புதன், 30 நவம்பர், 2016

வெள்ளைக்காரன் வந்தபோது முப்பத்து நான்காயிரம் கப்பல்கள் ஓடியதாம். வெள்ளைக்காரன் இந் நாட்டைவிட்டுப் போனபோது 1400 கப்பல்கள் இருந்ததாம்.



ஆர்எஸ்எஸ் ஸின் சங்கமான பிஎம்எஸ் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17,2010 அன்று ஜமுக்காளத்தில் வடிகட்டி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டது.

வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இந்த நாட்டில் 70 சதவிகிதம் பேர் படித்திருந்ததாகவும் வங்காளத்தில் மட்டும் 12000 பள்ளிக்கூடங்கள் இருந்ததாகவும் வெள்ளைக்காரன் வந்தபிறகு படித்தவர் எண்ணிக்கை 7 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகவும் உலகமகாப் பொய்யை அவிழ்த்து விட்டார்கள்.

70 சதவிகிதம்பேர் படித்திருந்தார்கள் என்றால் யார் படித்தது? பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் படித்திருந்தானா? பார்ப்பனர் மட்டும் படித்திருந்தார்களா? என்று கேட்டோம். இதுவரை நாணயமான பதில் இல்லை.

அதேபோல 2012 செப்டம்பர் 17லிலும் இன்னொரு பொய்யைத் துணிச்சலாக அவிழ்த்துவிட்டுள்ளார்கள். அக்பர் இந்த நாட்டைக் கைப்பற்றியபோது நாற்பதாயிரம் வணிகக்கப்பல்கள் ஓடியதாம். வெள்ளைக்காரன் வந்தபோது முப்பத்து நான்காயிரம் கப்பல்கள் ஓடியதாம். வெள்ளைக்காரன் இந் நாட்டைவிட்டுப் போனபோது 1400 கப்பல்கள் இருந்ததாம்.

சரி, இருந்ததாகவே வைத்துக்கொள்வோம். அந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள் யார்?   வணிகக் கப்பல் என்றால் வைசியர்கள்தான் அதில் பயணம் செய்திருக்க முடியும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு வைசியர். அவர் பாரிஸ்டர் பட்டப் படிப்புக்காக இலண்டன் செல்ல முயற்சிக்கிறார்.

அப்பொழுது அவருடைய  ஜாதிக்காரர்கள் நம்முடைய இந்து சாஸ்திரப்படிää வைசியன் கடல் தாண்டிப் போகக்கூடாது என்று அவரைத் தடுக்கிறார்கள். அதையும் மீறி அவர் இலண்டன் செல்கிறார். அதனால் அவரை ஜாதியை விட்டே நீக்கி வைக்கிறார்கள்.

இதனை அண்ணல் காந்தியடிகள் தனது சுயசரிதையான சத்தியசோதனையில் தெரிவிக்கிறார்.

ஆக வைசியர் அக்கப்பலில் பயணம் செய்திருக்க வாய்ப்பு இல்லை.
அடுத்து பிராமணர்கள் இக்கப்பலில் சென்றார்களா என்று ஆய்வு செய்தோமானால் அதற்கும் வாய்ப்பு இல்லை. நம்முடைய காஞ்சி ஜெயேந்திர சரசுவதி, சங்கரராமன் என்ற வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளரை ஏன் போட்டுத் தள்ளினார் தெரியுமா?

சங்கராச்சாரி அப்பொழுது வெளிநாடு போக முயற்சித்தார். இந்து சாஸ்திரங்களின்படி பிராமணர் கடல் தாண்டிப் போகக் கூடாது என்று இருக்கிறது. எனவே, சங்கராச்சாரி வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று தடுத்தார். சங்கரராமனை சங்கராச்சாரி போட்டுத்தள்ளியதற்கு இதுவும் ஒரு காரணம்.

மண்ணுருண்டை மாளவியா என்று ஒருவர் இருந்தார். அவருக்கு அப்பெயர் ஏன் வந்தது? அவர் ஒரு பிராமணர். பிராமணர் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் இவர் வெளிநாடு செல்ல வேண்டும். அதற்கு ஒரு உபாயம் கண்டுபிடித்தார். அவர் செல்லும்போது இந்திய மண்ணை ஒரு பிடி உருண்டையாக (பிள்ளையாரைப்போல்) பிடித்து தன்னுடன் எடுத்துச் செல்வார். அதாவது அவர் எப்போதும் இந்திய மண்ணில்தான் இருக்கிறாராம். இது அவருடைய கண்டு பிடிப்பு. ஆக பிராமணரும் அக்கப்பலில் பயணித்திருக்க வாய்ப்பில்லை.

எஞ்சியிருப்பது சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும்தான். இந்த நாட்டிற்கு வெள்ளைக் காரன் வந்து பஸ்ஸை ஓட்டினான். பஸ் முதலாளிகள் இந்தியர்கள். அந்த பஸ்ஸில் ஏறுவதற்கு பஞ்சமர்களுக்கு அனுமதியில்லை என்று பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் அச்சடித்திருந்தான். பெரியாரின் தொண்டரான WPA சவுந்திரபாண்டியநாடார் இராமநாதபும் ஆட்சிமன்றக்குழுத் தலைவராக இருந்தபோது அவ்வாறு பஸ் டிக்கட்டில் அச்சடித்திருப்பதை எடுக்கவில்லையென்றால் பஸ் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்று அறிவித்த பிறகுதான் அது நீக்கப்பட்டது என்பது தொன்னூறு ஆண்டுக்கு முன்பு உள்ள வரலாறு.

ஆக பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் பஞ்சமன் யாருமே பயணம் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிறது. யார் அந்த 40000 கப்பலில் பயணம் செய்தது? பொய் சொல்லவும் ஒரு துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் பிஎம்எஸ் காரர்களுக்கு நிறையவே உள்ளது. அதற்காக அவர்களைப் பாராட்டி புருடா மன்னர் சங்கம் என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்கலாம்.
இவண் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக