செவ்வாய், 29 நவம்பர், 2016

ஆயுதபூஜை உண்மையிலேயே தொழிலையும் தொழிலாளியையும் பெருமைப்படுத்துகிறதா? இழிவுபடுத்துகிறதா?


நம்முடைய அர்த்தமுள்ள(?) இந்துமதத்தில் தொழிலாளர்கள் அனைவரும் சூத்திரர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சூத்திரர் என்றால் மனுதர்மத்தில் விபச்சாரி மகன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மனுதர்மம்தான் இந்தியாவில் எந்த அரசன் ஆண்டாலும் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாக நம்முடைய நாட்டில் சட்டமாக இருந்தது.

இந்த நாட்டை வெள்ளைக்காரன் கைப்பற்றியதாலும் அண்ணல் அம்பேத்கர் சட்டத்தை எழுதியதாலும் மனுதர்மம் இன்று சட்டமாக இல்லை. என்றாலும் இந்துலா விற்கு அந்த மனுததர்மம்தான் அடிப்படையாக இன்றும் உள்ளது. அந்த மனுதர்மம் குஜராத்தில் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை அகற்றிவிட்டு  மனுதர்மத்தை இந்தியா முழுமைக்கும் சட்டமாக ஆக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல் முயன்று வருகிறது.

அந்த மனுதர்மத்தின்படிதான் நமது நாட்டில் எந்தத் தொழில் வளமும் பெருகவில்லை.

ஜாதிவாரியாகத் தொழில்களும் தொழிலாளர்களும் பிரிக்கப்பட்டு ஒருவனுக்கு அந்தத் தொழில் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தனது தந்தையின் தொழிலையே செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டான். விருப்பமில்லாத தொழிலை எவனாவது ஈடுபாட்டுடன் செய்ய முடியுமா?

தந்தை என்ன தொழில் செய்தாரோ அதே தொழிலைச் செய்யும் மகன் தந்தை பயன்படுத்திய அதே கருவியினையே பயன்படுத்தினான். தந்தை எந்த உளியினால் தச்சு வேலை செய்தாரோ அதே உளியினால்தான் மகனும் தச்சு வேலை செய்தான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மாதிரியான கலப்பையை நம்முடைய மக்கள் பயன்படுத்தினார்களோ அதே மாதிரி கலப்பையைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் பயன்படுத்தினார்களே தவிர இயந்திரக் கலப்பை என்ற ஒன்றே அவசியமில்லாமல் போய் விட்டது.

அதே போலத்தான் ஒவ்வொரு தொழிலும் நடந்தது. அதனால் புதிய கருவிகள் அவனுக்குத் தேவைப்படவில்லை. தேவைதான் புதிய கண்டுபிடிப்புக்களின் தாய் என்பார்கள். அந்தத் தேவை இல்லாததால் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அவசியம் இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் நமது நாட்டில் எந்த விதமான இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிய தொழில்வளமும் பெருகவில்லை.
அத்துடன் நமது நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. ஆனால் அந்த விவசாயத்தைப் பாவமான தொழில் எனகிறது மனுதர்மம்.

“சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில் இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும்ää பூமியையும் பூமியிலுண்டான பலபல ஜந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?” என்று மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 84வது சுலோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதனால்தான் பார்ப்பான் நிலத்துக்குச் சொந்தக் காரனாக இருந்தாலும் ஏர்பிடித்து உழுகின்ற தொழிலைச் செய்ய மாட்டான். அப்படியானால் புவ்வாவுக்கு பார்ப்பான் என்ன செய்ய வேண்டுமாம்! அதையும் மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 112 இவ்வாறு சொல்கிறது

“பிராமணன் வேறு ஒன்றினாலும் உயிர் வாழ முடியாத போது சிலத்தினாலாவது அல்லது உஞ்சத்தினாலாவது ஜீவிக்கலாம். பிச்சை வாங்குவதைவிட சிலம் மேலானது. அதைவிட உஞ்சம் மேலானது” என்கிறது அந்த மனுதர்மம்

சிலம் என்றால் என்ன? உஞ்சம் என்றால் என்ன?

வயலில் சிந்தின கதிர் நெல்லைப் பொறுக்குவது சிலம். சிந்தின தனி நெல்லைப் பொறுக்குவது உஞ்சம். (இதனால்தான் உஞ்சிவிருத்திப் பார்ப்பான் என்று சொல்கிறார்களோ)

இப்படிப் பொறுக்கித் தின்றவர்களால் உருவாக்கப்பட்டதுதான் மனுதர்மம். இந்த மனுதர்மத்தைச் சட்டமாக்கத் துடிப்பவர்கள்தான் தொழிலாளிக்கும் தொழிலுக்கும் மரியாதை தருவதாகக் கூறி ஆயுத பூஜை என்று கொண்டாடச் சொல்கிறார்கள். இந்த ஆயுதபூஜை உண்மையிலேயே தொழிலையும் தொழிலாளியையும் பெருமைப்படுத்துகிறதா? இழிவுபடுத்துகிறதா? ஆயுதபூஜை தேவையா? சிந்திப்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக