும் அனுபவித்து வந்துள்ளீர்கள். எனவே, இனி கொஞ்ச காலத்திற்கு உங்களுக்கு இது கிடையாது என்று சொல்ல வேண்டும். அப்படி இதுவரை யாரும் கூறவில்லை. தண்டனையும் வழங்கவில்லை. மாறாக பிற்படு;த்தப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

இவ்வாறு சொல்லும்போது சிலர் திடீர் ஜாதி ஒழிப்பு வீரராகி பார்ப்பானெல்லாம் ஜாதியை ஒழிக்க விரும்புவது போலவும், இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்கள் ஜாதியை ஒழிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்றும் பேசி வருகிறார்கள். அதற்காகத்தான் மேலே சொன்ன உதாரணத்தைக் காட்டுகிறோம்.

ஜாதி என்பது சமுதாயத்தில் நிலவுகின்ற வியாதி. அதில் பாதிக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் ஆகிய இரு பிரிவினரும்தான். இரு பிரிவினருக்குமே இட ஒதுக்கீடு இருக்கிறது. இதில் தாழ்த்;தப்பட்டவருக்கு மட்டுமே இருப்பதாகக் கருதிக்கொண்டு சிலர் வாதிடுகிறார்கள். இட ஒதுக்கீடு என்பது அந்த ஜாதியினால் ஏற்பட்ட கேட்டைப் போக்குகின்ற மருத்துவம். மருத்துவ வசதி கிடைக்கிறது என்பதற்காக எவரும் நிரந்தர நோயாளியாக இருக்க விரும்ப மாட்டார்கள். அதுபோலத்தான் சலுகைகள் கிடைக்கிறது என்பதற்காக ஜாதியின் இழிநிலையை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஜாதியினால் முழுப்பலனையும் அடைந்தவர்கள், இன்றைக்கும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பார்ப்பனர்களும் உயர்ஜாதியினரும்தான். அவர்கள் மனதில் தாங்கள் உயர்ந்தவர்கள் அல்ல. நமக்குக் கீழ் யாரும் தாழ்ந்தவர்களும் அல்ல என்ற மனப்பான்மை உருவாக வேண்டும். அப்பொழுதுதான் ஜாதி ஒழியுமே தவிர இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவதனால் மட்டும் ஜாதியை ஒழித்துவிட முடியாது.
ஜாதி ஒழிப்பிற்கு சரியான வழியைச் சொன்னவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்தான். அந்த வழியைக் கடைப்பிடிப்பதன் மூலமே ஜாதியை முற்றிலும் ஒழிக்க முடியும். அவர்கள் வழியைக் கடைப்பிடிப்போம். ஜாதியையும் ஜாதியின் ஆணிவேரையும் முற்றிலும் ஒழிப்போம். சமுதாய சமத்துவம் காண அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக