புதன், 30 நவம்பர், 2016

தற்காலிக ஊழியர் என்ற கொள்கையை முறியடிக்காமல் RECRUITING POLICY யை மாற்றாமல் என்னதான் தொழிலாளர்களுக்குக் குரல் கொடுப்பதாக நடித்தாலும் அது நிர்வாகத்துக்கு சாதகமாகத்தான் முடியும்.



நம் நிறுவனத்தில்  பணிநியமனத்தில் மேற்பார்வையாளர்களும் பொறியாளர்களும் நிரந்தரமாக எடுக்கப்படுகிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் மட்டும் தற்காலிகம் என்று எடுக்கப் படுகிறார்கள். முதல் பேட்ஜ் ஆர்டிசான் எடுத்தபொழுது அதற்கான அறிவிப்பில் ஓராண்டு தற்காலிகத்துக்ப் பின் அவர்கள் நிரந்தரம்
செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் பணி ஆணை வழங்கியபோது தான் கூறியதற்கு மாறாக 2.5 ஆண்டுகளுக்குப்பின் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று ஆணை வழங்கியது. இது மிகப்பெரிய நாணயக் கேடாகும். எந்த ஒரு தனியார் நிறுவனம்கூடச் செய்யத் துணியாத காரியத்தை எந்த விதக் கூச்சநாச்சமின்றி எந்தவித சட்டவிதியையும் மதிக்காமல் அதனைச் செய்தது பொதுத்துறை நிறுவனமான பெல் நிர்வாகம்.

அதற்கு அரசு வழிகாட்டல் எதுவும் அப்போது இல்லை. நிறுவனத்தின் மனிதவளக் கொள்கையிலும் அத்திட்டம் இல்லை.Government guideline, Company guideline, HR Manual, Recruiting policy எதுவுமே இல்லாமல் மிகவும் துணிச்சலாக இந்த சட்டவிரோதச் செயலைச் செய்தது நிர்வாகம். அதற்குப் பிறகு எடுத்த இரண்டாவது பேட்ஜ் ஆர்டிசான் மூன்றாவது நான்காவது என்று தொடர்ந்து அப்படித்தான் செயல்பட்டது நிர்வாகம். 2007ல்தான் நிர்வாகம் HR MANUAL ல்  RECRUITING POLICYயை மாற்றுகிறது.

இதற்கு என்ன காரணம்? நிர்வாகத்தில் ஆர்எஸ்எஸ் காரர்களின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. தொழிலாளர்களிடம் கூலிகொடுத்தோ கூலிகொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்ற  மனுதர்ம மனப்பான்மையின் அடிப்படையில் அந்த அதிகாரிகள் அதனை செயல்படுத்தியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பிஎம்எஸ் உறுதுணையாக இருக்கும் என்பதால்தான் எப்படியாவது பிஎம்எஸ்ஸை வளர்த்துவிட வேண்டும் என்று நிர்வாகம் பல சலுகைகளை பிஎம்எஸ்சுக்கு வழங்கி வருகிறது. இந்தத் தற்காலிக ஊழியர் என்ற கொள்கையை முறியடிக்காமல்  RECRUITING POLICY யை மாற்றாமல் என்னதான் தொழிலாளர்களுக்குக் குரல் கொடுப்பதாக நடித்தாலும் அது நிர்வாகத்துக்கு சாதகமாகத்தான் முடியும்.

பொறியாளரும் மேற்பார்வையாளரும் நிரந்தரமாக எடுக்கப்படும்போது ஆர்டிசான் மட்டும் ஏன் தற்காலிகமாக எடுக்கப்படவேண்டும் என்ற கேள்வியை பிஎம்எஸ்ஸால் எழுப்ப முடியுமா? அந்தக் கேள்வியை எழுப்பாமல் தொழிலாளர்களுக்காகக் குரல்கொடுப்பது என்பது ஏமாற்று வேலை. இங்கு பிஎம்எஸ் ஆர்டிசானுக்குக் குரல் கொடுப்பதாக நடித்து வருவதெல்லாம் அடுத்த தேர்தலில் எப்படியாவது இழந்த தனது அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்காகவே. ஆர்டிசானுக்கு 11000 என்பதும் 2.5 இன்கிரிமென்ட் என்பதும், வழக்கு, ஆணையம் என்பதெல்லாம் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு மேலும் வலுவூட்டுவதாகத்தான் இருக்கிறது.

அதனை நம்பி தொழிலாளர்கள் ஏமாந்தால் அவர்கள் தலையில் அவர்களே மண்ணைப் போட்டுக்கொள்கிற கதையாகத்தான் முடியும். ஏனென்றால் பிஎம்எஸ்எஸின் தொழிலாளர் கொள்கை என்பது தொழிலாளர்கள் என்றும் அடிமைகள் என்பதுதான். தன்னுடைய  எஜமானர்களின் நன்மைக்காக தொழிலாளர்கள் உழைக்க வேண்டும் என்பதுதான்.

“இந்த வேலை கடவுள் கொடுத்தார். அதற்காக எவ்வளவு கூலி கிடைக்க வேண்டுமோ அதனை கடவுள் கொடுப்பார். அதனை மனமுவந்து பெற்றுக்கொண்டு தனது சமுதாயக் கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர்களது நிறுவனர் தெங்கடிஜி அவர்கள் WHY BMS?’ என்ற நூலில் கூறியிருக்கிறார்.
இந்தக் காரணத்தினால்தான் 1996ல் பங்குபெறும் சங்கமாக இருந்தபோது ஊதிய மாற்றத்துக்காக நடைபெற்ற கூட்டுக்குழுவில் சம்பளம் எவ்வளவு என்பதை நாம் முடிவு செய்து கோரிக்கையாக நிர்வாகத்துக்கு வைக்க வேண்டாம். ஊதிய மாற்றத்தை விரைந்து முடி என்று மாத்திரம் கோரிக்கை வைப்போம் என்று பிஎம்எஸ் வாதாடியது.

நிர்வாகம் எவ்வளவு தருகிறதோ அதனை கொஞ்சம் கூட்டித்தரச் சொல்லி கெஞ்சிக்கிளறி அதிகம் பெறலாம். நிர்வாகத்திற்கு இவ்வளவுதான் தரவேண்டும் என்று கோரிக்கை எல்லாம் வைக்க வேண்டாம் என்பதுதான் அதன் நோக்கம்.  தொழிலாளி தனக்கு எது தேவை என்பதை வாதாடிப் போராடிப் பெறாமல் கெஞ்சிப்பெற வேண்டும் என்பதுதான் சரியான கொள்கையா?

அப்படிக் கெஞ்சுகின்ற சங்கம் தொழிலாளிக்கு என்ன உரிமையைப் பெற்றுத்தரும்? அதேபோன்று பிஎம்எஸ் பங்குபெறும் சங்கமாக இருந்தபோதுதான் அய்ந்து ஆண்டுகளாக இருந்த ஊதிய ஒப்பந்தம் பத்து ஆண்டுகளாக ஆக்கப்பட்டது, இன்னும் பல்வேறு சலுகைகள் பறிபோயின என்பதையும் மறவாதீர்! சிந்திப்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக