வியாழன், 13 அக்டோபர், 2016

ஜாதியை ஒழிப்பதற்கான ஒரு வழிதான் இட ஒதுக்கீடு


 ஜாதி ஒழிப்பைப் பற்றிப் பேசும்போதே உடனடியாகச் சொல்லும் கருத்து பள்ளிக்கூடத்தில் சேரும்போது ஜாதி என்னன்னு கேட்கிறத ஒழிச்சா ஜாதி ஒழிஞ்சிடும் சார். என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இது நியாயமானதுபோல் தோன்றும். இதில் சில அப்பாவித் தனமானவை. சில விசமத்தனமானவை. உண்மையிலேயே ஜாதியை ஒழிக்க விரும்புபவர்கள் இதுபோல் கூறமாட்டார்கள். ஏனெனில் பள்ளிகளில் ஜாதி என்ன என்று கேட்பது ஜாதியை வளர்ப்பதற்காக அல்ல. அது ஜாதியினால் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!

அதை எடுத்து விட்டால் மட்டும் ஜாதியை ஒழித்து விட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் ஜாதி பல்வேறு வடிவங்களில் பல்வேறு முறைகளில் கெட்டியாக உட்கார்ந்துகொண்டிருக்கிறது.

இப்படிச் சொல்லுகின்ற யாரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் வேறு ஜாதிகளில் திருமணம் செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் சம்மந்தம் வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். செவ்வாய் தோஷம் உள்ள பெண் என்று பல ஆண்டுகள் திருமணமே ஆகாவிட்டாலும் செவ்வாய் தோஷமுள்ள வேறு ஜாதி மாப்பிள்ளைக்குத் தங்கள் பெண்களைத் திருமணம் செய்துகொடுக்க மாட்டார்கள். அங்கே ஜாதகத்தை விட ஜாதிக்கே முக்கியத்துவம் தருவார்கள்.

தங்கள் வீட்டில் நடக்கும் திருமணம், புதுனைபுகுவிழா, காதணிவிழா, திதி, தெவசம்; எல்லாவற்றுக்கும் பார்ப்பனரை அழைத்தேதான் செய்ய வேண்டும் என்பார்கள். கோயில்களைக் கட்டி பார்ப்பானை மணியடிக்க வைத்தால்தான் அவர்களுக்கு நிம்மதி வரும். ஜாதிக்கொரு கடவுள், ஜாதிக்கென்று சாஸ்திரங்கள், சம்பிரதாயம், பழக்கவழக்கம் என்று அனைத்தையும் அப்படியே பாதுகாப்பார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றால் தாவிக்குதித்து அதனை எதிர்ப்பார்கள். புராணங்கள், இதிகாசங்கள், அனைத்திலும் பாதுகாக்கப்பட்டுள்ள ஜாதியைப்பற்றி மூச்சு விட மாட்டார்கள். கோவில்கள், திருவிழா, தேர் எல்லாம் ஜாதியைப் பாதுகாக்கவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான ஜாதிச்சண்டைகள் ஊர்த் திருவிழாக்களில்தான் நடந்து கொண்டிருக்கின்றன.
இவற்றால் எல்லாம் காப்பாற்றப்படாத ஜாதி, பள்ளியில் சான்றிதழில் போடப்படுவதால் மட்டும் காப்பாற்றப்படுகிறது என்பது அப்பட்டமான திசைதிருப்பல் அல்லவா?

மருத்துவமனைக்குச் சென்றவுடன் மருத்துவர் என்ன கேட்கிறார்? ~உங்களுக்கு என்ன வியாதி?| என்றுதானே! வியாதியை ஒழிக்க வேண்டுமானால் என்ன வியாதி? அது எதனால் வந்தது? என்று நோய்நாடி நோய் முதல் நாடித்தானே அதற்கு மருத்துவம் செய்ய முடியும்? ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் அந்த ஜாதியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் செய்வதுபோல் சில சிகிச்சை அளிக்க வேண்டாமா?

ஜாதி என்பது இன்று நேற்று ஏற்பட்டதா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்துவரும் சமுதாய நோய்தானே அது? அந்தப் பாதிப்புக்கு பரிகாரம் தேடுவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாட்டினால்தான் ஜாதி பாதுகாக்கப்படுவதாகச் சொல்வது அறியாமையா? அகங்காரமா? அல்லது அயோக்கியத்தனமா?    

ஜாதி அவரவர் செய்யக் கூடிய தொழிலினால்தான் முக்கியமாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஒரு செருப்புத்தைப்பவர் மகனைக் கூப்பிட்டு நீ செருப்புத் தைக்கப்போ என்று சொல்வதும், சலவைத் தொழிலாளியின் மகனை துணிவெளுக்கச் சொல்வதும்தான் ஜாதியைப் பாதுகாக்கும். அதனைத்தான் இராஜாஜி செய்தார். அதனைப் போராடி ஒழித்தார் பெரியார். செருப்புத் தைப்பவர் மகனை அழைத்து நல்ல கல்வி கொடுத்து அவனை கலெக்டராக்கும்போது அவரைப் பொறுத்த அளவில் ஜாதி ஒழிக்கப்படுகிறதா இல்லையா? தோட்டியின் மகனை டாக்டராக்கும்போதும், முடிதிருத்துபவர் மகனை ஜட்ஜ் ஆக்கும்போதும் ஜாதி ஒழிக்கப்படுகிறது.  இப்படி இந்த ஜாதி ஒழிந்துவிட்டால் தங்களுக்கு இந்த வேலைசெய்ய ஆள் இல்லாமல் போய்விடுவார்கள் என்பதால்தான் பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் இந்த இட ஒதுக்கீட்டிற்காகக் கேட்கப்படும் ஜாதியினால்தான் ஜாதி பாதுகாக்கப்படுகிறது என்று பித்தலாட்டமாகக் கூறுகின்றார்கள். உண்மையில் ஜாதியை ஒழிப்பதற்கான ஒரு வழிதான் இட ஒதுக்கீடு என்பதை அவர்கள் உணர வேண்டும். ஜாதியை ஒழிப்போம்! சமத்துவம் காப்போம்!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக