வியாழன், 20 அக்டோபர், 2016

ஏன் கிறிஸ்துமசுக்கும் ரம்ஜானுக்கும் வாழ்த்துச் சொல்லும் தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதில்லை


 ஏன் கிறிஸ்துமசுக்கும் ரம்ஜானுக்கும் வாழ்த்துச் சொல்லும் தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதில்லை என்று சில அறிவுஜீவிகள் இன்று மிக மிக சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள்.

முதலில் தீபாவளின்னா என்னான்னு இந்த அறிவுஜீவிகள் சொன்னாங்கன்னா நல்லா இருக்கும். அசுரனை கடவுள் அவதாரம் எடுத்து அழித்த நாள் அப்படீங்கிறாங்க. சரி, அசுரன் னா யாரு? வரலாற்றில் அவர்கள் எப்பொழுது வாழ்ந்தார்கள்? அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.
அசுரன் என்று எவனும் இருந்ததில்லை. தேவர் என்று எவனும் இருந்ததில்லை. சுராபானம் குடித்தவர்களை வேதத்தில் சுரர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சுரா பானம் குடிக்காதவன் அசுரன். எப்படி நீதிக்கு எதிர்ப்பதம் அநீதியோ, தர்மத்திற்கு எதிர்ப்பதம் அதர்மமோ, நியாயத்திற்கு எதிர்ப்பதம் அநியாயமோ அதுபோல சுரன் என்பதற்கு எதிர்ப் பதம்தான் அசுரன்.
இன்றைக்கும் குடிகாரர்கள் பலபேர் சேர்ந்துகொண்டு குடிக்காதவனை நீ எல்லாம் எதுக்கு உயிர் வாழுறே? என்று கேட்கிறான்.

சினிமாவில் ஜோக் கூட உண்டு. அது போல வேத காலத்திலும் குடிக்காதவனை குடித்தவன் இழிவாகப் பேசிய சொல்லே அசுரன் என்பதாகும்.
சரி, இந்த சுரா பானம் குடித்தவர்கள் யார் என்றால் தேவர்கள, ஆரியர்கள் என்கிறது வரலாறு. அவர்கள் வடநாட்டில் இருந்தவர்கள். அவர்கள் தென்னாட்டிற்கு வந்து அவர்களது கலாச்சாரமான சுரா பானத்தை அறிமுகம் செய்தபோது இங்கிருந்த திராவிடர்கள் அதனை எதிர்த்தார்கள். குடிக்க யாரையும் அனுமதிக்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த ஆரியர்கள் நயவஞ்சகமாக திராவிடர்களை ஒழித்து விட்டு கடவுளே அவதாரம் எடுத்து இந்த அசுரனை ஒழித்து விட்டார் என்று கதை கட்டி விட்டார்கள். அப்படி ஒழித்துக் கட்டியதன் மூலம் தங்கள் கலாச்சாரமான வேதகலாச்சாரத்தை இங்கே புகுத்தி வருணாசிரமத்தை நிலைநாட்டினார்கள் ஆரியர்கள்.

தங்கள் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாத திராவிடர்களையெல்லாம் சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும் இழிவுபடுத்தியவர்கள் பார்ப்பனர்கள். சூத்திரன் என்றால் அவர்களது வேதமும் புராணமும் இதிகாசமும் என்ன சொல்லுதுன்னா, நீ வேசிமகன் என்கிறது.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரே புராணங்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போராக சித்தரிக்கப்பட்டுள்ளது. திராவிட இனத்தைச் சேர்ந்த ஒருவனை ஒழித்து விட்டு அந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவனையே அந்த நாளைக் கொண்டாடச் சொல்வது என்பது எவ்வளவு பெரிய பாசிசம்? ஏன் தீபாவளிக்கு கலைஞர் வாழ்த்துச் சொல்லவில்லை என்று கேட்பவர்கள் யாருக்காவது இதனை மறுக்கக் கூடிய துணிச்சல் உண்டா?

கிறிஸ்தவ மதமோ இஸ்லாம் மதமோ தன்  சொந்த மதத்துக் காரனை இழிஜாதி என்று ஒதுக்கி வைக்கவில்லை. ஆனால் உன் இந்து மதம் மட்டும்தான் இந்துக்களை சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும் இழிவுபடுத்துகிறது. அந்த இழிவை ஏற்றுக் கொள்ள தனது சுயமரியாதை இடம் தராததால்தான் தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்றதில்லை.

நாங்க அப்படித்தான் உங்களை இழிஜாதின்னு சொல்லுவோம், இழிவை ஏற்றுக் கொண்டுதான் ஆகனும்னு சொல்றீங்களா? நாங்க உயர் ஜாதியாத்தான் இன்னமும் இருப்போம். நீ;ங்க கீழ்ஜாதியாத்தான் இருக்கனும்னு சொல்றிங்களா? அந்த ஜாதியப் பாதுகாக்கறதுதான் எங்க வேலை. அதை ஒழிக்க நாங்க விடமாட்டோம். ஆனாலும் நீங்க அதை ஏத்துக்கிட்டுத்தான் ஆகனும்னு சொல்றீங்களா?
பிராமணன், சூத்திரன், பார்ப்பான், பறையன் என்கிற பாகுபாட்டை ஒழிக்க நினைக்கிற நாங்க எப்படி அதனைப் பாதுகாக்கும் உங்களுடைய கலாச்சாரத்தை ஏத்துக்க முடியும்? ஏதோ ஒரு காலத்தில உங்க முன்னோர்கள் எங்களை இழிஜாதின்னு சொல்லி இருக்கலாம். இப்ப நீங்களாவது அதை மாத்த முயற்சிக்கக் கூடாதா? நாங்க உயர்ஜாதி இல்லை. நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். நமக்குள் ஏற்றத் தாழ்வு எதுவுமில்லை என்ற எப்பொழுது நீங்கள் ஒத்துக்கொண்டு உங்கள் பூணூலைத் தூக்கியெறிந்து விட்டு எங்களோடு சமமாக வருகிறீர்களோ அன்றுதான் உங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதுவரை உங்கள் பண்டிகை என்பது எங்களுக்கு நஞ்சே! அதனை ஒருபோதும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக