திங்கள், 31 அக்டோபர், 2016

பெரியார் மதம் மாறாததை ஒரு பெரிய குறையாகப் பேசுகிறார்களே? அதன் பொருள் என்ன?

தலித்தியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் பெரியார் மதம் மாறாததை ஒரு பெரிய குறையாகப் பேசுகிறார்களே? அதன் பொருள் என்ன?

ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபட்டவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. இரண்டுபேரும் ஜாதி ஒழிப்புக்காகச் சரியான வழிகளைக் கண்டறிந்தார்கள் என்பதிலும் எந்த அய்யமும் கிடையாது.

ஆனால் இந்த இந்துமத சனாதனவாதிகளிடம் போராடிப் பயனில்லை. இந்த இழிவிலிருந்து தானும் தனது மக்களும் விலகிவிட்டால் போதும் என்று கருதிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பவுத்த மார்க்கத்துக்கு மாறினார். அதனைத் தந்தை பெரியாரும்கூட ஆதரித்தார்.

அண்ணலுடைய நிலைப்பாட்டை தந்தை பெரியார் எந்த விதத்திலும் குறைகூறியதில்லை.
ஆனால் தந்தை பெரியார் அவர்கள் மதம் மாற விரும்பவில்லை. மதம் மாறிவிட்டால் தன்னைப் பொறுத்தவரையில் ஜாதியற்றவனாக ஆகிவிடலாமே தவிர இந்த இந்துமதச் சாக்கடையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மாட்டிக்கொண்டு பார்ப்பன சனாதனக் கும்பலிடம் தவித்துக் கொண்டிரக்கிற கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன தீர்வு?
அந்த மக்களை இந்த ஜாதிச் சகதியிலிருந்து மீட்டெடுக்க வேண்டாமா?
அந்த மக்களுடைய இழிவைத் துடைத்தெறிய வேண்டாமா? அவர்களது தன்மானத்தை கவரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா?
என்பதைப்பற்றிச் சிந்தித்த தலைவர் தந்தை பெரியார்.

இந்து மதத்திலேயே இருந்துகொண்டு தன்னை ஒரு இந்துவாக இந்து சம்பிரதாயங்களைக் கடைப்பிடிககிற ஒரு உயர்ஜாதிக் காரராகக் காட்டிக் கொள்வதல்ல அவருடைய நோக்கம். மாறாக எவையெல்லாம் ஜாதியைப் பாதுகாக்கிறதோ அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார். அதற்காக தன் இறுதிநாள்வரை பாடுபட்டார்.

சாக்கடை ஒழிய வேண்டும். அதனால் வியாதி பரவுகிறது என்று சொன்னால் அந்த சாக்கடை எங்கு இருக்கிறதோ அங்கேயே இருந்து அதன் நாற்றத்தையும் பொறுத்துக்கொண்டு அதனை ஒழிக்கின்ற பணியைச் செய்தால்தானே சாக்கடை ஒழியும்? அதைவிட்டு சாக்கடை இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன். அதன் வாடையே எனக்கு ஆகாது. வேறு எங்காவது சென்ற விட்டால் இந்த சாக்கடை நாற்றத்திலிருந்து தப்பி விடலாம் என்று சென்று விட்டால் எப்படி சாக்கடை ஒழியும்?
அதனால்தான் அம்பேத்கர் அவர்கள் தன்னையும் பவுத்த மார்க்கத்திற்கு அழைத்தபோது நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் ஆனால் நான் இங்கேயே இருந்து ஜாதியை ஒழிக்க நீங்கள் என்னென்ன வழிகளையெல்லாம் சொல்லி இருக்கின்றீர்களோ அந்த வழிகளையும் சேர்த்து என்னுடைய கொள்கைளையும் இணைத்து ஜாதி ஒழிப்பிற்காகப் பாடுபடுகிறேன் என்று தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டார் பெரியார்.
அதனைப் புரிந்துகொள்ளாத சிலபேர்; இந்துமதம் வேண்டாம் என்ற பெரியார் ஏன் இந்த மதத்தை விட்டு மாறவில்லை என்ற பொங்குகிறார்கள்.

சனாதனவாதிகள் பொங்குவதில் பொருள் உண்டு. ஏனெனில் இந்த ஆள் இங்கேயே இருந்துகொண்டு நம்முடைய ஆதிக்கத்தையும் நம்முடைய வண்டவாளங்களையும் பித்தலாட்டங்களையும் தோலுறித்து நம்முடைய மதத்தை ஒழித்துக் கட்டி நாம் உழைக்காமல் உண்டுகொளுக்க உதவிடும் நம் மதத்தை ஒழித்துக் கட்டி நம் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறாரேää இவர் மதம் மாறிவிட்டால் நமக்குத் தொல்லை ஒழியுமே என்று கருதுகிற பார்ப்பன சனாதனவாதிகள் எண்ணினால் அதில் பொருளுண்டு.

ஆனால் தலித்தியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் பெரியார் மதம் மாறாததை ஒரு பெரிய குறையாகப் பேசுகிறார்களே? அதன் பொருள் என்ன?

இந்தப் பார்ப்பன சனாதனவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் காலகாலமாக அப்படியே கிடக்க வேண்டும். அவர்கள் எக்கெடு கெட்டுப் போனால் நமக்கு என்ன என்கிற பொறுப்பற்ற போக்கு என்பதைவிட பார்ப்பன எதிரியாக இருந்த பெரியாரைக் குறை கூறுவதன் மூலம் பார்ப்பன ஆதரவாளர்களாக மாறி பார்ப்பனர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதுதானே இதன் பொருள்? இதில் ஏதாவது மாற்றுக் கருத்து இருக் முடியுமா?

தன்னுடைய மக்களின் இழிவு நீங்க வேண்டும் என்பதற்காக மதம் மாறிய அம்பேத்கரை பெரியாரியவாதிகள் எந்த இடத்திலும் குறை சொல்லாதபோது
அனைத்து மக்களுடைய இழிவையும் போக்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளெல்லாம் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்ட நிலையிலும் இந்த மக்களின் சூத்திரப்பட்டத்தை ஒழிக்க தன் மூத்திரப்பையைக் கையில் பிடித்துக் கொண்டு பாடுபட்ட தந்தையை
தலித்தியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் குறை சொல்வதன் பொருள் என்னவாக இருக்க முடியும்?

அம்பேத்கருடைய உண்மையான கொள்கையை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அல்லது புரிந்துகொண்டும் புரியாதது மாதிரி நடிப்பதன் மூலம் பார்ப்பனர்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதுதானே இதன் பொருள்? சிந்திப்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக