திங்கள், 14 நவம்பர், 2016

ஜனவரி 30 காந்தி நினைவுநாளை மதவெறி எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்.



குஜராத்தில் தேனாறும் பாலாறும் ஓடுகிறது. அங்கே மட்டும்தான் வளர்ச்சி. மற்ற இடமெல்லாம் தளர்ச்சி. அந்த வளர்ச்சிக்குக் காரணம் நம் மோடிஜி. அதே வளர்ச்சி நமக்கும் வரணும்னா பாஜகவுக்கு ஓட்டுப் போடுங்கஜி! என்று எல்லோரது ஓட்டையும் பெற்று அந்த குஜராத் நாயகன் அரியணை அமர்ந்து இருநூறு நாட்களைத் தாண்டி விட்டது. அவர்கள் சொன்ன வளர்ச்சி எங்கே எங்கே என்று தேடினால் நமக்கு ஏற்படுவது மனத்தளர்ச்சி.

தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றைச் செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் சொல்லாதவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க முனைந்துள்ளார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளின் கைப்பாவையாக மோடி அவர்கள் மாறி ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றி வருகிறார். பதவி ஏற்ற நாளிலிருந்து அவரது நடவடிக்கை வெளிநாட்டுப் பயணமே!

வெளிநாட்டுக்குச் சென்று நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு ஏதாவது ஒப்பந்தம் போட்டாரா என்றால் அதானி குழுமத்திற்கு ஆறாயிரம் கோடி கடன் கொடுத்து ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத்துக்கு ஒப்பந்தம் போடுகிறார்.

செத்துப்போன சமஸ்கிருதத்தை அரியணையில் ஏற்ற மோடி அரசு படாதபாடு படுகிறது. காந்தியாரைக் கொலை செய்ய கோட்ஷேவுக்கு பயன்பட்ட கொலை நூலான பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிறார்கள்.
இராமனை ஏற்றுக் கொண்டவர்கள்தான் முறையாகப் பிறந்தவர்கள். ஏற்காதவர்கள் எல்லாம் முறைகேடாகப் பிறந்தவர்கள் என்று அவர்களது எம்பிக்கள் பேசுகிறார்கள்.

மதமாற்றத் தடைச்சட்டம் வேண்டும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினால் அய்ந்து இலட்சம். கிறிஸ்தவ மதத்திலிருந்து மாறினால் மூன்று லட்சம் என்று அறிவிக்கின்றார்கள்.

காந்தியைக் கொன்ற கோட்ஷேவுக்கு சிலை வைக்க இந்துமகாசபா முயல்கிறது. கோட்ஷே காந்தியைக் கொன்றதற்குப் பதிலாக நேருவைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் ஏடு எழுதுகிறது.

காந்தியைக் கொல்லக் காரணமாக இருந்த இந்துமகாசபாவைத் தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்கு பாரதரத்னா விருது கொடுக்கிறது.

காந்தி பிறந்தநாளின் முக்கியத்துவத்தைக் குறைக்க அன்று எல்லோரும் அலுவலகம் வரவேண்டும் என்று உத்தரவிடுகிறது.

கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 அன்று பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரச்சொல்லி வாஜ்பேய் பிறந்தநாள் போட்டி நடத்துகிறது.

ஒரு எம்பி சொல்கிறார் ~ஒவ்வொரு இந்துவும் குறைந்தது நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். இன்னொரு சாமியார் சொல்கிறார் ~இல்லையில்லைää ஒவ்வொரு இந்துவும் பத்துப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்.
எங்கும் மதவெறி! எதிலும் மதவெறி!!

அமைதிக்காடாக இருக்கும் நாட்டை அமளிக்காடாக மாற்றும் முயற்சியில் சங்பரிவார் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
எம்பிக்களின் பேச்சுக்களை நியாயப்படுத்த முடியாத பிஜேபி அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று மழுப்புகிறது. எது அவர்களின் தனிப்பட்ட கருத்து? தனிப்பட்ட கருத்துக்களைச் சொல்வதற்கா மக்கள் ஓட்டுப் போட்டார்கள்? கட்டுப்பாடுள்ள கட்சியென்று பாஜக சங்பரிவார் செய்த கட்டுப்பாடான பிரச்சாரத்திற்கு மயங்கி ஓட்டுப் போட்டார்கள்.


ஆர்எஸ்எஸ் ஸின் மறைமுகத் திட்டங்களெல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றது. இன்னும் கொஞ்சநாளில் மனுதர்மம் சட்டம் ஆக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளிவரலாம். அப்படி வந்தால் உழைக்கும் மக்களாகிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கதி என்னவாகும்?

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் நாம் பெற்ற வாய்ப்புக்கள் எல்லாம் தட்டிப் பறிக்கப்படும் ஆபத்து உள்ளது. இந்த ஆபத்திலிருந்து நாட்டையும் மக்களையும் காக்க மதவெறி எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைவது அவசியம். ஜனவரி 30 காந்தி நினைவுநாளை மதவெறி எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்.

ஜனவரி 30ல் திராவிடர் கழகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள்ஆதித்தமிழர் பேரவை அனைத்தும் இணைந்து மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் ஒத்த கருத்துள்ள மற்ற அமைப்புக்களும் கலந்துகொண்டு ஆதரவு தர அன்புடன் வேண்டுகிறோம்.
மதவெறியை மாய்ப்போம்! மனித நேயம் காப்போம்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக