வியாழன், 20 அக்டோபர், 2016

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள  முக்கிய அறிக்கை வருமாறு.

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின் (Central Advisory Board of Education - CABE) 64 ஆம் கூட்டம் இம்மாதம் 25 ஆம் தேதியன்று டில்லியில் நடைபெறவிருக்கிறது.

இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதில் அய்யமில்லை. எதிர்கால நமது தலைமுறையை முடிவு செய்யும் முக்கிய கூட்டமாகும்.

தமிழ்நாடு அரசின்
நிலைப்பாடு என்ன?


தமிழ்நாடு அரசைப் பொருத்தவரையில் இதுவரை மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்தப் புதிய கல்வித் திட்டம் குறித்து திட்டவட்டமான கருத்தைத் தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது!

திராவிடர் கழகம் நடத்திய ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாட்டில் இந்தக் கல்வித் திட்டம் பல தளங்களில், பல மேடைகளில் சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் இதுகுறித்து கலந்தாய்வுக் கூட்டத்தையும் நடத்தியது (28.7.2016).

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், கல்வியாளர்களும், கல்வி நிறுவனங்களை நடத்துப வர்களும் பங்கேற்றுப் பயனுள்ள கருத்தினை வெளிப் படுத்தினர்.
தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில், மாணவர் களும், கல்வியாளர்களும் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர் (6.8.2016).
28.7.2016 அன்றுநடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது (8.8.2016). இவ்வார்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பெரும் அளவில் பங்கேற்றனர்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் சார்பாக சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் கருத்தரங்கமும், சென்னை விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன.

நவம்பர் 19 இல் அரக்கோணத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் இதற்காகவே இளைஞரணி, மாணவரணி மாநாடு நடத்தப்படவும் உள்ளது.
இவ்வளவு தொடர் நிகழ்ச்சிகள் நடக்கும் நிலையிலும், தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான, ஆபத்தான இந்தப் புதிய கல்விக் கொள்கைபற்றி கருத்தினைத் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே சட்டமன்றமும் நடைபெற்றுள்ளது. அதிலும் முதலமைச்சரோ, துறை அமைச்சரோ  எதையும் தெரிவிக்கவில்லை. இந்தியை ஏற்கமாட்டோம் என்ற ஒரு அறிவிப்போடு முடித்துக் கொள்ளப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை
என்ன சொல்லுகிறது?

1. இது ஒரு நவீன குலக்கல்வித் திட்டமே!

2. இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை உள்ளடக்கியது!

3. அய்ந்தாம் வகுப்புவரை தேர்வு முறையில்லை; அதற்குப் பின் தேர்வு உண்டு. அதில் இரண்டு முறைக்கு மேல் மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால், தொழில் பயிற்சிக்குச் செல்லவேண்டும். (அதாவது அதிகபட்சப் படிப்பே 5 ஆம் வகுப்புவரைதான்) 5 ஆம் வகுப்புவரை படித்தவன் தொழிலைக் கற்றுக்கொள்வது என்பது குலத்தொழிலைக் கற்றுக்கொள்ள மட்டுமே சாத்தியமாகும்!

4. உயர்கல்வி என்பது ஏழை - எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகும். அரசு உயர்கல்வியில் புதிய நிறுவனங் களைத் தொடங்காது.

5. மாநில அரசின் முடிவில் தலையிடுகிறது.

6. இந்தக் கல்வித் திட்டம் குறித்து நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது - நடுவர் மன்றம் மட்டும் அமைக்கப்படும்.
7. இத்திட்டம் கல்வியாளர்களைக் கொண்டு வகுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்.காரரான ஜெ.எஸ்.ராஜ்புத் என்பவர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

8. கல்வியைப் பன்னாட்டு மயமாக்கும் வர்த்தக்கத் தன்மை உடையது.

9. பதினான்கு  வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதமே இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், கல்வியை உலக மயமாக்கிடத் துடிப்பது விபரீதமான ஒன்றே!

10. மழலையர் பள்ளிமுதல் உயர்கல்வி வரை கல்வியின் அளவில் ஒரே மாதிரியான பாடத் திட்டமும் நிர்ணயிக்கப்படுமாம். இதன் பொருள் இந்தியாவின் பன்முகத்தன்மை, பண்பாடு, மொழி, தட்பவெப்பம் எல்லாம் தூக்கி எறியப்பட்டு, இந்தியா ஒரே நாடு எனும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை அரங்கேற்றப்படுகிறது.

இட ஒதுக்கீடுக்கும் ஆபத்து!
இந்தத் திட்டத்தால் இட ஒதுக்கீடு வரை பாதிப்புக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமையால் மருத்துவக் கல்லூரி - பொதுப் போட்டி யில்கூட தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர், கிராமப்புற மக்கள் கூட சிறப்பான இடங்களைப் பெற்றுள்ளனர். புதிய கல்வித் திட்டத்தில் திணிக்கப்படும் நுழைவுத் தேர்வுமூலம் இந்த நிலை வேரோடு முற்றிலும் துடைத்து எறியப்பட்டு விடும்.

திராவிட இயக்கப் பூமி இது

இந்தியாவிலேயே திராவிட இயக்கம் செம்மாந்து நிற்கும் தமிழ்நாடுதான் சமூகநீதிக்கான விளைச்சல் பூமி. மத்திய  அரசு அறிமுகப்படுத்தும் நவீன குலக்கல்வித் திட்டத்தை எதிர்ப்பதில் தந்தை பெரியார் பிறந்த, திராவிட இயக்கம் வேர்ப்பிடித்த தமிழ்நாடு தான் முன்னிலையில் நிற்கவேண்டும்.

50 சதவிகிதம் கொண்டு வந்தவர்
எம்.ஜி.ஆர்
.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படி உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு இப்பிரச் சினையில் கூடுதல் பொறுப்பு நிச்சயமாக உண்டு; ஆனாலும், இதுவரை இந்தக் கல்வித் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதிர்க்குரல் கொடுக்காதது ஏன்? ஏன்?

25 ஆம் தேதி கூட்டத்தில் கலந்துகொள்க!

இப்பொழுதுகூட கெட்டுப் போய்விடவில்லை. வரும் 25 ஆம் தேதியன்று (25.10.2016) டில்லியில் இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த மிக முக்கிய கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கல்வி அமைச்சரோ, முக்கிய அமைச்சரோ பங்கேற்கவில்லை. மாறாக துணை செயலாளர் நிலையில் உள்ளவர் பங்கேற்றுள்ளார்.

இந்த முறை அவ்வாறு செய்யாமல், கல்வி அமைச்சரோடு கல்வித் துறை செயலாளர் அளவில் உள்ளவர்கள் பங்கேற்று, மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ள கல்வித் திட்டத்தை முற்றாக நிராகரிக்கும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசுக்கான பொறுப்பு!

நீதிக்கட்சிக் காலத்திலிருந்து விதை ஊன்றப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் மண்ணின் சமூக நீதியைக் கட்டிக் காக்கும் பொறுப்பு - திராவிட இயக்கப் பாரம்பரியக் கட்சியின் ஆட்சிக்கு உண்டு என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறோம் - வலியுறுத்துகிறோம்.


கி.வீரமணி 
தலைவர்,  திராவிடர் கழகம்.


சென்னை
20.10.2016


Read more: http://www.viduthalai.in/headline/131523-2016-10-20-09-37-32.html#ixzz4NgqNyBmr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக