புதன், 12 அக்டோபர், 2016

இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா?

இப்பல்லாம் யார் சார் ஜாதி பாக்குறா?

சுதந்திரம் பெற்ற நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாக இருக்க முடியுமா? என்று கேட்டார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார். ஆனால் இன்று நாட்டில் நடைபெறுவது என்ன?
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருநாள் கொண்டச்சேரி என்ற கிராமத்தில் எண்பது வயது தலித் முதியவர் இறந்து போனார். அவரது பிணத்தை பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல ஆதிக்கசாதியினர் அனுமதிக்க மறுத்தனர். உயர்நீதிமன்ற ஆணை பெற்றுவந்த பின்னும் அந்த ஆணைக்குக் கீழ்ப்படிய அந்த ஊர் மக்கள் மறுத்தனர். அந்த ஆணையை அமுல்படுத்த வேண்டிய காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஆதிக்க சாதி மக்களுக்கு ஆதரவாகவும் நீதிமன்ற ஆணையை அமுல்படுத்தப் போராடிய தலித் மக்கள்மீது தடியடி நடத்தி வழக்கும் போட்டது.  இறந்துபோன முதியவரின் சடலத்தை வேறு பாதையில் தூக்கிச்சென்று காவல்துறையினரே அடக்கம் செய்தனர்.

சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் மனிதாபிமான அடிப்படையில் ஜாதி மத வேறுபாடின்றி உதவி செய்தனர். சரிதான். ஆனால் மாநகரெங்கும் டன் கணக்கில் குவிந்து கிடந்த குப்பையை அப்புறப்படுத்த மட்டும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தாழ்த்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்களை மிகக் குறைந்த கூலியில் அழைத்து வந்து பயன்படுத்தினர். அவர்களுக்கு அடிப்படை வசதிகூடச் செய்து தரவில்லை. தங்குவதற்கு சரியான ஏற்பாடு இல்லை. நல்ல உணவு இல்லை. துப்புரவுப் பணி செய்த ஒரு தோழர் விஷவாயு தாக்கி இறந்துபோனார்.

சென்னையில் தனியாருக்குச் சொந்தமான ஒரு உணவகத்தில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷவாயு தாக்கி இறந்துபோனார்கள்.
சந்திரமண்டலத்துக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் மனிதனைக் குடியமர்த்தலாமா? என்று யோசிக்கும் இந்தக் காலத்திலும் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை நிகழலாமா? கோயிலில் மணியடிக்கவும் மேளம் அடிக்கவும்கூட இயந்திரத்தை உபயோகப்படுத்தும் நிலையில் இந்த சாக்கடைகளை சுத்தம் செய்ய மட்டும் இன்னும் மனிதர்களைப் பயன்படுத்தலாமா?
ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பயின்ற அம்பேத்கர் மாணவர் சங்கத்தலைவராக இருந்த ஆராய்ச்சி மாணர் ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காரணம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ABVP க்கு எதிராக செயல்பட்டார் என்பதுதான்.

இந்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர் மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா. அவர் எழுதிய கடிதத்தை அடிப்படையாக வைத்து அந்த மாணவர் மிது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய மனிதவள அமைச்சர் ஸ்ருதிஇரானி அய்ந்து முறை கடிதம் எழுதினார். அதனால் அந்த மாணவர் ஆறு மாதத்திற்கு சஸ்பென்ட் செய்யப்பட்டார். விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனால் மனமுடைந்த அந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அந்தப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மீதும் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எல்லோரும் பெருமையாகப் பேசும் விசயம் “இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா” என்பதுதான். இதற்கெல்லாம் பெயர் என்னவாம்?

நான் பள்ளனை டாக்டராக்கினேன் அவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்துப்போனான். பறையனை எஞ்சினியராக்கினேன். அவன் கட்டிய எந்தப் பாலம் இடிந்துபோனது என்று பெருந்தலைவர் காமராசர் கேட்டு அறுபது ஆண்டுக்குமேல் ஆன பின்னும் அறிவு நாணயத்தோடு இதுவரை எவனும் பதில் சொன்னதில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டைக் கேலி செய்வது மட்டும் குறையவில்லை. பிச்சைக்காரன் என்ற படத்தில் ஒரு பாடலாம். அதில் “கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராகிறான். தப்புத் தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்” என்று ஒருவன் பாடியிருக்கிறான். எந்த டாக்டர் போட்ட ஊசியால் யார் செத்தார் என்று சொல்லாமல் இப்படிப் பிரச்சாரம் செய்வது அயோக்கியத்தனமல்லவா?
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இட ஒதுக்கீடு 69%; அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பிற்படுத்தப்பட்டோர் 30%. மிகவும் பிற்படுத்தப்பட்டோர்; 20%;. தாழ்த்தப்பட்டோர் 18மூ மலைவாழ் மக்களுக்கு 1%இதற்குக் காரணம் பெரியார் இயக்;கமே. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களால் 31(c) என்கின்ற சட்டப்பிரிவின்படி எழுதிக்கொடுக்கப்பட்டு அது தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று அது அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் செல்லாது என்று கூற வக்கற்ற நீதிமன்றம் அதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக