திங்கள், 17 அக்டோபர், 2016

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது அறியாமையா? அகம்பாவமா?பரபரப்பான பட்டிமன்றம்

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது அறியாமையா? அகம்பாவமா?

    காலுக்குச் செருப்பும் தோளுக்குத் துண்டும் போட உரிமைபெற்றுத் தந்த திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்த இன்று புதிதாக முளைத்துள்ள தமிழ்த் தேசியவாதிகள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறிவருகின்றனர். திராவிடத்தால் வீழ்ந்தோமா? வாழ்ந்தோமா?

இதோ சில உதாரணங்கள்:          தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக வைத்திருந்த விதி 1925ல் திராவிட இயக்கத்தால் நீக்கப்பட்டது. அந்த விதி நீக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று எந்தத் தமிழனாவது மருத்துவராகி இருக்க முடியுமா?         

பேருந்துகளில் ஏற பஞ்சமர்களுக்கு அனுமதி இல்லை என்று பேருந்துக் கட்டணச்சீட்டுக்களில் அச்சடிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றி பஞ்சமர்களை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை என்றால் பேருந்து உரிமம் ரத்து செய்யப்படும் என்று முதல் சுயமரியாதை இயக்க மாநாட்டின் தலைவர் சவுந்திரபாண்டியன் அவர்கள் மாவட்ட ஆட்சிமன்றக்குழுத் தலைவராக இருந்தபோது உத்தரவிட்டதன் அடிப்படையில்தான் தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்தில் ஏறவே அனுமதிக்கப்பட்டார்கள் என்ற வரலாறு இந்த திடீர்த் தமிழ்த்தேசியவாதிகளுக்குத் தெரியுமா?                

 தாழ்த்தப்பட்ட பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்டது நீதிக்கட்சி அரசாங்கம் என்ற வரலாறு இந்த தமிழ்த்தேசிய வீரர்களுக்குத் தெரியுமா?                   

  1927ல் டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை கொண்டுவந்த வகுப்புவாரி உரிமை (இடஒதுக்கீடு) இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழு உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து தந்தை பெரியார் கிளர்ச்சி செய்ததன் அடிப்படையில்தான் இந்திய அரசியல் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டது. அதன் காரணமாகத்தான் இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்ற வரலாறு இவர்களுக்குத் தெரியுமா?   

1952ல் ஆட்சிக்கு வந்த இராஜாஜி மனுதர்மத்தின்படி சூத்திரனுக்கு கல்வி தேவையில்லை@ அதனால் நாட்டில் இவ்வளவு பள்ளிகள் தேவையில்லை என்று கருதி அன்றைக்கு இருந்த 6000 பள்ளிகளை மூடியதுடன் அவனவன் அப்பன் தொழிலைத்தான் மகனும் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார் என்பதும் அதனை எதிர்த்து தந்தை பெரியார் போராடியதால்தான் இராஜாஜி பதவியை விட்டே ஓடினார் என்பதும் பின்னர் தந்தை பெரியாரின் ஆதரவுடன் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராசர் ஏராளமான பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையை பெருக்கெடுத்து ஓடச்செய்ததன் வாயிலாகத்தான் இன்று தமிழர் அனைவரும் கல்விகற்று உயர் பதவிகளும் பெற முடிந்தது என்ற வரலாறு இவர்களுக்குத் தெரியுமா?  

இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதையே குறியாகக் கொண்ட பார்ப்பனர்கள் தமிழகத்தில் இருந்து வந்த 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்குக் குந்தகம் விளைவித்த நிலையில் 31(சி) என்ற சட்டத்தை எழுதிக்கொடுத்து அதனை பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் பெற்று யாராலும் கேள்வி கேட்க முடியாதபடி அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் பாதுகாப்பாக வைக்கக் காரணமாக இருந்தது திராவிடர் கழகமும் தமிழர் தலைவர் வீரமணியும்தான் என்று தற்கால வரலாறுகூடத் தெரியாத ஞானசூன்யங்கள்தான் திராவிட இயக்கத்தால் வீழ்ந்தோம் என்று உளறிக்கொட்டி வருகிறார்கள்.

இது அறியாமையா? அகம்பாவமா? பரபரப்பான பட்டிமன்றம் திருவெறும்ப10ரில் இன்று (11-06-2012) மாலை நடைபெற இருக்கிறது. தி.க. பொதுச்செயலாளர் மானமிகு அறிவுக்கரசு அவர்கள் நடுவராக இருக்க அறிஞர் பெருமக்கள் வாதிட இருக்கிறார்கள். தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்ற உள்ளார். அனைவரும் வாரீர்! உண்மை வரலாற்றைத் தெரிந்துகொள்வீர்!!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக